புழல் சிறைக்கு செல்லும் நிலையில் ஓடும் போலீஸ் வேனில் கஞ்சா அளிக்க முயற்சி: ஒருவர் கைது

சென்னை: அம்பத்தூர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணை முடிந்து மீண்டும் புழல் சிறைக்கு குற்றவாளிகளை ஏற்றிக் கொண்டு போலீஸ் வேன்  ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், 15 குற்றவாளிகளும், பாதுகாப்பு பணியில் இருந்த 19 போலீசாரும் இருந்தனர். போலீஸ் வேன் சென்னை- திருவள்ளூர் சாலையில் வேகமாக சென்றுக் கொண்டிருந்தது. அப்போது இளைஞர் ஒருவர் வேன் செல்லும் வேகத்துக்கு இணையாக பல கிலோ மீட்டர் தூரம் பைக்கில் துரத்தி வந்துள்ளார். மேலும், போலீஸ் வேனில் இருந்த ஒரு கைதியை நோக்கி சிக்னல் கொடுத்துள்ளார்.

இதனை கவனித்த வேனில் பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார், வேனை சாலையிலேயே நிறுத்தி, பைக்கில் வந்த ஆசாமியை நிறுத்தி விசாரித்தனர். அதில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் பார்த்திபன் (23) என்பதும், அவர் அம்பத்தூர் காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. பின்னர் போலீசார் அவன் பைக் மற்றும் உடலை சோதித்தபோது, பார்த்திபனிடம் 15 கிராம் எடையுள்ள 4 கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் கூறியதாக போலீசார் கூறியதாவது: எனக்கு சிறைக்கு செல்லும் கைதி யார் என்று தெரியாது. என்னிடம் ஒருவர் கஞ்சா பொட்டலங்களை கொடுத்து போலீஸ் வேனில் தூக்கி போட சொன்னார். மேலும், கஞ்சா பொட்டலங்களுடன் ஒரு கல்லை கட்டி வேனில் உள்ள ஓட்டைக்குள் தூக்கி போட வேண்டும் என்றார். அதற்க பல முறை முயற்சித்தேன். அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: