வீட்டு மனை வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி ஆசிட் குடித்து பெண் தற்கொலை முயற்சி: வழக்கறிஞருக்கு போலீஸ் வலை

துரைப்பாக்கம்: திருவான்மியூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (48). இவரது மனைவி சுகுணா (41). தம்பதிக்கு 13 வயதில் மகள் உள்ளார். வாடகை வீட்டில் வசிக்கும் இவர்களுக்கு, ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ரூபன் கடந்த சில வருடங்களுக்கு முன் அறிமுகமாகி உள்ளார். இவர், ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் குறைந்த விலைக்கு வீட்டு மனை வாங்கி தருவதாக, சுந்தர்ராஜனிடம் கூறியுள்ளார். இதற்காக, சுந்தர்ராஜன் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த பணம் மற்றும் நகையை அடமானம் வைத்து  ரூ.15 லட்சத்தை ரூபனிடம் கொடுத்துள்ளனர். ஆனால், பல மாதங்களாகியும் வீட்டு மனை வாங்கி தராமல் ஏமாற்றி உள்ளார். எனவே, பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனாலும், பணத்தை திருப்பி தரவில்லை. இதனால், போலீசில் புகார் அளிக்கப்போவதாக சுகுணா கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரூபன், கடந்த 6ம் தேதி சுந்தர்ராஜன் வீட்டிற்கு சென்று சுகுணாவை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதை தொடர்ந்து, கடந்த 9ம் தேதி ரூபன் வீட்டிற்கு சென்ற சுகுணா மீண்டும் பணத்தை கேட்டுள்ளார். அப்போது, ரூபனும், அவரது 2வது மனைவியும் சேர்ந்து சுகுணாவை  சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அவர் நேற்று வீட்டில் இருந்த ஆசிடை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு தரமணியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து திருவான்மியூர் போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து, ரூபனை தேடி வருகின்றனர்.

Related Stories: