ராஜஸ்தானில் ராகுல் பேச்சு மக்களை பிரிக்கிறது பாஜ ஒன்று சேர்க்கிறது காங்கிரஸ்

பன்ஸ்வாரா: ‘மக்களை பிரிக்கும் வேலையை பாஜ செய்கிறது. நாங்கள் மக்களை ஒன்று சேர்க்கிறோம்’  என்று ராகுல் காந்தி பேசினார். ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது: இந்தியாவில் இன்று இரண்டு கொள்கைகள் இடையே சண்டை நடக்கிறது.  நாங்கள் மக்களை இணைக்கிறோம், பாஜவினர் மக்களை பிரிக்கிறார்கள். பலவீனமானவர்களுக்கு நாங்கள் உதவுகிறோம், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரிய தொழிலதிபர்களுக்கு உதவி செய்கிறார்கள். நம் நாட்டில் வேலை கிடைக்காது என்பதை இளைஞர்கள் உணர்ந்திருக்கிறார்கள். பணவீக்கம் அதிகரித்து வருகிறது. வேளாண் சட்டங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தொழிலதிபர்கள்தான் பயன் அடைந்திருப்பர். காங்கிரசுக்கும் பழங்குடியினருக்கும் இடையிலான உறவு மிகவும் பழமையானது மற்றும் ஆழமானது. நாங்கள் உங்கள் வரலாற்றைப் பாதுகாக்கிறோம். உங்கள் வரலாற்றை அழிக்கவோ அல்லது அடக்கவோ நாங்கள் விரும்பவில்லை. காங்கிரஸ் ஆட்சியின் போது, ​​உங்களது நிலம், காடு, நீர் ஆகியவற்றைப் பாதுகாக்க சிறப்புமிக்க வரலாற்றுச் சட்டத்தை கொண்டு வந்தோம். இவ்வாறு அவர் பேசினார்.

* பொருளாதாரத்தை சீரழித்து விட்டார்

ராகுல் மேலும் பேசுகையில், ‘‘தொழிலதிபர்களுக்காக ஒன்று, ஏழைகளுக்காக ஒன்று என 2 இந்தியாவை உருவாக்க பாஜ முயற்சிக்கிறது. மோடி பிரதமரானதும் பணமதிப்பிழப்பு, தவறாக செயல்படுத்திய ஜிஎஸ்டி ஆகியவற்றால் பொருளாதாரம் சீரழிந்து விட்டது. காங்கிரஸ் தலைமையிலான அரசு பொருளாதாரத்தை வலுப்படுத்தியது. மோடி பொருளாதாரத்தை சீரழித்து விட்டார்’’ என்றார்.

Related Stories: