ரூ.80,000 கோடியில் சுவிஸ் நிறுவன பங்குகளை வாங்கி சிமென்ட் துறையிலும் களமிறங்கிய அதானி: கால் பதித்ததுமே நாட்டின் 2வது பெரிய நிறுவனமானது

புதுடெல்லி: ஹோல்சிம் பங்குகளை ரூ.80 ஆயிரம் கோடிக்கு வாங்குவதன் மூலம், இந்திய சிமென்ட் துறையிலும் கவுதம் அதானி களமிறங்கி உள்ளார். குஜராத் தொழிலதிபரான கவுதம் அதானி, துறைமுகம், நிலக்கரி சுரங்கம், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளில் முதலீடு செய்து வருகிறார். இதன் மூலம் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக வளர்ந்து வரும் அதானி, தற்போது சிமென்ட் துறையிலும் கால் பதித்துள்ளார். கடந்தாண்டு அதானி குழுமம், அதானி சிமென்டேசன் லிமிடெட் மற்றும் அதானி சிமென்ட் லிமிடெட் என்ற 2 துணை நிறுவனங்களை நிறுவியது.

இந்தியாவின் முன்னணி சிமென்ட் உற்பத்தி நிறுவனங்களான ஏசிசி சிமென்ட் மற்றும் அம்புஜா சிமென்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஹோல்சிம் நிறுவனம் வைத்துள்ளது. தற்போது இந்தியாவில் ஹோல்சிம் நிறுவனம் தனது  செயல்பாட்டை நிறுத்திக் கொள்ள முடிவு செய்தது. இதனால், ஹோல்சிம் நிறுவனத்தை வாங்க, முன்னணி நிறுவனங்கள் போட்டியிட்டன. இதில் ரூ.81 ஆயிரம் விலை கொடுத்து அதானி சிமென்ட் நிறுவனம் ஹோல்சிம் பங்குகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் ஹோல்சிம் கட்டுப்பாட்டில் உள்ள ஏசிசி லிமிட்டெட் மற்றும் அம்புஜா சிமென்ட் இரண்டையும் இணைத்து இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய சிமென்ட் நிறுவனமாக உருவெடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* அரசியல் ஆர்வமில்லை

இதற்கிடையே, ஆந்திராவில் இருந்து மாநிலங்களவை எம்பி பதவிக்கு கவுதம் அதானி அல்லது அவரது மனைவி ப்ரீத்தி அதானி போட்டியிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனை அதானி குழுமம் மறுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதானி குடும்பத்தை சேர்ந்த எவரும் அரசியலுக்கு வர எண்ணமில்லை. மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான செய்திகள் முற்றிலும் தவறானவை’ என மறுத்துள்ளது.

Related Stories: