×

சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே ரூ.5,855 கோடியில் ஈரடுக்கு உயர்மட்ட சாலை: அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டத்துக்கு 10 ஆண்டுகளுக்கு பின் புத்துயிர்; முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட இந்த திட்டம் தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு புத்துணர்வு பெற்றுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தானது. இத்திட்டத்தின்படி, ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 20.565 கி.மீ. நீளத்திற்கு ரூ.5,855 கோடி மதிப்பில் 2 அடுக்கு உயர்மட்ட சாலை அமைக்கப்படும்.

இந்த 2 அடுக்கு உயர்மட்ட சாலையில், சென்னை துறைமுகம் முதல் கோயம்பேடு வரை முதல் அடுக்கில் உள்ளூர் வாகனங்கள் மட்டும் பயணிக்கும் வகையிலும், 13 இடங்களில் வாகனங்கள் ஏறும் / இறங்கும் சாய் தளங்களுடன்  அமைக்கப்பட உள்ளது. இரண்டாவது அடுக்கில் துறைமுகம் முதல் மதுரவாயல் வரை இருபுறமும் பயணிக்கும் கனரக வாகனப் போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும். தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சிகளின் காரணமாக, நீண்ட நாட்களாக பல்வேறு காரணங்களால் நிலுவையிலிருந்த இப்பணியினை செயல்படுத்திடும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் மற்றும் இந்திய கடற்படை ஆகியோருக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.

இந்நிகழ்வின்போது, ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் இறையன்பு, நெடுஞ்சாலைகள் துறை செயலாளர் கே.கோபால், துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் சுனில் பாலிவால், துணைத் தலைவர் எஸ்.பாலாஜி அருண்குமார், நாகாய் முதன்மை பொது மேலாளர் பி.ஜி.கோடாஸ்கர், மண்டல அலுவலர் எஸ்.பி.சோமசேகர், தேசிய நெடுஞ்சாலைகள் முதன்மை பொறியாளர் பாலமுருகன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நேவல் ஏரியா பிளாக் ஆபிசர் கமாண்டிங் ரியர் அட்மிரல் புனித் சதா, நோவல் ஆபிசர் கமாண்டர் எஸ்.ராகவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். அதிமுக ஆட்சி வந்தவுடன் இந்த பறக்கும் சாலை திட்டத்தை கைவிட்டது. தற்போது மீண்டும் இந்த திட்டம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு புத்துயிர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

* சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல்  வரையிலான 20.565 கி.மீ. நீளத்திற்கு ரூ.5,855 கோடி மதிப்பில் 2 அடுக்கு உயர்மட்ட சாலை அமைக்கப்படும்.
* முதல் அடுக்கில் உள்ளூர் வாகனங்கள் மட்டும் பயணிக்கும் வகையிலும், 13 இடங்களில் வாகனங்கள் ஏறும் / இறங்கும் சாய் தளங்களுடன் அமைக்கப்பட உள்ளது.
* 2வது அடுக்கில் துறைமுகம் முதல் மதுரவாயல் வரை இருபுறமும் பயணிக்கும் கனரக வாகனப் போக்கு வரத்து மட்டும் அனுமதிக்கப்படும்.
* தமிழ்நாடு அரசு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக பொறுப்புக் கழகம்  மற்றும் இந்திய கடற்படை ஆகியோருக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.

Tags : Chennai Port ,Maduravayal ,AIADMK ,Chief Minister ,MK Stalin , Rs 5,855 crore double-decker road between Chennai Port and Maduravayal: revived after 10 years of AIADMK-stalled project; The agreement was signed in the presence of Chief Minister MK Stalin
× RELATED சென்னை துறைமுகத்தில் இருந்து...