×

இம்ரானை கைது செய்தால் பாகிஸ்தான் இலங்கையாக மாறும்..! மாஜி அமைச்சர் ஷேக் ரஷித் அகமது பரபரப்பு பேட்டி

இஸ்லாமாபாத்: முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தால் பாகிஸ்தான் இலங்கையாக மாறும் என்று முன்னாள் அமைச்சர் ஷேக் ரஷித் அகமது, ஆளும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சரும், அவாமி முஸ்லிம் லீக் (ஏஎம்எல்) தலைவருமான ஷேக் ரஷித் அகமது, தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘​​இலங்கையில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் அந்நாடு மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது.

உணவு, எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்ற பல பிரச்னைகளால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பாகிஸ்தானில் நடைபெற்று வரும் தற்போதைய கூட்டணி அரசானது, எந்த திசையில் செல்கிறோம் என்று கூட தெரியாமல் சென்று கொண்டிருக்கிறது. தற்போதைய நிலைமையை கையாள முடியாமல் தவிக்கிறது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு எதிர்கட்சிகளின் கூட்டணியில் பேரம் நடந்துள்ளது. 25 கோடி ரூபாய்க்கு வாக்குகள் விற்கப்பட்டன.

11  கட்சிகளின் அரசியல் கூட்டணி அரசின் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்,  நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்னைகளை எப்படி தீர்க்கப் போகிறார்? சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லப் போகிறீர்களா? இல்லையா? என்பதை அறிவிக்க வேண்டும். கடந்த ஒரு மாதத்திற்குள் 6 பில்லியன் டாலர்களை நாடு இழந்துள்ளது. வரும் செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும். முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் தலைவருமான இம்ரான் கான் கைது செய்யப்பட்டால், பாகிஸ்தான் இலங்கையாக மாறும் என்று தற்போதைய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்’ என்றார்.

Tags : Pakistan ,Sri ,Lanka ,Imran ,Maji Minister ,Sheikh Rashid ,Ahmed Stir , If Imran is arrested, Pakistan will become Sri Lanka ..! Former Minister Sheikh Rashid Ahmed's sensational interview
× RELATED சொந்த மண்ணில் வரலாற்று வெற்றி பெற்ற இலங்கை