கொந்தகை அகழாய்வில் அடுத்தடுத்து கிடைக்கும் முதுமக்கள் தாழிகள்

திருப்புவனம்: கீழடி 8ம் கட்ட அகழாய்வில், கொந்தகை தளத்தில் அடுத்தடுத்து முதுமக்கள் தாழிகள் கிடைத்து வருவது ஆய்வாளர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த பிப்.13ம் தேதியும் அருகே 10 கிமீ தொலைவுக்குள் உள்ள அகரம், கொந்தகையில் கடந்த மார்ச் 30ம் தேதியும் அகழாய்வு பணிகள் தொடங்கின. மாநில தொல்லியல் துறை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் கீழடி அகழாய்வு தள இணை இயக்குநர் ரமேஷ், தொல்லியல் அலுவலர்கள் அஜய், காவ்யா, சுரேஷ் உள்ளிட்ட குழுவினர் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொந்தகையில் இதுவரை இரண்டு குழிகள் தோண்டப்பட்டு 25 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் 8ம் கட்ட அகழாய்வில் கிடைத்துள்ள தாழிகள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் உள்ளன. தாழிகளில் உள்ளே காணப்படும் உணவு குவளை, சுடுமண் பாத்திரங்கள் உள்ளிட்டவைகள் வெளியே கிடக்கின்றன. 8ம் கட்ட அகழாய்வில் கிடைத்துள்ள தாழிகள் பெரும்பாலும் கருப்பு, சிவப்பு வண்ணத்தில் கிடைத்துள்ளன. கொந்தகை தளத்தில் ஏழாம் கட்ட அகழாய்வில் 9 குழிகள் தோண்டப்பட்டு 30 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. 7ம் கட்ட அகழாய்வில் கிடைத்த தாழிகள் முழுமையாகவும், சேதமடையாமலும் இருந்தன. தாழிகளினுள் உள்ள சுடுமண் பாத்திரங்களும் உருக்குலையாமல் கிடைத்தன. 7ம் கட்ட அகழாய்வில் தாழிகள் இடையே பெரும் இடைவெளி இருந்தன. 5 முதல் 15 அடி இடைவெளி இருந்தது.

ஆனால், 8ம் கட்ட அகழாய்வில் இதுபோன்ற இடைவெளி இல்லை. அருகருகே கிடைக்கும் தாழிகள் அனைத்தும் சேதமடைந்து இருப்பதால் இரண்டு கட்ட அகழாய்விலும் கிடைத்த தாழிகளுக்குள் கால இடைவெளி அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது என கருதப்படுகிறது. எனவே தாழிகளை ஆய்வு செய்யும் முன் இடைவெளி இன்றி அருகருகே தாழிகள் புதைப்பதற்கான காரணம் ஆய்வு செய்யப்பட உள்ளது. 8ம் கட்ட அகழாய்வில் தாழிகளின் இடையே உள்ள இடைவெளி அளவிடப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன் பின்னரே தாழிகளினுள் உள்ள பொருட்களை வெளியே எடுக்கும் பணி துவங்கும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

Related Stories: