போனில் ஆர்டர் செய்தால் போதும்...! டேபிள் தேடிவந்து உணவு பரிமாறும் ‘ரோபோ’..! வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு

நொய்டா: தலைநகர் டெல்லி அருகே அமைந்துள்ள நகரமான நொய்டாவின் செக்டார்-104ல் அமைந்துள்ள உணவகம் ஒன்றில், வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவதற்காக  ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த உணவகத்தில் உணவு சப்ளை செய்வதற்காக 2 ரோபோக்கள் உள்ளன. செயற்கை நுண்ணறிவு என்ற தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த ரோபோக்கள், வாடிக்கையாளர்கள் கேட்கும் உணவுகளை டேபிளுக்கு கொண்டு வந்து கொடுக்கின்றன.

இதுகுறித்து உணவகத்தின் உரிமையாளர் ஜிஷு ஆனந்த் கூறுகையில், ‘எனது உணவகத்தில் இரண்டு ரோபோக்கள் உள்ளன. அவை தரவு குறியீட்டு முறை மூலம் வேலை செய்கின்றன. ஒவ்வொரு ரோபோவிலும் உள்ள ஒவ்வொரு டேபிளின் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஃபோன் மூலமாகவோ அல்லது டேப்லெட் மூலமாகவோ டேபிள் எண்ணை குறிப்பிட்டு உணவு வகைகளை ஆர்டர் செய்தால், ரோபோக்கள் டேபிளுக்குச் சென்று உணவை பரிமாறும்.

இந்த ரோபோக்களின் சிறப்பு என்னவென்றால், எவ்வித பராமரிப்பு வேலையும் கிடையாது. ஆனால் அவற்றை சார்ஜ் செய்ய 2 முதல் இரண்டரை மணிநேரம் தேவைபடும். அதன்பிறகு அவை நாள் முழுவதும் வேலை செய்கின்றன. சோதனை முறையில் உணவு பரிமாற ரோபோக்களை பயன்படுத்தி உள்ளோம். வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கொரோனா காலம் என்பதால், ரோபோக்களின் பயன்பாட்டை அத்தியாவசியமானதாக பார்க்கிறோம்’ என்றார்.

Related Stories: