ஓசூர் பகுதியில் மழைநீரில் நனைந்து 50 டன் வெங்காயம் அழுகி சேதம்: பல லட்ச ரூபாய் நஷ்டமானதால் விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி: ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்த 50 டன்  வெங்காயம் மழையால் அழுகி சேதமடைந்துள்ளது. அதிகாரிகள் பாதிப்பை பார்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்,சோளக்கரை, சாரல்தொட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அதிகளவு வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்பட்ட வெங்காயம், சென்னை, பெங்களூருவுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக ரஷ்யா -உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெங்காய ஆர்டர்கள் வரவில்லை.

இதனால் சுமார் 70 டன் வெங்காயத்தை விவசாயிகள் பாதுகாப்பான இடத்தில வைத்திருந்தனர். இந்தநிலையில், ஓசூர், சோளக்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால், இருப்பில் வைக்கப்பட்ட 70 டன் வெங்காயம் நீரில் நனைந்தது. இதனால் சுமார் 50 டன் அளவிலான வெங்காயம் அழுகி சேதமானது. விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவற்றை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.     

Related Stories: