தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலான நகரங்களில் புறவழிச்சாலை அமைக்கப்படும்; அமைச்சர் எ.வ.வேலு தகவல்

கும்பகோணம்: கும்பகோணம் புறவழிச்சாலையில் சாலை விரிவாக்கப்பணிகளை நேற்று ஆய்வு செய்த பின் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டி: தஞ்சை மாவட்டத்தில் 2,716 கி.மீ. சாலையில் கட்டுமானம், விரிவாக்கம், தரம் உயர்த்துதல் போன்ற பணிகள் நடந்து வருகிறது.

தமிழகத்தில் போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று அரசு செயல்பட்டு வருகிறது. கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவையாறு பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும். தஞ்சை-கும்பகோணம்-மயிலாடுதுறை சாலை மிக மோசமாக பழுதடைந்துள்ளதால் ரூ.65 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு தேசிய நெடுஞ்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அனுமதி கிடைத்ததும் பணிகள் விரைந்து முடிக்கப்படும். சென்னை-கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் திருவாரூர்-மயிலாடுதுறை ரூ.145 கோடி மதிப்பீட்டிலும், தஞ்சை-மன்னார்குடி 16 கி.மீக்கு ரூ.116 கோடி மதிப்பீட்டிலும், கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் 5 கி.மீ. தூரத்துக்கு ரூ.44 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்டம் தோறும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி சாலை விபத்துக்களை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

Related Stories: