புதுடெல்லி: நாடு முழுவதும் விவசாயிகளிடமிருந்து கோதுமை கொள்முதல் வரும் மே 31ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார். உக்ரைன் - ரஷ்யா போரால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உணவுப் பற்றாக்குறை அபாயம் நிலவுகிறது. அதிக அளவு கோதுமை உற்பத்தி நடைபெறும் உக்ரைனில், அங்கு ஏற்றுமதி தேங்கியுள்ளது. இதற்கிடையே அண்டை நாடுகளின் தேவைக்காக இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் 1 கோடி டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், இதுவரை 9,63,000 டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
கோதுமை ஏற்றுமதிக்காக மொராக்கோ, துனிசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், லெபனான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. உள்நாட்டு நிலைமையைக் கருத்தில்கொண்டு கோதுமை ஏற்றுமதிக்கு சமீபத்தில் ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. அதே வேளையில், வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ளது. உள்நாட்டில் விலையைக் கட்டுப்படுத்தவும், வர்த்தகத்தை முறைப்படுத்தவும் கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டதாக ஒன்றிய அரசு விளக்கம் அளித்தது. ஆனால், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று மாநில அரசுகள் மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதனால் போதிய அளவு கோதுமையை ஒன்றிய அரசு கொள்முதல் செய்யத் தவறியதே இதற்குக் காரணம். கொள்முதல் நடந்திருந்தால், கோதுமை ஏற்றுமதியை தடை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்று விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கோதுமையின் அளவு கடந்த 2 மாதங்களாக அதிகரித்ததால் இந்தியாவில் கோதுமை விலை நாளுக்கு நாள் உயர்ந்தபடி உள்ளது. இந்நிலையில் விவசாயிகளிடமிருந்து கோதுமை கொள்முதல் செய்வது மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று கோதுமை கொள்முதல் மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது’ என்றார். இந்த நீட்டிக்கப்பட்ட காலம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இது தொடர்பாக மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் விடுத்த கோரிக்கைகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.