இதமான சாரலுடன் துவங்கியது சீசன் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு

தென்காசி : குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக இதமான சூழலுடன் சாரல் பெய்து வந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் அருவிகளில் தண்ணீர் விழத் தொடங்கியது. வழக்கமாக ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் துவங்கும் குற்றாலம் சீசன் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு 15 தினங்கள் முன்னதாக அதுவும் அக்னி நட்சத்திர வெயில் காலத்தில் துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலமாகும். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் என்றும் குற்றாலம் பகுதியில் சீசன் காலம் என்றும் அழைக்கப்படுகிறது.  குற்றாலம் சீசன் காலத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படும். மிதமான வெயில், இதமான தென்றல் காற்று, அவ்வப்போது தவழ்ந்து செல்லும் மேகக்கூட்டம், இடையிடையே பொழியும் மெல்லிய சாரல், அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீர் உள்ளிட்டவை குற்றாலம் சீசன் காலத்தில் சிறப்பு அம்சங்கள் ஆகும்.

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் வந்து செல்ல விரும்பும் சுற்றுலா தலமாக குற்றாலம் திகழ்கிறது. குற்றாலம் சீசன் மற்றும் அருவி குளியல் ஆகியவை உடலுக்கும் மனதுக்கும் இதம் அளிப்பதாக சுற்றுலா பயணிகள் உணர்கின்றனர். இதனால் ஆண்டுதோறும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குற்றாலம் சீசன் காலத்தில் வந்து செல்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக நோய்த்தொற்று காரணமாக அருவிகளில் சீசன் காலத்தில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த மாதம்தான் அருவிகளில் இரவு நேரம் குளிக்க விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. அதிலும் பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்டவற்றில் இரவு நேரம் குளிக்க தடை நீடிக்கிறது.

குற்றாலத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. மே மாதத்தில் குற்றாலம் சீசனுக்கு முன்னோட்டமாக திகழும் தென்மேற்கு பருவக்காற்று அதாவது தென்றல் காற்று வீசத் துவங்கியது. அதன்பிறகு வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக அவ்வப்போது மேகக்கூட்டம் தவழ்ந்து லேசான சாரல் பொழிந்தது. இதனால் சீசன் தோன்றுவதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில் நேற்று காலை மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழத் தொடங்கியது.

மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. காலை வேளையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக இருந்த நிலையில் அருவிகளில் தண்ணீர் விழும் தகவல் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்க துவங்கியது. மதியத்திற்கு பிறகு கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. குற்றாலத்தில் மே மாதத்தின் மத்தியில் அதாவது அக்னி நட்சத்திர வெயில் காலத்தில் சீசன் துவங்குவது என்பது கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத ஒரு நிகழ்வு என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Related Stories: