சேலம் 5 ரோட்டில் துணிகரம் அடுத்தடுத்த 3 கடைகளின் மேற்கூரையை உடைத்து திருட்டு-மர்ம நபருக்கு வலை

சேலம் : சேலம் 5 ரோட்டில் அடுத்தடுத்த 3 கடைகளின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  சேலம் 5 ரோட்டில் ஓமலூர் மெயின்ரோடு பஸ் ஸ்டாப் அருகில், வணிக வளாகம் உள்ளது. இதன் அருகில் ஆஸ்பெட்டாஸ் ஷீட்டால் ஆன 3 கடைகள் உள்ளன. இதில் ஒன்றில், மாமாங்கத்தை சேர்ந்த லெனின் என்பவர் பைப் கடை வைத்துள்ளார். மற்ற 2 கடைகளில் ரெட்டிப்பட்டியைச் சேர்ந்த இளங்கேஸ்வரன் என்பவர் ஜெராக்ஸ் கடையும், அழகாபுரத்தைச் சேர்ந்த சாதிக்பாஷா என்பவர் பேக்கரியும் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, வியாபாரம் முடிந்து 3 கடைகளையும் உரிமையாளர்கள் அடைத்துச் சென்றனர்.

நேற்று காலை கடைகளை திறக்க வந்த போது, மேற்கூரைகளை உடைத்து திருட்டு நடந்துள்ளது தெரியவந்தது. முதலில் பைப் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையன், அங்கு கல்லாவை உடைத்து அதில் இருந்த ₹18 ஆயிரத்தை திருடி உள்ளான். அடுத்துள்ள ஜெராக்ஸ் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்து கல்லாவில் இருந்த ₹45 ஆயிரம் பணம் மற்றும் அரை பவுன் நகையை திருடிச் சென்றான். இந்த கடையின் உரிமையாளரான இளங்கேஸ்வரன், சீட்டு பணத்தை எடுத்து நகை வாங்குவதற்காக கடையில் வைத்திருந்தார்.

அதனை தொடர்ந்த, 3வதாக பேக்கரி கடைக்குள் புகுந்த கொள்ளையன், அங்கிருந்த ₹3500ஐ திருடிக் கொண்டு தப்பியோடியுள்ளான். அடுத்தடுத்த 3 கடைகளில் நடந்த இந்த திருட்டு சம்பவம் பற்றி தகவல் அறிந்த சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தவேல் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பைப் கடைக்குள் உள்ள சிசிடிவி கேமராவில், நள்ளிரவு 11.20 மணிக்கு கடைக்குள் புகுந்த மர்ம நபர், 12.20 மணி வரை அங்கு இருந்ததும், கல்லாவை உடைத்து அதில் இருந்த ஆவணங்களை ஒவ்வொன்றாக எடுத்து பார்த்து பணத்தை தேடியதும் பதிவாகி உள்ளது. அதனை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: