கோவையில் நடந்த மாநில தடகள போட்டியில் ஊக்க மருந்து பயன்படுத்திய வீரர்கள்?கழிவறையில் குவிந்து கிடக்கும் ஊசிகள்

கோவை : கோவை மாவட்ட தடகள சங்கம் நடத்திய மாநில அளவிலான சீனியர் தடகள போட்டியில் ஊக்க மருந்து பயன்படுத்தி வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ள சம்பவம் விளையாட்டு வீரர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை நேரு விளையாட்டு அரங்கில் 94-வது தமிழ்நாடு மாநில சீனியர் தடகள போட்டிகள் கடந்த மூன்று நாட்கள் நடந்தன. இப்போட்டியினை தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் கோவை மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்தியது.

இதில், 100மீ, தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடந்தன.

இப்போட்டியில், கோவை மட்டுமின்றி நீலகிரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டியில் பங்கேற்ற தடகள வீரர்கள் பலர் வெற்றி பெறுவதற்காக ஊக்க மருந்து ஊசிகளை அதிகளவில் பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது.நேரு விளையாட்டு அரங்கின் கழிவறைகளில் ஏராளமான ஊசிகள் மற்றும் மருந்துகள் குவிந்து கிடந்தன. இதனை பார்த்த சகவீரர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வகையான ஊக்க மருந்துகளை போட்டிக்கு 20 நிமிடம் அல்லது 30 நிமிடங்களுக்கு முன்பு பயன்படுத்துகின்றனர். இதனால், கூடுதல் எனர்ஜியுடன் செயல்பட்டு வெற்றி பெறுகின்றனர்.

இது போன்ற நபர்களால் உண்மையான திறமைக்கு வாய்ப்பு பறிபோகிறது என வீரர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மாநில அளவில் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகளில் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதில்லை எனவும், இதனால் இது போன்ற ஊக்க மருந்துகளை வீரர்கள் பயன்படுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தடகள சங்கம் சார்பில் நடத்திய போட்டியில் வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக எழுந்த சர்ச்சையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

இது குறித்து வீரர்கள் கூறியதாவது: மாநில அளவில் நடத்தப்படும் போட்டிகளில் வீரர்களுக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடத்துவதில்லை. வீரர் ஒருவர் தேசிய அளவிலான சாதனையை முறியடித்தால் அல்லது சிறப்பாக செயல்பட்டால் அல்லது வீரர்கள் யாராவது புகார் அளித்தால் மட்டுமே பரிசோதனை செய்கின்றனர். இந்த நடைமுறையை மாற்ற வேண்டும்.

மாநில அளவில் நடத்தப்படும் தடகளப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு கட்டாயம் மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும்.

சிலர் நாங்கள் விட்டமின் மருந்துகளை தான் எடுத்துக்கொள்கிறோம். ஊக்க மருந்துகளை பயன்படுத்துவதில்லை என கூறுகின்றனர். ஆனால், மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் நபர்கள் பலர் ஊக்க மருந்துகளை பயன்படுத்தி தான் வருகின்றனர். இது தொடர்பாக, அரசு மற்றும் தடகள சங்கங்கள் இணைந்து தீர்வு காண வேண்டும். இல்லையென்றால், தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் வாய்ப்புகள் குறையும். மேலும், கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடந்த தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற வீரர்களிடம் உரிய விசாரணை நடத்தி ஊக்க மருந்து பரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: