கொந்தகை தளத்தில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு: தாழிகளின் தூரத்தை அளவிடும் முயற்சியில் ஆய்வாளர்கள்

சிவகங்கை: கீழடி 8-ம் கட்ட அகழாய்வில் கொந்தகை தளத்தில் இடைவெளியின்றி முதுமக்கள் தாழிகள் நெருக்கமாக கிடைத்திருப்பது ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கீழடியில் பிப்ரவரி 13-ம் தேதியும், அகரம், கொந்தகையில் மார்ச் 30-ம் தேதியும் அகழாய்வு பணிகள் தொடங்கின. தொல்லியல்துறை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. கொந்தகை தளத்தில் 7-ம் கட்ட அகழாய்வின் போது, 9 குழிகள் தோண்டப்பட்டு, 30 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. 7-ம் கட்ட அகழாய்வில் கிடைத்த தாழிகள் இடைவெளியுடன் இருந்ததால் முழுமையாகவும், சேதமடையாமலும் இருந்தன.

தாழிகளினுள் உள்ள சுடுமண் பாத்திரங்களும் உருகுலையாமல் கிடைத்தன. 8-ம் கட்ட அகழாய்வில் இதுபோன்ற இடைவெளியில்லை. நெருக்கமாகவும், தாழிகள் அனைத்தும் சேதமடைந்தும் உள்ளன. இதனால் 2 கட்ட அகழாய்விலும் கிடைத்த தாழிகளுக்குள் காலஇடைவெளி அதிகமாக இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அத்துடன் இடைவெளி இன்றி தாழிகள் புதைக்கப்பட்டதற்கான காரணத்தையும் ஆய்வு செய்ய உள்ளனர். தற்போது தாழிகளுக்கு இடையே உள்ள தூரத்தை அளவிட்டு பதிவு செய்து வருகின்றனர். அதன்பின் தாழிகளினுள் உள்ள பொருட்களை வெளியே எடுக்கும் பணி தொடங்கும் என்று தெரிகிறது.        

Related Stories: