அதி தீவிரமாக பரவும் கொரோனா... தடுப்பூசி வழங்க தயார் என சீனா, தென்கொரியா அறிவிப்பு.... மவுனம் சாதிக்கும் வடகொரியா!!

சியோல்: வட கொரியாவில் கொரோனா பாதிப்பு வேகம் எடுத்துள்ள நிலையில், தடுப்பூசி பயன்பாடு பற்றி அந்நாட்டு அரசு சற்றும் யோசிக்காதது அண்டை நாடுகளை கவலை அடைய செய்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தாக்கிய போதும், தனது நாட்டில் பாதிப்பு இல்லை என வட கொரியா கூறி வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக இந்நாட்டில் கொரோனா அலை வீசி வருகிறது. தினமும் பல லட்சம் பேர் பாதித்து வருகின்றனர். குறிப்பாக, கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் தனது நாட்டில் முதல் முறையாக கொரோனா தொற்று  கண்டுபிடிக்கப்பட்டதாக அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்தார். ஒரு நோயாளியும் இறந்ததாக கூறி, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பித்தார்.

ஆனால், கடந்த மாதம் இறுதியில் இருந்தே வடகொரியாவில் கொரோனா பரவி விட்டதாக நேற்று முன்தினம்  தகவல் வெளியானது. கடந்த 12ம் தேதியில் இருந்து 3 நாட்களில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 620 பேர் பாதித்துள்ளனர். 42 பேர் பலியாகி உள்ளனர். இந்த நாட்டின் மொத்த மக்களை தொகையே 2 கோடியே 60 லட்சம்தான். இவர்கள் யாரும் கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை. ஒருபக்கம் தொற்று அதிகரித்தாலும் இதுவரை தடுப்பூசி பயன்பாடு குறித்து எந்த முடிவினையும் அதிபர் கிம் அரசு மேற்கொள்ளவில்லை. வடகொரியாவுக்கு தேவைப்படும் தடுப்பூசி மருந்தை தர தயார் என்று சீனாவும் தென்கொரியாவும் விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த மனிதாபிமான உதவிகளை வடகொரியா அரசு தற்போது வரை ஏற்றுக் கொள்ளாமல் மவுனம் சாதித்து வருகிறது.

Related Stories: