உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில் நேட்டோவில் இணைய பின்லாந்து விண்ணப்பம்: மின்சார விநியோகத்தை நிறுத்தியது ரஷ்யா

பெர்லின்: ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், நேட்டோ அமைப்பில் சேர விண்ணப்பிக்க போவதாக பின்லாந்து அதிபரும், பிரதமரும் கூட்டாக அறிவித்து உள்ளனர்.  ஐரோப்பிய யூனியன் ஒன்றியத்தில் 27 நாடுகள் உள்ளன. நேட்டோ கூட்டமைப்பில் 31 நாடுகள் உள்ளன. தற்போது, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நேட்டோ அமைப்பில் சேர ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக, ரஷ்யாவின் எல்லைக்கு அருகில் உள்ள உக்ரைன், பின்லாந்து, சுவீடன் போன்ற நாடுகள் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்து வருகின்றன.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்யா, தற்போது உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் போர் தொடுத்துள்ளது. இந்த சூழலில், ரஷ்யாவின் கடும் எச்சரிக்கையும் மீறி, நேட்டோ அமைப்பில் உறுப்பினராக விண்ணப்பிக்க போவதாக பின்லாந்து அதிபர் சவுலி நினிஸ்டோவும், பிரதமர் சன்னா மரினும் நேற்று கூட்டாக அறிவித்தனர். இதற்கான விண்ணப்பம் பிரஸ்சல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். ரஷ்யாவின் அச்சுறுத்தல் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஐரோப்பிய நாடுகள் பல வரிசையாக நேட்டோ அமைப்பில் சேர விருப்பம் தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே, நேட்டோவில் சேர பின்லாந்து விண்ணப்பிக்க உள்ளதால், அவர்களுக்கு வழங்கி வந்த மின்சாரத்தை ரஷ்யா நிறுத்தி உள்ளது. இந்நிலையில், உக்ரைனில் நேற்றும் ரஷ்யா - உக்ரைன் படைகளுக்கு இடையே பல இடங்களில் கடுமையான சண்டை நடந்தது. 

Related Stories: