வட கொரியாவில் 3 நாளில் 8 லட்சம் பேருக்கு தொற்று: 42 பேர் பலி

சியோல்: வட கொரியாவில் ஒரே நாளில் 3 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதித்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தாக்கிய போதும், தனது நாட்டில் பாதிப்பு இல்லை என வட கொரியா கூறி வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக இந்நாட்டில் கொரோனா அலை வீசி வருகிறது. தினமும் பல லட்சம் பேர் பாதித்து வருகின்றனர். குறிப்பாக, கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் தனது நாட்டில் முதல் முறையாக கொரோனா தொற்று  கண்டுபிடிக்கப்பட்டதாக அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்தார். ஒரு நோயாளியும் இறந்ததாக கூறி, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பித்தார்.

ஆனால், கடந்த மாதம் இறுதியில் இருந்தே வடகொரியாவில் கொரோனா பரவி விட்டதாக நேற்று முன்தினம்  தகவல் வெளியானது. கடந்த 12ம் தேதியில் இருந்து 3 நாட்களில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 620 பேர் பாதித்துள்ளனர். 42 பேர் பலியாகி உள்ளனர். இந்த நாட்டின் மொத்த மக்களை தொகையே 2 கோடியே 60 லட்சம்தான். இவர்கள் யாரும் கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை. இங்கு தேவையான மருத்துவ வசதிகளும் இல்லை. உடனடியாக தடுப்பூசி, மருந்துகள் வெளிநாடுகளில் இருந்து கிடைக்காவிட்டால்  ஏராளமான மக்கள் பலியாவார்கள் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.  

இந்தியாவில் தொற்று ஏற்ற, இறக்கம்

* இந்தியாவில் கொரோனா தினசரி தொற்று  எண்ணிக்கை  ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.

* நேற்று காலை 8 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2 ஆயிரத்து 487  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* இதன் மூலம், நாட்டில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 21 ஆயிரத்து 599 ஆக அதிகரித்துள்ளது

* 24 மணி நேரத்தில்  கொரோனா தொற்றுக்கு 13  பேர்  பலியாகியுள்ளனர்.   மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை   5,24,214 ஆக அதிகரித்துள்ளது.

* கர்ப்பப்பை வாய் புற்று நோய் மருந்து

பெண்களை அதிகளவில் தாக்கும் கர்ப்பப்பை வாய் புற்று நோயை தடுப்பதற்கான தடுப்பூசி தயாரிப்பதற்கு சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) ஒன்றிய அரசின் மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் ஜெனரலிடம் அனுமதி கேட்டுள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின்  அதிகாரி கூறுகையில், ‘உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த தடுப்பூசியின் 2 கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. எனவே, இந்த தடுப்பூசியை தயாரித்து விற்பனை செய்வதற்கு அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்,’ என்று தெரிவித்தார். ஒவ்வொரு நாளும் இந்தியாவில் இருநூறு பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். வருடந்தோறும் ஏராளமானோர் இந்த புற்றுநோயால் இறக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories: