குடிகார கணவனால் சித்ரவதை 65 கிமீ நடந்து நடுரோட்டில் குழந்தையை பெற்ற பெண்: பஸ்சுக்கு பணமின்றி 2 நாள் தவித்த பரிதாபம்

திருமலை: ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி ஒய்.எஸ்.ஆர். நகரை சேர்ந்தவர் மனைவி கொத்துரு வர்ஷினி. இவரும், இவரது கணவரும் கட்டிட கூலி வேலை செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் கட்டிட வேலைக்காக திருப்பதிக்கு சென்றனர். அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த வர்ஷினியிடம் அவரது கணவர் மது அருந்திவிட்டு தினந்தோறும் தகராறு செய்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வர்ஷினி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி தாய் வீட்டிற்கு செல்ல திட்டமிட்டார்.

ஆனால், அவரிடம் பணம் ஏதும் இல்லாததால், நெல்லூர் மாவட்டம் நாயுடுபேட்டையில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சுமார் 65 கி.மீ தூரம் வர்ஷினி நடந்தே சென்றார். செல்லும் வழியில் தண்ணீரை மட்டுமே குடித்ததாக கூறப்படுகிறது. வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டு நடைபயணத்தை தொடங்கி வர்ஷினி 2 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் இரவு நாயுடுபேட்டை பேருந்து நிலையம் அருகே வந்தார். அப்போது, அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் சாலையில் விழுந்து துடித்தார். இதை பார்த்த வாலிபர், 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தார். ஆனால், ஆம்புலன்ஸ் அங்கு வருவதற்குள் சாலையிலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ்  ஊழியர்கள் தாயையும், சேயையும் ஆம்புலன்சில் ஏற்றினர். அப்போது, வர்ஷினியின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பெண்கள், வீட்டில் இருந்து புடவைகள் மற்றும் குழந்தைக்கு துணிகளை கொண்டு வந்து கொடுத்தனர். குழந்தை எடை குறைவாக இருந்ததால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தாய் மற்றும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வர்ஷினி, தனது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை தெரிவிக்க மறுத்ததால், மருத்துவமனை ஊழியர்கள் திஷா காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அப்போது, அங்கு வந்த  போலீசாரிடம், மதுகுடித்து வந்து கணவர் அடித்ததால் விசாகப்பட்டினத்தில் உள்ள தாய் விட்டிற்கு நடந்த செல்ல இருந்ததாக தெரிவித்தார்.

Related Stories: