தொழிலாளர் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை மாற்றி அமைப்பு: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், தொழிலாளர் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள் செய்தி குறிப்பு. இந்திய அரசின் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பீடி, சுண்ணாம்பு கல், டோலமைட் சுரங்க தொழிலாளர்கள், திரைப்பட தொழிலாளர்கள் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை மாற்றி அமைத்து, மத்திய தொழிலாளர் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக வகுப்புகள் 1 -முதல் 5, 8, 9, 10, 11,12, ஐடிஐ, பட்டயம், பட்டப்படிப்பு (விவசாயம் உள்பட), தொழில் படிப்புகள் (மருத்துவம், பொறியியல், வணிக மேலாண்மை) என்ற வகையில் புத்தகங்கள் மற்றும் துணி வாங்குவதற்கு கல்வி உதவித் தொகையாக மாணவிகளுக்கு கூடுதலாகவும், மாணவர்களுக்கு குறைவாகவும் வழங்கப்பட்டது. இந்தாண்டு முதல், அதனை மாற்றி இருபாலருக்கும் ஒரு ஆண்டுக்கான புதிய கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அதில், 1 முதல் 4ம் வகுப்புக்கு ரூ.1000, 5 முதல் 8க்கு ரூ.1500, 9 முதல் 10க்கு ரூ.2000, 11, 12க்கு ரூ.3000, ஐடிஐ ரூ.6000, பாலிடெக்னிக் ரூ.6000, பட்டப்படிப்பு (விவசாயம் உள்பட) ரூ.6000, தொழில் படிப்புகள் (மருத்துவம், பொறியியல், வணிக மேலாண்மை) ரூ.25 ஆயிரம் என வழங்கப்படவும் உள்ளது. தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்புக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மட்டுமே கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: