ரூ.12 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு அடிக்கல் பிரதமர் மோடி 26ம் தேதி சென்னை வருகை: நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டம்

சென்னை: வருகிற 26ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அப்போது இலங்கை தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமரிடம் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட புதிய மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழா கடந்த ஜனவரி 12ம் தேதி நடைபெறுவதாகவும், இவற்றை திறந்து வைக்க பிரதமர் மோடி தமிழகம் வருவதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக பிரதமரின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டது.

இந்தநிலையில் வரும் 26ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க உள்ளார். இதற்காக, டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வரும் அவரை, முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ரவி, அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர். பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தீவுத்திடல் அருகே உள்ள கடற்படை தளத்துக்கு வந்து,  அங்கிருந்து பாதுகாப்புடன் காரில் விழா நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கத்திற்கு செல்கிறார். அங்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெறும் விழாவில் பங்கேற்று ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

இதேபோல், நிறைவுபெற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதன்படி, பெங்களூரு-சென்னை 4 வழி  விரைவுச்சாலையின் 3ம் கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். சென்னையில்  அமைய உள்ள மல்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ஒசூர்-தருமபுரி இடையே 2  மற்றும் 3ம் கட்ட நெடுஞ்சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மீன்சுருட்டி-சிதம்பரம் இடையில் புதிதாக அமைக்கப்படும் நெடுஞ்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதுதவிர, மத்திய நகர்ப்புற வீட்டுவசதித்துறை, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு  துறை, ரயில்வே துறை சார்பில் முடிக்கப்பட்டுள்ள பணிகளை நாட்டுக்கு  அர்ப்பணிக்கிறார்.

மதுரவாயல் மற்றும் துறைமுகம் பறக்கும் சாலை திட்டம், மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி வரையிலான கிழக்கு கடற்கரை  சாலையை அகலப்படுத்தும் திட்டம், போடி முதல் மதுரை வரையிலான ரயில் பாதை  திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பின்னர், பிரதமர் மோடியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசுகிறார். அப்போது, இலங்கை தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து, தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மற்றும் ஒன்றிய, மாநில அமைச்சர்கள், அரசு செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

* பெங்களூரு-சென்னை 4 வழி விரைவுச்சாலையின் 3ம் கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

* மதுரவாயல் மற்றும் துறைமுகம் பறக்கும் சாலை திட்டம், மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்தும் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

Related Stories: