தங்கம் விலை சவரன் 38,000க்கு கீழ் சரிந்தது

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. தொடர்ச்சியாக 2 நாட்களில் சவரனுக்கு ₹688 குறைந்துள்ளது. அதே நேரத்தில் நீண்ட மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை 38 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. அட்சய திரிதியை அன்று மட்டும் 18 டன் அளவுக்கு தங்கம் விற்பனையானது. அட்சயதிரிதியைக்கு பிறகு தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது.நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. கிராமுக்கு ₹68 குறைந்து ஒரு கிராம் ₹4,755க்கும், சவரனுக்கு ₹544 குறைந்து ஒரு சவரன் ₹38,040க்கும் விற்கப்பட்டது.

2வது நாளாக நேற்று தங்கம் விலை சரிவை சந்தித்தது. அதாவது நேற்று தங்கம் விலை கிராமுக்கு ₹18 குறைந்து ஒரு கிராம் ₹4,737க்கும், சவரனுக்கு ₹144 குறைந்து ஒரு சவரன் ₹37,896க்கும் விற்கப்பட்டது. 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ₹688 குறைந்துள்ளது. அதே நேரத்தில் நீண்ட மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை சவரன் ₹38 ஆயிரத்துக்கு கீழ் சரிந்துள்ளது. விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும்.

Related Stories: