தங்கம் விலை ஒரு நாளில் சவரனுக்கு 544 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ₹544 குறைந்தது. இந்த திடீர் விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அட்சய திரிதியை கடந்த 3ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த நாளில் ‘குண்டுமணி நகையாவது வாங்க வேண்டும்’ என்ற எண்ணம், மக்கள் மனதில் சமீபகாலமாக இருந்து வருகிறது. இதனால் வழக்கமாக அட்சய திரிதியை அன்று நகை விலை உயர்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு நகை விலை குறைந்து காணப்பட்டது. அதாவது, அட்சய திரிதியைக்கு முந்தைய நாள் அன்று தங்கம் விலை சவரனுக்கு ₹496 குறைந்தது. அட்சய திரிதியை அன்று சவரனுக்கு ₹360 குறைந்தது. தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ₹856 அளவுக்கு குறைந்தது.

நகை விலை குறைவால் அட்சய திரிதியை அன்று நகை விற்பனை அதிகமாக இருந்தது. 2 ஆண்டுகளாக இருந்த கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு அட்சய திரிதியை கொண்டாடப்பட்டதால், காலை முதல் நள்ளிரவு வரை நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால், அன்றைய தினம் தமிழகத்தில் 18 டன் தங்கம் நகை விற்பனையானது. அட்சய திரிதியைக்கு பிறகு நகை விலையில் மாற்றம் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ₹4,823க்கும், சவரன் ₹38,584க்கும் விற்கப்பட்டது. நேற்று காலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை சரிவை சந்தித்தது.

அதாவது, கிராமுக்கு ₹59 குறைந்து ஒரு கிராம் ₹4,764க்கும், சவரனுக்கு ₹472 குறைந்து ஒரு சவரன் ₹38,112க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்தது. அதாவது, நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு ₹68 குறைந்து ஒரு கிராம் ₹4755க்கும், சவரனுக்கு ₹544 குறைந்து ஒரு சவரன் ₹38,040க்கும் விற்கப்பட்டது. ஒரே நாளில் சவரனுக்கு ₹544 குறைந்துள்ளது நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் சவரன் ₹38 ஆயிரத்துக்குள் வந்துள்ளது.

Related Stories: