பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டன் அதிரடியில் பஞ்சாப் கிங்ஸ் ரன் குவிப்பு

மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாடி அரை சதம் விளாச, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன் குவித்தது.

பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டு பிளெஸ்ஸி முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஜானி பேர்ஸ்டோ, ஷிகர் தவான் இருவரும் பஞ்சாப் இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5 ஓவரில் 60 ரன் சேர்த்து அமர்க்களமான தொடக்கத்தை கொடுத்தது. தவான் 21 ரன் (15 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி மேக்ஸ்வெல் சுழலில் கிளீன் போல்டானார்.

அடுத்து பானுகா ராஜபக்ச 1 ரன் மட்டுமே எடுத்து ஹசரங்கா பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். அடுத்து பேர்ஸ்டோவுடன் லிவிங்ஸ்டன் இணைந்தார். இந்த ஜோடி பவுண்டரியும் சிக்சருமாக விளாசித் தள்ள, பஞ்சாப் ஸ்கோர் டாப் கியரில் எகிறியது. பேர்ஸ்டோ 21 பந்தில் அரை சதம் அடித்தார். அவர் 66 ரன் (29 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி ஷாபாஸ் அகமது பந்துவீச்சில் சிராஜ் வசம் பிடிபட்டார்.

இதையடுத்து லிவிங்ஸ்டன் - கேப்டன் அகர்வால் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 51 ரன் சேர்த்தனர். லிவிங்ஸ்டன் 35 பந்தில் அரை சதம் அடித்தார். அகர்வால் 19 ரன், ஜிதேஷ் ஷர்மா 9, ஹர்பிரீத் பிரார் 7 ரன்னில் வெளியேறினர். அபாரமாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய லிவிங்ஸ்டன் 70 ரன் (42 பந்து, 5 பவுண்டரி, 4 சிச்கர்) விளாசி ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரின் 2வது பந்தில் விக்கெட் கீப்பர் கார்த்திக் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரின் 4வது பந்தில் ரிஷி தவான் (7 ரன்), கடைசி பந்தில் ராகுல் சாஹர் (ரன் அவுட், 2 ரன்) விக்கெட்டை பறிகொடுக்க, பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன் குவித்தது.

ஆர்சிபி பந்துவீச்சில் ஹர்ஷல் படேல் 4 ஓவரில் 34 ரன்னுக்கு 4 விக்கெட் கைப்பற்றினார். ஹசரங்கா 2, மேக்ஸ்வெல், ஷாபாஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 210 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது.

Related Stories: