தாகம் தணிக்கும் ஹலோ இளநீர்!

நன்றி குங்குமம் தோழி

‘‘நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். விவசாய குடும்பங்களுக்கு என்னால் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்டது தான் எங்களின் ‘ஹலோ இளநீர்’ என்று பேசத் துவங்கினார் சவுக்கியா நிறுவனத்தின் நிறுவனர் சிவகுமார்.‘‘பொன்னேரியில் கிருஷ்ணாபுரம் கிராமம் தான் என்னோட பூர்வீகம். 92ல் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதால் விவசாய நிலத்தை விற்றுவிட்டோம். நானும் பிளாஸ்டிக் துறையில் டிப்ளமா பொறியியல் படிச்சிட்டு 10 வருஷம் பல நிறுவனங்களில் வேலை பார்த்தேன்.

அதன் பிறகு தனியாக செயல்படலாம்ன்னு, 2005ல் விக்னேஷ் பாலிமர் என்ற நிறுவனத்தை துவங்கினேன். கார், ஃபிரிட்ஜ் மற்றும் வாஷிங்மெஷின்களுக்கு உதிரிபாகம் செய்து கொடுப்பது தான் எங்க நிறுவனத்தின் வேலை. சென்னை மற்றும் கோவாவில் இயங்கி வரும் எங்க நிறுவனத்தில் 1000த்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்க்கிறார்கள்.

அப்படி இருக்கும் போது, பல வெளிநாட்டினர் என்னை பார்க்க வருவாங்க. அவங்களுக்கு நான் கொடுக்கும் ஒரே பானம் இளநீர் தான். அந்த சமயத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குளிர்பானங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அப்போது தான் ஏன் இளநீரையே மக்கள் விரும்பி குடிக்கும் வகையில் கொடுக்கக் கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. ஒரு வருட ஆய்வுக்கு பிறகு 2018ல் ‘ஹலோ இளநீர்’ உருவானது’’ என்றவர் அதைப் பற்றி விவரித்தார்.

‘‘கொஞ்சம் முற்றிய இளநீரை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்கி அதன் ஓடுகளை எல்லாம் சீவி மேலே சின்னதா ஒரு ஓப்பனர் அமைத்து மார்க்கெட்டில் அறிமுகம் செய்தோம். ஓப்பனரை திறந்து அப்படியே ஸ்ட்ரா ேபாட்டு குடிக்கலாம். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சது. இப்ப கொரோனா காலத்தில் இளநீர் விளைச்சல் அதிகமானது, ஆனால் விற்க முடியல.

அதற்கும் ஒரு தீர்வு கண்டறிந்தோம். இதனை முழுமையாக சீவாமல், அதே போல் குடிக்க வசதியாக அமைத்து ‘டெண்டர் ஸ்பிரிங்க்ஸ்’ என்ற பெயரில் கடந்த மாதம் அறிமுகம் செய்திருக்கிறோம். இரண்டும் இளநீர் தான். ஹலோ இளநீர் கொஞ்சம் முற்றிய காய், உள்ளே தேங்காய் இருக்கும். டெண்டர் ஸ்பிரிங்க்ஸ் இளசுக்காய் தண்ணீர் மட்டுமே இருக்கும்’’ என்றவர் இதில் எந்தவித ஃபிளேவர்களும் சேர்ப்பதில்லையாம்.

‘‘இளநீர் மட்டுமில்லாமல் பசும் பால் மற்றும் துருவிய தேங்காய் போன்றவற்றையும் நாங்க அறிமுகம் செய்து இருக்கோம். என்னுடைய அடுத்த கட்ட திட்டம் தேங்காய்ப்பால் மற்றும் பதனீரையும் இதே போல் ஃபிரஷ்ஷாக மக்களுக்கு அளிக்க வேண்டும். அதற்கான ஆய்வுகள் நடந்து கொண்டு இருக்கிறது.

எங்களின் அனைத்து பொருட்களும் ‘சவுக்கியா டேர்ஸ்டெப் டெயிலி’ என்ற ஆப் மூலம் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே கொண்டு வந்து டெலிவரி செய்கிறோம்’’ என்ற சிவக்குமாரின் முக்கிய எண்ணம் விவசாய குடும்பங்களுக்கு தன்னால் முடிந்த உதவியினை செய்ய வேண்டும் என்பதாம்.

தொகுப்பு: ரித்திகா

Related Stories: