ஃபேஷன் பரேடில் என்றும் புடவைக்குதான் முதலிடம்!

நன்றி குங்குமம் தோழி

ஃபேஷன் டிசைனர் ஹர்ஷா

ஃபேஷன் என்றாலே அது பெண்களுக்கு மட்டுமே உரியதுன்னு முத்திரை குத்தியாச்சு. அந்த காலத்து பாவாடை சட்டை முதல் இந்த காலத்து காக்ரா சோளி வரை எண்ணற்ற முறையில் ஆடைகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலும் நம் முன்னோர்கள் காலத்தில் பயன்படுத்திய உடைகள் தான் தற்போது மறுசுழற்சி மூலம் வேறு வடிவில் ஃபேஷனாகி வருகிறது. தற்போதுள்ள இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் விரும்பும் உடைகளை வடிவமைப்பது மட்டுமில்லாமல் அந்த உடைகளுக்கு ஏற்ப ஸ்டைலிங்கும் செய்து வருகிறார் சென்னையை சேர்ந்த ஹர்ஷா.

 ‘‘பிறந்தது, படிச்சது எல்லாம் சென்னையில் தான். பையோடெக்னாலஜி படிப்பை முடிச்சேன். எனக்கு சின்ன வயசில் இருந்தே ஃபேஷன் டிசைனிங் மேல் ஆர்வம் அதிகம். அதற்கு காரணம் என் அம்மா தான். அவங்க தான் எப்படி உடை அணியணும். உடைக்கு ஏற்ப ஸ்டைலிங் மற்றும் அணிகலன்கள் எப்படி இருக்கணும்ன்னு எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க. சின்ன வயசில் அவங்க தான் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு ஏற்ப என்னை தயார் செய்வாங்க. நான் வளர்ந்த பிறகும் அவங்க தான் டிப்ஸ் கொடுப்பாங்க.

அதனாலேயே எனக்கு ஃபேஷன் துறை மேல் தீராக் காதல் ஏற்பட்டது. சென்னையில் பட்டப்படிப்பு முடிச்ச பிறகு லண்டனில் ஆறு மாதம் ஃபேஷன் டிசைனிங் குறித்த படிப்பு படிச்சேன். டிசைனிங்கோடு ஸ்டைலிங் பற்றியும் தெரிந்து கொண்டேன். பயிற்சி முடிந்து சென்னைக்கு வந்த போது, சென்னை டிரேட் சென்டரில் ‘‘லிம்கா புக் ஆஃப் ரெகார்ட்’’ என்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அது ஒரு ஃபேஷன் சம்பந்தமான நிகழ்ச்சி. நான் படிச்ச படிப்பை செயல்முறையில் செய்து பார்க்கலாம்ன்னு நான் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றேன்.

அதில் ஆண்கள்அணியும் லுங்கியை பெண்கள் அணியும் உடையாக மாற்றி வடிவமைத்தேன். நான் வடிவமைத்த உடையை நடிகை பார்வதி நாயர் அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த உடையை வடிவமைத்ததற்காக எனக்கு ‘BEST UPCOMING DESIGNER’ என்ற பட்டம் கிடைத்தது மட்டுமில்லாமல் என்னுடைய உடைக்கு பரிசும் கிடைச்சது’’ என்றவர் அந்த காலத்து ஃபேஷனை தான் இந்தகாலத்து பெண்களும் விரும்புவதாக தெரிவித்தார்.

‘‘பெரும்பாலும் பல பெண்கள் விரும்பி அணியும் லெக்கிங்க்ஸ் அந்த காலத்து ஃபேஷன் தான். அதைத்தான் இப்போது மறு உருவாக்கம் செய்து வடிவமைக்கிறாங்க. நானும் அந்த காலத்தில் அணிந்த உடைகளை மாற்றி அமைத்து உருவாக்கினேன். அதனை ஹர்ஷாஷாஸ்டேக் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தேன்.

நல்ல வரவேற்பு மட்டுமல்லாமல் எனக்கு ஒரு வாய்ப்பும் கிடைச்சது. தற்போது பல பிரபலங்களுக்கு நான் உடை வடிவமைத்து வருகிறேன். மேலும் கனடாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் பங்குபெற்று சிறப்பு விருதினையும் பெற்று இருக்கிறேன். இப்போது கொரோனா காலத்தினால், வெளியே அதிகம் செல்ல முடியாத நிலையில் வீட்டில் இருந்தபடியே உடைகளை வடிவமைத்துத்தருவது மட்டுமில்லாமல், ஆன்லைன் முறையில் ஃபேஷன் குறித்து வகுப்பு எடுத்து வருகிறேன்’’ என்றவர் வின்டேஜ் மற்றும் ரெட்ரோ என பழைய ஸ்டைல்களை மீண்டும் உருவகப்படுத்தி வருகிறார்.

‘‘ஆன்லைன் வகுப்பு மற்றும் என் ஃபேஷன் வேலைகள் போக வீட்டில் இருக்கும் நேரத்தை பயனுள்ளதாக கழிக்க விரும்பினேன். ஃபேஷனைப் பொறுத்தவரை அது நாளுக்கு நாள் மாறிவரும். நாம் அதில் எப்போதுமே நம்மை அப்டேட்டாக வைத்துக் கொள்ளணும். பழைய ஸ்டைலாக இருந்தாலும் அதில் என்ன புதுமை புகுத்தலாம்ன்னு பார்க்கணும்.

நான் கொஞ்சம் வித்தியாசமாக 80ஸ் மற்றும் 90ஸ்களில் வந்த ஃபேஷன்களை அப்படியே மறுஉருவாக்கம் செய்தேன். அதாவது அந்த காலத்தில் இருந்த நடிகைகளின் உடைகள் மற்றும் ஸ்டைல்களை எனக்கு நானே வடிவமைத்தேன். அவர்கள் அணிந்திருந்த உடைகள் மற்றும் நகைகள் எல்லாம் அப்படியே கிடைக்காது. ஆனால் அதே போல் கொஞ்சம் மாற்றி அமைக்கலாம். அதனால் என்னிடம் இருந்த உடைகள் மற்றும் ஆபரணங்கள் கொண்டு குஷ்பூ, மீனா, தேவி, ஸ்னேகா, ஜெயலலிதா, ஹேமமாலினி, ரேகா, சிம்ரன் என 26 நடிகைகளின் ஸ்டைல்களை நான் மீண்டும் உருவாக்கினேன்.

ஆரம்பத்தில் அதே போல் உடை மற்றும் ஆபரணம் கிடைக்க கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் அதே உடை கிடைக்காது. ஆனால் அந்த டிசைனில் உடை மற்றும் ஆபணரம் கிடைக்கும். ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்தேன். மேலும் மேக்கப்பும் அதற்கு ஏற்ப செய்தேன். இதற்கு என் அம்மாவும் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தாங்க. நான் வடிவமைத்த டிசைன்களை பழைய புகைப்படத்துடன் இணைத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டேன், நல்ல வரவேற்பு கிடைத்தது’’ என்றவர் பெண்களுக்கு பிடித்த உடை புடவை மட்டும் தான் என்று அடித்துச் சொல்கிறார். ‘‘ஆடை வடிவங்கள் ஃபேஷன் உலகில் எவ்வளவு தான் மாறினாலும், ஃபேஷன் பரேடில் முதலிடம் பிடிப்பது பெண்கள் அணியும் புடவை தான்.

எத்தனையோ வெஸ்டர்ன் ஆடைகள் தமிழகப் பெண்களின் ஃபேஷன் வார்ட்ரோப்பில் இடம் பிடித்திருந்தாலும் புடவைகளின் மவுசு குறைவதே இல்லை. ஒரு புடவை கட்டுவதற்கும், அதற்காக பிளவுஸ் அணிவதற்குமே பெண்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால் ஒரு புடவையை எவ்வாறு பல வடிவங்களில் அணியலாம் என்று வடிவமைத்து இருக்கிறேன். ஃபேஷன் துறை பார்க்கும் போது ரோஜாக்கள் நிறைந்த பாதை போல தான் தெரியும். ஆனால் அதில் முட்களும் நிறைந்து இருக்கும்.

அதை எல்லாம் தாண்டி தான் நாம் இந்த துறையில் முன்னேறி வர வேண்டும். நானும் பல இன்னல்கள், அவமானங்களை சந்தித்து தான் தற்போது எனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி இருக்ேகன். இதில் நான் கற்றுக் கொண்ட விடாமுயற்சியை எப்போதும் கைவிடக்கூடாது என்பது தான். எல்லாரும் போல எனக்கு எதிர்கால கனவு உள்ளது. அதை அடைய என்னை நான் தயார்படுத்தி வருகிறேன்’’ என்கிறார் ஹர்ஷா.

தொகுப்பு: ஆனந்தி ஜெயராமன்

Related Stories:

>