Brain Attack

நன்றி குங்குமம் டாக்டர்

* தகவல்

ஹார்ட் அட்டாக் பற்றி நமக்குத் தெரியும். ஆனால், Brain attack பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ‘என்னது பிரெயின் அட்டாக்’கா என்று பெயரே பயமுறுத்துகிறதா? பிரச்னையும் கொஞ்சம் அப்படிப்பட்டதுதான்...

பிரெயின் அட்டாக்கை பக்கவாதம் என்றும் சொல்லலாம். மூளையின் எந்தப் பகுதிக்கும் செல்கிற ரத்தக் குழாய்களில் தடை ஏற்பட்டால் வருவது பிரெயின் அட்டாக்.

மூளைத்தாக்கு இரண்டுவிதமாக அறியப்படுகிறது. மூளையின் உள்பகுதியில் ஏற்படுகிற ரத்தக் கசிவு முதலாம் வகை. ரத்தக்குழாய்களில் ஏற்படுகிற அடைப்பு இன்னொரு வகை.

முகம், கைகள், கால்களில் திடீரென மரத்துப் போன உணர்வு அல்லது பலவீனம், திடீர் குழப்பம், பேச்சில் தடுமாற்றம், பேசுவதைப் புரிந்துகொள்ள இயலாமை, பார்வையில் பிரச்னை, நடப்பதில் தடுமாற்றம், மயக்கம், காரணமே இல்லாமல் திடீரென தோன்றும் கடுமையான தலைவலி போன்றவை மூளைத்தாக்கு ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறிகளாக இருக்கிறது.

அறிகுறிகளை உணர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். மருத்துவர் உங்களைப் பரிசோதித்து, உங்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா என உறுதிப்படுத்துவார். கூடவே ரிஸ்க்கை ஏற்படுத்தும் காரணிகளைக் கட்டுப்படுத்தவும் ஆலோசனைகள் வழங்குவார். சில நேரங்களில் சிலருக்கு பக்கவாதம் தாக்குவதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே தெரியும்.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், புகை மற்றும் மதுப்பழக்கம், உடல் பருமன், இதய நோய்கள் போன்றவை மூளைத்தாக்குக்கு முக்கியக் காரணிகளாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும்போது அல்லது குறையும்போது பக்கவாதம் ஏற்படுகிறது. இப்படி ஏற்படும்போது மூளைக்குப் போதுமான அளவு ஆக்சிஜன் மற்றும் சத்துகள் கிடைக்காமல் போவதால் மூளையின் செல்கள் இறக்
கின்றன. இது தீவிரமாகும்போது மூளையின் இயக்கம் முற்றிலும் நின்றுபோகலாம்.

அறிகுறிகள் 24 மணி நேரம் நீடித்தால், அவை செரிப்ரோவாஸ்குலர் டிசீஸ் எனப்படும் பாதிப்பாக மாறலாம். அதாவது மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படுகிற பாதிப்பு. இதையும் Transient ischemic attack (TIA) என்றும் சொல்லலாம்.

Transient Ischemic Attacks அல்லது TIA என்பதைத்தான் மினி ஸ்ட்ரோக் என்றும் சொல்கிறோம். சிலருக்கு பக்கவாதம் ஏற்படப் போவதற்கான எந்த அறிகுறியுமே தெரியாது அல்லது அவை மிக மிகக் குறைவாக, கவனிக்கத் தவறும் வகையில் இருக்கும்.

சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பக்கவாதம் வராமல் தடுக்கலாம். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உடல் பருமனைக் குறைக்க வேண்டும். உடற்பயிற்சிகள் முறைப்படுத்தப்பட வேண்டும். புகை மற்றும் குடிப்பழக்கம் நிறுத்தப்பட வேண்டும். ஏட்ரியல் குறு நடுக்கம் எனப்படும் Atrial fibrillation-க்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வேண்டும்.

பக்கவாதம் வரலாம் என பயப்படுபவர்கள் குறிப்பிட்ட இடைவேளைகளில் மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பாதிப்பு மேலும் தீவிரமாகாமலிருக்க இவை உதவும். சந்தேகத்துக்குரிய அறிகுறிகள் ஏதேனும் உணரப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

சில நேரங்களில் பக்கவாதமானது சிறுகச் சிறுக வரும். ஆனால், திடீரென ஒன்றிரண்டு அறிகுறிகளை உணர்வார்கள். முகத்தில் மரத்துப்போவது, பலமிழப்பது, ஒரு பக்க உடல் பலமிழப்பது, மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வதில் சிக்கல், பேச முடியாத உணர்வு போன்றவற்றை வைத்து அதை உறுதிப்படுத்தலாம்.

பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் அவசரம் தேவை. பக்கவாதமாக இருக்கலாம் என சந்தேகப்பட்டால், அதற்கான மருத்துவ சிகிச்சைகள் உள்ள மருத்துவமனைக்கே செல்ல வேண்டும். பாதிக்கப்பட்டவரை உடனடியாக கவனிக்கிற அவசரநிலையில் மருத்துவர் இருக்க வேண்டும். 4 மணி நேரத்துக்குள் ரத்தக்குழாய் அடைப்பு நீக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவரின் இருப்பிடத்தில் இருந்து மருத்துவமனையை 20 நிமிடங்களில்
அடைய வேண்டும்.

மிக அரிதாக மூளையில் நீர்கோத்துக் கொண்டவர்களுக்கும் நிறைய காயங்கள் பட்டவர்களுக்கும் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு Open surgery பரிந்துரைக்கப்படும். சிலருக்கு மூளை வீங்கி வெளியே வரும். உள்ளேயும் வீங்கி, உயிரிழப்பை ஏற்படுத்தலாம்.  அதைத் தவிர்க்கவும் ஓப்பன் சர்ஜரி தேவைப்படலாம்.

ஹார்ட் அட்டாக் வந்தவர்களுக்கு ஆஞ்சியோ செய்யப்படுவதைப் போலவே பிரெயின் அட்டாக் பிரச்னைக்கும் பிரெயின் ஆஞ்சியோ செய்யப்படுகிறது. இதில் கை அல்லது காலில் உள்ள மிகப்பெரிய தமனி வழியே வடிகுழாயைச் செலுத்தி பிளாட்டினம் காயிலைப் பொருத்தி, ரத்தக் கசிவும் அழற்சியும் சரி செய்யப்படும்.

 மூளைக்குள் ஏற்படுகிற ரத்தக் கசிவை சரிசெய்ய அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம். ரத்தநாளங்களில் ஏற்படுகிற நெளிவுகளின் காரணமாக ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தால் அந்த நாளங்களின் அடிப்பகுதியில் உலோக கிளிப்புகள் பொருத்தப்படுகிற சிகிச்சையும் மேற்கொள்ளப்படும்.

 தொகுப்பு: ராஜி

Tags :
× RELATED பீகாரில் ஸ்ரீகிருஷ்ணா...