×

I Will not Be The Last : கமலா ஹாரீஸ்

நன்றி குங்குமம் தோழி

“இந்தப் பதவிக்கு வரும் முதல் பெண்ணாக நான் இருக்கலாம். ஆனால் கடைசிப் பெண்ணாக மட்டும் நான் இருக்கக் கூடாது..” (while I may be the first women in the office, I will not be the last).  ‘‘இந்த இரவு நிகழ்வை உற்று கவனித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னஞ்சிறு பெண்ணுக்கும், வாய்ப்புகள் நிறைந்த உலகம் இது என்பதை இந்த வெற்றி உணர்த்தியிருக்கும்...!” தேர்தல் வெற்றிக்குப்பின் கமலா ஹாரிஸ் மக்கள் முன்பு உதிர்த்த அழுத்தமான வார்த்தைகள் இவை.

ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களான ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் அமோக வெற்றி பெற்ற நிலையில், ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது அதிபராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க நாட்டின் முதல் பெண் துணை அதிபராகவும் தேர்வாகியுள்ளார். “இது வெறும் தொடக்கமே.. முடிவல்ல. ஒரு பெண்ணை நாட்டின் துணை அதிபராய் தேர்வு செய்யும் துணிச்சல் பைடனுக்கு இருந்திருக்கிறது” எனக் கமலா ஹாரிஸும், “கமலா ஹாரிசுடன் இணைந்து பணியாற்றப்போவதில் மிகவும் பெருமைப்படுகிறேன்” என ஜோ பைடனும் தெரிவித்துள்ளனர்.

மக்கள் முன்பு மேலும் பேசிய கமலா.. “இந்த வெற்றித் தருணத்தில் நான் எனது தாய் ஷியாமளா கோபாலனை நினைவுகூர விரும்புகிறேன். 19 வயதில் அவர் அமெரிக்காவில் குடியேறியபோது,  இதுபோன்ற ஒரு வெற்றியை நினைத்திருக்க மாட்டார். ஆனால் இந்த நிலை அமெரிக்காவில் சாத்தியமாகும் என அவர் முழு நம்பிக்கை வைத்திருந்தார்.  ஒரு புதிய சகாப்தம் அமெரிக்காவில் தொடங்கி இருக்கிறது.

இனவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, சம உரிமை நிலைநாட்டப்படும். சாதிக்கத் துடிக்கும் இளைய தலைமுறைக்கு என் வெற்றி உதாரணமாக இருக்கும். இந்த வெற்றியின் மூலமாக அமெரிக்காவில் யாரும், எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி இருக்கிறோம். நாட்டின் முதுகெலும்பாய் திகழும் பெண்களின் முன்னேற்றத்திற்கு ஏராளமான செயல்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. ஒவ்வொரு குடிமகனுக்குமான பிரதிநிதியாக செயலாற்றி ஒபாமாவின் வழியில் அமெரிக்காவை முன்னேற்றப்பாதையில் வழிநடத்திச் செல்வேன் எனப் பேசியுள்ளார்.

‘பெண் ஒபாமா’..  55 வயதாகும் கமலா ஹாரிஸ் அமெரிக்க மக்களால் இப்படித்தான் அழைக்கப்படுகிறார். சான்பிரான்சிஸ்கோ மாவட்ட அரசு வக்கீலாக பதவியில் அமர்ந்த முதல் பெண். அதிகாரமிக்க அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் முதல் இந்திய வம்சாவளிப் பெண் உறுப்பினர். இப்போது அமெரிக்க நாட்டின் முதல் பெண் துணை ஜனாதிபதி.

அதேபோல் முதல் இந்திய வம்சாவளி பெண் துணை ஜனாதிபதி. முதல் கருப்பினப் பெண் துணை ஜனாதிபதி, முதல் ஆசிய பெண் துணை ஜனாதிபதி என ‘முதல்’ எனும் வார்த்தையில் வரலாறு படைத்திருக்கிறார் கமலா ஹாரிஸ்.கமலா ஹாரிஸ் அப்பா டொனால்டு ஹாரிஸ், ஜமைக்காவை சேர்ந்தவர். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக பொருளாதாரத் துறை பேராசிரியராக பணியாற்றியவர். அம்மா சியாமளா கோபாலன் புற்றுநோய் ஆராய்ச்சியாளராகவும், மனித உரிமை போராளியாகவும் இருந்தவர். கருத்து வேற்றுமையால் பெற்றோர் விவாகரத்துப் பெற, இவர்களின் மகள்கள் கமலா ஹாரிஸ், மாயா ஹாரிஸ் இருவரை வளர்க்கும் பொறுப்பு முழுமையாகத் தாய் சியாமளாவுக்கே இருந்தது.

தனது சுயசரிதையான `தி ட்ரூத்ஸ் வி ஹோல்ட்` புத்தகத்தில், இந்திய பாரம்பரியத்துடன் தங்களை அம்மா வளர்த்ததாகவும், ஆனால் அமெரிக்கா மாயாவையும் என்னையும் கருப்பின பெண் என்கிற பார்வையில்தான் பார்க்கும் என்பதையும் உணர்ந்தே அம்மா வளர்த்ததாகவும் கமலா ஹாரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

கமலா அமெரிக்காவின் ஒக்லாந்தில் பிறந்து, பெர்க்லியில் வளர்ந்தவர். பள்ளி படிப்பை பிரெஞ்சு மொழி பேசும் கனடாவில் கழித்தார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு பயின்றார். பல்கலைக்கழக வாழ்க்கை தன்னைச் செதுக்கியதில் பெரிதும் உறுதுணையாக இருந்தது எனக் குறிப்பிடும் கமலா, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டுகள் படித்து முடித்ததும், கலிபோர்னியா பல்கலைக்கழகம் சென்று சட்டம் பயின்றுள்ளார்.

மாவட்ட வழக்குரைஞர் அலுவலகத்தில் தனது பணியைத் தொடங்கியவர்,  2003-ல் சான்பிரான்சிஸ்கோவின் முன்னணி அரசு வழக்குரைஞர் ஆனார். 2010-ல் கலிபோர்னியா மாகாண அட்டார்னி ஜெனரலாய் உயர்ந்தார். அதே காலகட்டத்தில் ஜனநாயக கட்சியில் புகழ்பெற்ற நட்சத்திரமாகவும் ஜொலித்துள்ளார். 2017-ல் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபைக்கு உறுப்பினராகத் தேர்வாகிப்
பணியாற்றினார்.

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிசின் கனவு அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாவது.  அதற்கான முன்னெடுப்போடு பிரசாரத்திலும் இறங்கினார். முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இருந்திருக்கிறார். செனட் தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் கமலா ஹாரிசை முன் மொழிந்திருக்கிறார் ஒபாமா.

வக்கீலான டக்ளஸ் எம் ஹாஃப் என்பவரை 6 ஆண்டுகளுக்கு முன் காதலித்து மணம் புரிந்தார் கமலா. என் அடையாளம் குறித்து எனக்கு எந்த அசெளகரியமும் இதுவரை ஏற்படவில்லை. எளிமையாய் சொல்லவேண்டுமானால் `நான் ஒரு அமெரிக்கர். நிறத்தாலோ பின்புலத்தாலோ ஒருவர் அரசியல்வாதியாகக் கூடாது' எனவும் 2019ல் வாஷிங்டன் போஸ்டுக்கு பேசியவர், தெரிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியில் வலுவான சக்தியாக  வலம் வரும் நமது தமிழகத்தைச் சேர்ந்த கமலா ஹாரிஸ்க்கு 2024ம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், அந்த நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி என்கிற இலக்கை அடையும் வாய்ப்பு  மிகவும் பிரகாசமாகவே இருக்கிறது.

விழாக்கோலம் பூண்ட மன்னார்குடி

 கமலா ஹாரிஸ் தாய்வழி தாத்தாவும், பாட்டியும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள். இவரின் தாய்வழி உறவினர்களில் சிலர் சென்னையிலும் வசிக்கிறார்கள். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ்  தேர்வானதையடுத்து துளசேந்திரபுரம் பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், பதாகைகள் வைத்தும் மகிழ்ச்சியைக் கொண்டாடினர். அன்றைய தினம் முழுவதும் மன்னார்குடி பகுதி விழாக்கோலம் பூண்டது.

ஒரு இனத்தின் அடையாளம்!

நிழற்படமாக ஒரு சிறுமி தலைநிமிர்ந்து முன்நடக்க, வெற்றிபெற்ற துணை அதிபர் கமலா ஹாரிஸ் சிறுமியின் நிழலை பின்தொடர்வது போன்ற புகைப்
படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. புகைப்படத்தை வடிவமைத்தவர் ‘ப்ரையா கோல்லர்’ என்கிற அமெரிக்கப் பெண்மணி,யார் அந்த சிறுமி..? 1960ல் அமெரிக்காவில் வெள்ளை இனக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் கருப்பின மாணவர்கள் அனுமதிக்கப்படாத காலம். ‘ரூபி பிரிட்ஜஸ்’ என்கிற அந்த ஆறு வயது சிறுமி கருப்பினத்தைச் சேர்ந்தவள் என்பதால் அமெரிக்க பள்ளிகள் எதிலும் அவள் அனுமதிக்கப்படவில்லை. வெள்ளையர் பயிலும் பள்ளிகளில் கருப்பினக் குழந்தைகளும் சேர்க்கப்பட வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டபோதிலும் கருப்பினத்தவர் பயில அனுமதிக்கப்படவில்லை.

கருப்பின மாணவர்கள் சேர்வதை தடைசெய்ய பள்ளிகள் புதுயுக்தியைக் கையாண்டன. அதுதான் நுழைவுத் தேர்வு எனும் தடைக்கல். நுழைவுத் தேர்வில் கருப்பினக் குழந்தைகள் தேர்ச்சி பெற இயலாது என நினைத்தனர். என்றாலும் வில்லியம் ப்ரான்ட்ஸ் என்ற பள்ளியின் நுழைவுத் தேர்வில் 6 கருப்பினக் குழந்தைகள் எழுதி தேர்ச்சி பெற, அவர்களில் ஒரு சிறுமி மட்டும் அச்சமின்றி பள்ளியில் சேர்ந்தாள். தனது மகள் படித்தே ஆக வேண்டும் என்பதில் சிறுமியின் தாய் உறுதிகாட்ட, 1960 நவம்பர் 14 ல், நான்கு காவலர் உதவியுடன் சிறுமி தலை நிமிர்ந்து பள்ளி சென்ற புகைப்படமே,  இன்று கமலா ஹாரிஸ் என்கிற பெண்ணையும் அமெரிக்காவின் துணை அதிபர் என்கிற நிலைக்கு பின்தொடர வைத்துள்ளது.

அச்சிறுமி அன்று பள்ளிக்கு சென்றபோது நூற்றுக்கணக்கான வெள்ளையர்கள் முதல் நாளிலேயே பள்ளியின் வாசலில் குழுமி அவளுக்கு எதிராய் முழக்கமிட, அவளோ தனது தாயின் வாக்கின்படி தலைநிமிர்ந்து பள்ளிக்கு சென்றாள். அவளின் சிறிய ஜடையும் அவளோடு நிமிர்ந்து நின்றது. கருப்பினச் சிறுமிக்கு எதிர்ப்பைக் காட்டும் வகையில் வெள்ளையர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்த, ஆசிரியர்களும் பாடம் பயி்ற்றுவிக்க மறுத்தனர். அச்சிறுமி மட்டும் வகுப்பறையில் தனியாக இருந்தாள். பலரின் மிரட்டலுக்கு பயப்படாமல் தினமும் பள்ளிக்கு சென்றாள். கல்விதான் தன்னை விடுவிக்கும் என்ற சிந்தனை சிறுமி மனதில் ஆழமாகப் பதியவைக்கப்பட்டது.

குடும்பத்தினருக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படுவது கடைகளில் நிறுத்தப்பட்டது. சிறுமியின் தந்தை பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டார். ஆயிரம் இன்னல்கள் வந்தாலும் கல்வி கற்றே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள் சிறுமி. உறுதியுடன் இருந்து கல்வி பயின்றதுதான் அவளின் சாதனை.

எந்தப் பள்ளி அச்சிறுமியை வேண்டாம் என்று ஒதுக்கியதோ, அந்த பள்ளியிலேயே அவருக்கு இன்று சிலை நிறுவப்பட்டுள்ளது. நிழற்படமும் நிஜப்படமும்  இருவரது உறுதியையும் மற்றும் அதன் மூலம் அவர்கள் அடைந்த வெற்றியையும் எப்போதும் பறைசாற்றும் என்கிறார் ப்ரையா கோல்லர்.

மகேஸ்வரி நாகராஜன்

Tags : Kamala Harris ,
× RELATED காஸா மீதான தாக்குதலை நிறுத்துமாறு...