கலை வடிவமான மது பாட்டில்கள்!

நன்றி குங்குமம் தோழி

சுற்றுலா நகரமான புதுச்சேரியில் பயன்பாட்டுக்குப் பிறகு வீசியெறியப்படும் மது பாட்டில்கள் ஆங்காங்கே சாலையில் கிடப்பதுண்டு. அவற்றில் உடைந்து போன கண்ணாடி மதுபாட்டில்கள் பொதுமக்களுக்கு அதிக சிரமத்தையும் இடையூற்றையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்தப் பிரச்னை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், அவற்றையெல்லாம் சேகரித்து ஒவ்வொன்றிலும் தனித்துவமான ஓவியத்தை வரைந்து, அதை தன் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து வருகிறார் பட்டதாரியும் இல்லத்தரசியுமான திவ்யா.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்த இவர் சமுதாயத்தில் அவ்வப்போது ஏற்படும் சமூக நிகழ்வுகளை மையக் கருத்தாகக் கொண்டு அந்த பாட்டில்களில் ஓவியம் தீட்டி உபயோகமான பொருளாக அவற்றை மாற்றுகிறார். அந்த வகையில் பாலியல் வன்கொடுமை, கொரோனா பற்றிய விழிப்புணர்வு, மதுவால் ஏற்படும் கேடு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்துள்ளார்.

“கலை சம்பந்தமான வேலை செய்வதில் சிறுவயதிலிருந்தே ஆர்வம். அதனால் ஆறாவது படிக்கும் போதிலிருந்து ஓவியப் போட்டிகளில் பங்கேற்பேன். அதற்காகப் பல பரிசுகளும் வாங்கியிருக்கிறேன். ஆனால் முறையாக வகுப்புகளுக்குச் சென்று ஓவியம் கற்றதுக் கிடையாது. என் சொந்த ஆர்வத்தில் வீட்டிலேயே படங்கள் வரைவது, வீணா போகும் பொருட்களைக் கலை வடிவமாக்குவது என்று சிறுவயதிலிருந்தே செய்து வருகிறேன். அதுதான் இப்போது பாட்டில்களைப் பயன்படுத்தி வரைவது, அதை வண்ண வண்ண நிறங்கள் கொடுத்து அலங்காரமாக மாற்றுவதற்குக் காரணம் என நினைக்கிறேன்” என்று கூறும் திவ்யா, தற்போது இவ்வேலையை முழுநேரமாகவும், அதை ஒரு தொழிலாகவும் மாற்றியதன் காரணத்தைக் கூறினார்.

 

“கொரோனா காலத்தில் நாடே முடங்கிப் போயிருந்த போது, தெருக்களில் இருக்கும் நாய்களுக்கெல்லாம் உணவு எப்படிக் கிடைக்கும் என்று நானும் என் கணவர் பரத்தும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் ஏன் நாமே சமைத்துக் கொண்டு போய் கொடுக்கலாமே? என்று யோசித்து அதைச் செய்தோம். அப்படிப் போகும் போது பல இடங்களில் மதுப்பிரியர்கள் மது குடித்துவிட்டு பாட்டில்களைப் பொறுப்பில்லாமல் சாலைகளில் போட்டுச் சென்றிருந்ததைப் பார்த்தோம். அதைச் சேகரித்து ஏன் கலை வடிவமாக மாற்றக் கூடாது என்று ஆரம்பித்ததுதான் இந்த வேலை.  

ஒன்றிரண்டு வேலைகளைப் பார்த்து என் கணவரும், நண்பர்களும் ஊக்குவித்தனர். அதை ஆல்கஹால் பாட்டில் என்று யாரும் கமெண்ட் பண்ணாதது எனது வெற்றியாகப் பார்த்தேன். கொரோனா காலத்தில் இந்த பாட்டில்களில் கொரோனா பற்றிய விழிப்புணர்வுகள், பெண்களுக்கு நிகழும் பாலியல் வன்முறைகளைச் சித்தரிக்கும் படங்கள் மற்றும் சமூக அவலங்களை என் கலை மூலம் வெளிப்படுத்தினேன். நண்பர்களின் பிறந்த நாள், திருமணம் போன்றவற்றுக்கு அவர்களது புகைப்படங்களை வைத்து அலங்கரித்து பரிசாகவும் வழங்கினேன். இவ்வாறு நான் செய்து வரும் வேலையினை என் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட போது, அது வியாபாரமாக மாறியது. இதுவே எனக்கான தொழிலாகவும் ஆனது. ஏழு மாத குழந்தையை வைத்துக் கொண்டு, குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு இந்த வேலை செய்வது ஒரு சுகமெனச் சொல்லலாம்.

வரும் காலத்தில் ஆர்ட் கேளரி வைக்க ஆசையும், யோசனையும் இருக்கிறது. அதோடு பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தூக்கி எறியப்படும் மது பாட்டில்களைத் தூய்மைப் படுத்துவதோடு, அந்த பாட்டில்களைக் கொண்டே என் கலையின் மூலம் மது ஒழிப்பு குறித்தான விழிப்புணர்வைக் கொடுப்பேன். இவ்வாறு போடப்படும் உடைந்த மது பாட்டில்களால் பள்ளி செல்லும் குழந்தைகள், துப்புரவுப் பணியாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். மது குடிப்பது தனக்கு மட்டுமல்ல, தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் பாதிப்பு என்பதை மது குடிக்கும் ஒவ்வொருவரும் உணர வேண்டும்” என்று காட்டமாகச் சொல்கிறார் திவ்யா.

தொகுப்பு: அன்னம் அரசு

Related Stories: