-சுட்டிக்குழந்தை பிளாங்கா

நன்றி குங்குமம் தோழி

பெண் மைய சினிமா

உலகம் முழுவதும் ஆண்களுடன் ஒப்பிடும்போது விளையாட்டில் சாதிக்கும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அப்படியே ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற கனவு இருந்தாலும் குடும்பமும் சமூக அமைப்பும் பெண்களுக்கு எதிராகவே இருக்கின்றன. இதையெல்லாம் மீறி விளையாட்டில் சாதித்த பெண்களின் பெயர்கள் வரலாற்றில் பேரெழுத்துகளில் பதிவு செய்யப்படுகின்றன. இப்படி சைக்கிள் பந்தயத்தில் சாதித்த ஒரு சிறுமியின் கதை தான் ‘Dad Wanted’. கடந்த மாதம் நெட்பிளிக்ஸில் வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கின்றது இந்த ஸ்பானிய மொழிப் படம்.

சாதிக்கும் வெறி எப்போதும் முகத்தில் அப்பிக்கொண்டிருக்கும் சுட்டிக் குழந்தை பிளாங்கா. சீண்டிவிட்டால் கோபத்தை அடக்க முடியாதவள். ஸ்போர்ட்ஸ் சைக்கிள் ஓட்டுவதில் அவளை அடித்துக்கொள்ள ஆளில்லை. அவளின் அப்பா ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார். அதிலிருந்து பிளாங்காவை சைக்கிள் பக்கமே அம்மா விடுவதில்லை. கணவனுக்கு ஏற்பட்டதுபோல மகளுக்கும் ஏதாவது நடந்துவிடுமோ என்ற பயம். சைக்கிளைத் தொடுவதற்குக் கூட அனுமதிக்காத அம்மா மீது பிளாங்காவுக்குக் கடும் கோபம்.

அதனால் பல மாதங்களாக அம்மாவுடன் அவள் பேசுவதே இல்லை. வீட்டுக்குள் அந்நியர்களைப் போல இருவரும் நடந்துகொள்கிறார்கள். சைக்கிள் பற்றிய நினைவுகளிலே மூழ்கிக்கிடக்கிறாள் பிளாங்கா. அதனால் வீட்டுக்கு வெளியே மறைவான ஓர் இடத்தில் சைக்கிளை ஒளித்து வைத்து, அம்மா வீட்டில் இல்லாதபோது அதை எடுத்து ஓட்டி மகிழ்கிறாள். சைக்கிள் ஓட்டும்போது மட்டுமே அவள் முகத்தில் மகிழ்ச்சி தெறிக்கிறது.

அவளுக்கு விருப்பமான ஒன்று அம்மாவால் மறுக்கப்படுவதால் பள்ளியிலும் உடன் படிக்கும் சக மாணவர்களிடமும் அவளால் சரியாக நடந்துகொள்ள முடிவதில்லை. எல்லோரிடம் ஒருவித வெறுப்புடனே அணுகுகிறாள். ஊரிலேயே புகழ்பெற்ற சைக்கிள் பந்தயம் ஒன்று வருகிறது. இதில் கலந்துகொண்டு பணப்பரிசைத் தட்ட வேண்டும் என்பது பிளாங்காவின் கனவு, ஆசை. அம்மாவுக்குத் தெரியாமல் ரகசியமாக போட்டியில் கலந்துகொள்ள நினைக்கிறாள். ஆனால், இந்தப் போட்டி சிறுவர், சிறுமிகளுக்கு இடையே நடக்கிறது. அப்பா அல்லது அம்மாவின் அனுமதி கையொப்பம் இருந்தால் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள முடியும் என்பது விதி.

சைக்கிள் ஓட்டுவது தெரிந்தாலே அம்மா வீட்டுக்குள் விட மாட்டார். போட்டியில் கலந்துகொள்ள அனுமதிகேட்டால் அவ்வளவுதான். ஸ்கூலுக்குக் கூட அனுப்ப மாட்டார் என்று பயப்படுகிறாள் பிளாங்கா. இருந்தாலும் போட்டியில் எப்படியாவது கலந்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாள். பள்ளித் தோழியுடன் சேர்ந்து பொய்யான ஒரு அப்பாவைக் கண்டுபிடிக்க ஆடிஷன் வைக்கிறாள் பிளாங்கா. அந்த ஆடிஷனில் நிறைய பேர் கலந்துகொள்கின்றனர்.

ஆனால், அவர்களில் யாரும் பிளாங்கா நினைத்த மாதிரி இல்லை. சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொள்ள முடியாதோ என்று எண்ணி மனமுடைந்து போகிறாள். அப்பொழுது சில மாதங்களுக்கு முன் இறந்து போன மகளின் நினைவாகவே இருக்கும் ஒரு தந்தை அந்த ஆடிஷனில் கலந்துகொள்கிறார். அவர் ஒரு நடிகரும் கூட.

மகள் இறந்த பிறகு நடிப்பை விட்டுவிட்டு டாக்ஸி ஓட்டிக்கொண்டிருக்கிறார். தான் எதிர்பார்த்த எல்லா குணாதிசயங்களும் அவரிடம் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறாள் பிளாங்கா. முழு மனதுடன் அவரை அனுமதி கையொப்பம் போடுவதற்கான அப்பாவாகத் தேர்வு செய்கிறாள். நடிப்புத் தேர்வுக்காக என்று நினைத்து ஆடிஷனில் கலந்துகொண்ட அவர் அப்பாவாக நடிக்க மறுப்பு தெரிவிக்கிறார்.

பிளாங்கா அவரின் மகளை நினைவுபடுத்துவதால் சம்மதிக்கிறார். அப்பாவாக நடிக்க வந்தவர் பிளாங்காவின் நிஜ தந்தையின் இடத்தை எப்படி நிரப்புகிறார்... இறந்துபோன மகளின் இடத்தை பிளாங்கா எப்படி பிடித்துக் கொள்கிறாள்... சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொண்டு பிளாங்கா ஜெயித்தாளா... என்பதே நெகிழ்ச்சியான திரைக்கதை.

ஒரு மகளின் வாழ்க்கையில் தந்தையிடம் எவ்வளவு முக்கியமானது என்பதையும் ஒரு தந்தையின் உலகில் மகள் இடம் எவ்வளவு அற்புதமானது என்பதையும் இப்படம் அழகாக சித்தரிக்கிறது. கிளைமேக்ஸில் மட்டுமல்ல, பல இடங்களில் ஃபீல் குட்டாக இருப்பது மனதுக்குப் புத்துணர்வு அளிக்கிறது. மொழியைத் தாண்டி எல்லோரும் ரசிக்கும்படியாக ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜாவியர் காலினாஸ். குடும்பத்துடன் கண்டுகளிக்கலாம்.

தொகுப்பு: த.சக்திவேல்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories:

>