×

தித்திக்கும் தீபாவளி பட்சணங்கள்

நன்றி குங்குமம் தோழி

தீபாவளி என்று சொன்னாலே நம் மனதில் கொண்டாட்டம் குடிபெயர்ந்துவிடும். பட்டாடை அணிந்து குடும்பத்துடன் பட்டாசுகள் வெடித்து அன்றைய தினத்தை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் ஒன்று கூடி கொண்டாடும் நாள். அதற்கு அடையாளமாக நம் சந்தோஷத்தை மற்றவர்களுடன் பலகாரங்கள் கொண்டு பகிர்ந்து கொள்வது வழக்கம். தீபாவளி அன்று முறுக்கு, அதிரசம் மட்டுமில்லாமல் மற்ற இனிப்பு பண்டங்களை எவ்வாறு செய்யலாம் என்று விவரித்துள்ளார் நம் தோழி வாசகி.

நாம் தீபாவளிப் பண்டிகை அன்று லட்டு செய்வதை முக்கிய பலகாரமாக வைத்துள்ளோம். ஆனால் ஒரே மாதிரியான லட்டு செய்யாமல், பல வகை,
பலவிதமான லட்டுகளை செய்து தீபாவளிப் பண்டிகையை அசத்தலாம்.

மலர் லட்டு

தேவையான பொருட்கள்

அரிசிப் பொரி - 1 லிட்டர்,
வெள்ளை எள்ளு - 1/4 கிலோ,
முற்றிய தேங்காய் - 1,
சர்க்கரை - 1 கிலோ,
நெய் - தேவைக்கேற்ப,
ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி.

செய்முறை

முதலில் அரிசிப் பொரியை சுத்தம் செய்து வெறும் வாணலியில் அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் பொரியைப் போட்டு சிறு தீயில் மொறு மொறுவென்று ஆகும்வரை வறுத்து தனியே ஒரு தட்டில் கொட்டவும். பிறகு தேங்காயை துருவி வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். அதேபோல் எள்ளை சுத்தம் செய்து அடுப்பில் வெறும் வாணலி யில் படபடவென்று வெடிக்கும் வரை வறுக்க வேண்டும். வறுத்த அரிசிப்பொரி, தேங்காய்த்துருவல், எள் இம்மூன்றையும் மிக்ஸியிலோ (அ) உரலிலோ மாவாக அரைக்கவும். அந்த மாவை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு, அதோடு சர்க்கரை தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, நெய்யை சுட வைத்து கலவையுடன் சூடாக ஊற்றி ஒன்றாகக் கலந்துபின் உருண்டை பிடிக்கவும். இது ஒரு வித்தியாசமான, சுவையான லட்டு.

ரொட்டி லட்டு

தேவையான பொருட்கள்

காய்ந்த ரொட்டி - (பெரியது) 3,
கொப்பரைத்துருவல் - 1 கப்,
வெல்லம் - 300 கிராம்,
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
முந்திரிப்பருப்பு - 20,
உலர் திராட்சை - 20,
நெய் - 200 கிராம்.

செய்முறை

முதலில் காய்ந்த ரொட்டியை தூளாகச் செய்து தனியே வைக்கவும். முந்திரிப் பருப்பை பொடிக்கவும். வாணலியை  அடுப்பின்மேல் வைத்து முந்திரி, உலர் திராட்சையை வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் விட்டு, அதில் வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்து பாகு கெட்டியாகி இறுகி வருகையில் தூளாக்கிய ரொட்டி, கொப்பரைத்துருவல், நெய் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். பதமாக இறுகி வந்ததும், வறுத்து வைத்துள்ள முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய்த்தூளைப் போட்டு நன்றாகக் கிளறியபின் இறக்கவும். இந்தக் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக தாங்கக் கூடிய சூட்டில் எடுத்து உருண்டை பிடித்து தட்டில் வைத்து, ஆறியபின் டப்பாவில் போடவும். இதுவே ‘ரொட்டி லட்டு.’ காய்ந்து போன ரொட்டியை வீணாக்காமல், லட்டு தயாரித்து பண்டிகை நாட்களில் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு கொடுக்கலாம். சாப்பிட இனிப்பாய், சுவையாய் இருக்கும். செய்வது எளிது.

இனிப்பு லட்டு

தேவையான பொருட்கள்

மைதா மாவு - 300 கிராம்,
சர்க்கரை - 400 கிராம்,
பச்சரிசி மாவு - 2 தேக்கரண்டி,
சமையல் சோடா - 1 சிட்டிகை,
நிலக்கடலை வறுத்தது - 200 கிராம்,
ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி,
தேங்காய்- 1,
வறுத்த எள்ளு தூள் - 3 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவைக்கு.

செய்முறை

முதலில் மைதாமாவைச் சலித்து ஒரு பாத்திரத்தில் போடவும். அத்துடன் பச்சரிசி மாவு, சமையல் சோடா, உப்பு, சர்க்கரை - 100 கிராம் ஆகியவற்றைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தோசை மாவுபோல கரைக்கவும். பின் வறுத்த நிலக் கடலையை மிக்ஸியில் ரவைபோல் உடைத்துக்கொள்ளவும். அத்தூளை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் மீதமுள்ள சர்க்கரை, வறுத்த எள்ளு தூள், ஏலக்காய்த்தூள் துருவிய தேங்காய்த்துருவல் ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். பிசைந்தபின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். வாணலியில் தேவையான அளவு  எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்துக் காய வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை கொஞ்சம், கொஞ்சமாக எடுத்து, கரைத்து வைத்துள்ள மைதாவில் தோய்த்து எடுத்துப் போட வேண்டும். சிவக்க வெந்ததும் எடுக்கவும். இது சாப்பிட மொறு மொறுவென்று சுவையாய் இருக்கும்.

தேங்காய் லட்டு

தேவையான பொருட்கள்

முற்றின பெரிய தேங்காய் - 2,
சர்க்கரை - 400 கிராம்,
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்,
நெய் - தேவைக்கேற்ப,
கேசரி பவுடர் - சிறிது.

செய்முறை

முதலில் தேங்காயை உடைத்து துருவிக்கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அதில் சர்க்கரையைக் கொட்டி அடுப்பின் மேல் வைத்து சர்க்கரை கரைந்து லேசாக பிசுபிசுப்புப் பதம் வந்தவுடன் துருவிய தேங்காய், கேசரி பவுடர் போட்டு தண்ணீர் வற்றும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். பின் ஏலக்காய்த் தூள், நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியபின் இந்தக் கலவையை சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். இதுவே ‘தேங்காய் லட்டு’ ஒரு பெரிய தேங்காய்க்கு சுமார் 15 லட்டு வரை பிடிக்கலாம்.

அவல் லட்டு

தேவையான பொருட்கள்

அவல் - 400 கிராம்,
பொட்டுக்கடலை - 200 கிராம்,
சர்க்கரை - 1/2 கிலோ,
தேங்காய் - 1,
முந்திரி - 50 கிராம்,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
நெய் - தேவையான அளவு.

செய்முறை

அவல், பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து, வெறும் வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் தனித்தனியாக வாசனை வரும் வரை வறுத்து, இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து, மிக்ஸியில் மாவாக அரைத்துக்கொள்ளவும். சர்க்கரையையும் மிக்ஸியில் பவுடராக்கிக் கொள்ளவும். தேங்காய்த்துருவல், முந்திரியை சிறிது வாணலியில் நெய் விட்டு அடுப்பில் வைத்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பொடித்த சர்க்கரைத்தூள், அரைத்த மாவுகள், ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துருவல், வறுத்த முந்திரி இவற்றை எல்லாம் ஒரு பாத்திரத்தில் கொட்டி நன்றாகக் கலந்து கொண்டு, நெய்யை வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ந்தபின் கலந்து வைத்துள்ள கலவையில் கொட்டி, நன்றாகக் கலந்து, சிறு சிறு உருண்டைகளாகச் சூடாக இருக்கும்போது பிடிக்கவும்.

கோதுமை லட்டு

தேவையான பொருட்கள்

கோதுமை - 1/2 கிலோ,
கசகசா - 100 கிராம்,
பொட்டுக்கடலை - 100 கிராம்,
சர்க்கரை - 1/2 கிலோ,
நெய் - 2 கரண்டி.

செய்முறை

கோதுமையை ரவை போல் உடைத்துக்கொள்ளவும். சர்க்கரையை மாவாக அரைத்துக் கொள்ளவும். கசகசா, பொட்டுக்கடலை இவற்றை வெறும் வாணலியை அடுப்பில் வைத்து வறுத்து, பின் நைசாக மிக்ஸியில் அரைக்கவும். பின் ஒரு பாத்திரத்தில் உடைத்த கோதுமை ரவை, சர்க்கரைத்தூள், மாவாக்கிய பொட்டுக்கடலை, கசகசா இவற்றைப் போட்டு கலந்து, துளி துளியாய் நெய்யும், வெந்நீரும் தெளித்து தெளித்துப் பிசைந்து உருண்டைகள் பிடித்து  இட்லி பானையை அடுப்பில் வைத்து ஆவியில் வேக வைக்கவும். தேவைப்பட்டால் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கொள்ளலாம். வெந்தபின் இறக்கி ஆற வைத்து சாப்பிடலாம். குழந்தைகள், பெரியவர்களுக்கான சத்தான ‘கோதுமை லட்டு’. இதை மாலை நேரங்களில் வீட்டிற்கு வருபவர்களுக்குக் கொடுக்கலாம்.

உளுந்தம்பருப்பு லட்டு

தேவையான பொருட்கள்

உளுந்தம்பருப்பு - 1/2 கிலோ,
சர்க்கரை - 1/2 கிலோ,
ஏலக்காய் - 5,
முந்திரி - 50 கிராம்,
டால்டா (அ) நெய் - 1/4 கிலோ.

செய்முறை

உளுந்தம்பருப்பைச் சுத்தம் செய்து வெறும் வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் உளுந்தம்பருப்பைப் பொன்னிறமாக வறுக்கவும். வறுத்த உளுந்தம்பருப்பு, சர்க்கரை, ஏலக்காய் கலந்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொண்டு, பின் ஒரு பாத்திரத்தில் போடவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய்யை ஊற்றி சிறிது சூடு ஆனபின் கலந்து வைத்துள்ள கலவையில் கொட்டி, நன்றாகக் கலந்து பக்குவமானச் சூட்டில் உருண்டைகள் பிடிக்கவும். நடுவில் ஒவ்வொரு முந்திரிப்பருப்பை வைக்கலாம்.

- என்.குப்பம்மாள், கிருஷ்ணகிரி.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags : Deepavali Patsanas ,Didi ,
× RELATED சாயல்குடி அருகே திதி கொடுக்க சென்ற 2...