×

?காதலிக்கும் பேத்தியால் மதப் பிரச்னை

நன்றி குங்குமம் தோழி

தீபாவளி ஸ்பெஷல்  

அன்புடன் தோழிக்கு,

தோழி என்பதை விட மகளே என்று அழைக்கலாம் என நினைக்கிறேன். எனக்கு வயது 74. என் கணவருக்கு 80 வயது. எங்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள். எல்லோருக்கும் திருமணமாகி விட்டது. நாங்கள் அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசிக்கிறோம். எனக்கும், என் கணவருக்கும் சர்க்கரை வியாதி உள்ளது. கூடவே உயர் ரத்த அழுத்தமும் இருக்கிறது. எங்கள் இருவருக்கும் ஆழ்ந்த மதப்பற்றும், கடவுள் நம்பிக்கையும் உள்ளது. எனது மகள்கள், மகன்கள், மருமகன்கள், பேரன்கள், பேத்திகள் என்று எல்லோரும் ஒரே வீட்டில் ஒன்றாகத்தான் வசிக்கிறோம். மகள்தான் எல்லோருக்கும் பெரியவள்.அந்த மூத்த மகளுக்கு இரட்டை குழந்தைகள். அதில் ஒரு குழந்தை பெண், மற்றொன்று ஆண்.

மகளுக்கு வேறு பிள்ளைகள் கிடையாது. எங்கள் வீட்டில் படிப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்போம். மகளின் பிள்ளைகள் இருவருக்கும் இப்போது 24 வயது. இருவரும் பொறியியல் பட்டப்படிப்பை முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். பெரியவர்களை மதிக்கும் குணத்துடன்தான் வளர்த்திருக்கிறோம். அதில் பெண் குழந்தை பள்ளியில் 10வது படிக்கும் போதே கூட படித்த வேறு மதத்தைச் சேர்ந்த பையனை காதலித்துள்ளாள். காதலிக்கும் போதே அந்த வாலிபனிடம், ‘நீ எங்கள் மதத்திற்கு மாறினால்தான் நம் திருமணம் நடக்கும்’ என்று உறுதியாக சொல்லி இருக்கிறாள். இந்த விவரங்கள் எல்லாம் எங்களுக்கு சமீபத்தில்தான் தெரியும்.

அந்த வாலிபன் சிறு வயதிலேயே தாயை இழந்தவன். அவனது தந்தை மறுமணம் செய்து கொண்டு விட்டார். அதனால் அந்த வீட்டில் யாரும் அவனுக்கு ஆதரவாக இல்லை. எனவே தாயன்புக்கு ஏங்கிய அந்த வாலிபன், தனது காதலியிடம் கிடைத்த அன்பு, பாசத்திற்காக மதம் மாறவும் ஒப்புக் கொண்டுள்ளான். அதன்படி தன் தந்தை, சித்தியிடம் கூட சொல்லாமல் நண்பர்களின் உதவியுடன் எங்கள் மதத்திற்கு மாறியுள்ளான். கூடவே பெயரையும் மாற்றிக் கொண்டு விட்டான். அதை தமிழக அரசின் அரசிதழிலும் பதிவு செய்து விட்டான்.இந்த விவரங்களை தாமதமாக தெரிந்து கொண்ட அவனது அப்பா, பையனை வீட்டை விட்டு விரட்டி விட்டார். இப்போது வாடகை வீட்டில் தங்கியிருக்கிறான். படித்து முடித்து விட்டு வேலைக்கும் போய் வருகிறான். அவனை காதலிக்கும் பேத்திதான் எங்களுக்கு மூத்த பேத்தி. அவளை தவிர மற்ற பிள்ளைகளின் குழந்தைகளையும் சேர்த்து இன்னும் 4 பேத்திகள் இருக்கின்றனர். அவர்கள் 4 பேரும் இப்போது திருமண வயதில் தயாராக இருக்கின்றனர். மீண்டும் நினைவுப்படுத்துகிறேன் நாங்கள் அனைவரும் இப்போதும் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகிறோம்.

மூத்த பேத்தி காதல் விவகாரம் இப்போது வீட்டில் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அப்படி அவள் காதல் திருமணம் செய்வதில் எங்கள் மருமகன்களுக்கும், மகன்களுக்கும், மருமகள்களுக்கும் கொஞ்சமும் உடன்பாடில்லை. இந்த திருமணம் நடந்தால் மற்ற பேத்திகளின் திருமணம் நடப்பதில் சிக்கல் ஏற்படும் என்று பயமுறுத்துகிறார்கள். சொந்த குடும்பத்தினருக்கும், அதுவும் அப்பாவுக்கும் தெரியாமல் மதம் மாறியவன், பெயரை மாற்றிக் கொண்டவன், மறுபடியும் மதத்தை மாற்றிக் கொள்ள மாட்டான் என்பது என்ன நிச்சயம் என்று அவர்கள் கேட்கிறார்கள். நாளை ஏதாவது பிரச்னை வந்து மதம் மாறி விட்டால் எல்லாருக்கும் தானே பிரச்னை என்று சொல்கிறார்கள்.

பேத்தியின் காதல் திருமண பேச்சுவார்த்தைகளால் எங்கள் குடும்பத்தின் அமைதியும், ஒற்றுமையும் குலைந்து போகுமோ என்று பயமும், கூடவே குழப்பமும் ஏற்பட்டுள்ளது. ‘அந்த பேத்தியை கைகழுவி விட்டு விடுங்கள்’ என்று மற்றவர்களும், உறவினர்களும் சொல்கின்றனர். அப்படி செய்தால் ஏதாவது புதிதாக பிரச்னைகள், குழப்பங்கள் வருமோ என்று கவலையாக இருக்கிறது. இதற்கு என்ன செய்வது என்று புரியவில்லை. இதற்கு நீதான் வழி சொல்ல வேண்டும் தோழி போன்ற மகளே!

இப்படிக்கு
பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,

நானும் உங்களை அம்மாவாக நினைத்துதான், உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன். உங்கள் பேத்தி வேற்று மதத்தவரை காதலித்துள்ளார். அதை ஏற்பதில் உங்களுக்கு சிக்கல் உள்ளது. அவர் மதம் மாறிய பிறகும் உங்களுக்கு ஒப்பவில்லை என்று தோன்றுகிறது. இதில் உங்களின் விருப்பத்தை விட திருமணம் செய்து கொள்ளும் பெண் மற்றும் ஆணின் விருப்பம் தான் முக்கியமானது. அதற்கு அடுத்துதான் பெற்றோர்களின் விருப்பமும், பங்களிப்பும். நீங்கள் இந்த வயதான காலத்தில் இதைப்பற்றி அதிகமாக யோசிப்பது சரியானதாக இருக்காது. நீங்கள் குழப்பமடைய தேவையில்லை. என்னைப் பொறுத்தவரை திருமணம் என்பது இரண்டு மனங்களின் இணைப்பு. அது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது. சில குடும்பங்கள் காதல் திருமணங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும்.

முக்கியமாக வேறு மதம், வேறு சாதி என்றால் இப்படி எதிர்ப்பார்கள். உங்கள் குடும்பத்தவர்கள் காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்வார்களா, இல்லையா என்பது உங்களுக்கு தான் தெரியும். அக்கம்பக்கத்தினர்  உங்கள் குடும்பம் சார்ந்த விஷயங்களில், முடிவுகளில் தலையிடுவது தேவையில்லாதது. நீங்கள் எடுக்கும் முடிவுக்கான விளைவுகளை நீங்கள்தான் சந்திக்க நேரிடும். நீங்கள் குடும்பத்தினருடன் கலந்து ஆலோசியுங்கள். உங்கள் பேத்தியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கும் முடிவுதான் சரியாக இருக்கும். எனவே உங்கள் பேத்தியுடன் கலந்து ஆலோசித்து என்ன முடிவு ஏற்புடையதாக இருக்கும் என்று தீர்மானியுங்கள். இதில் உங்கள் பேத்தியின் முடிவுதான் முக்கியம்.

உங்கள் பேத்திக்கும், அவளது காதலருக்கும் தங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும்  உரிமையுள்ளது. அப்படி திருமணம் செய்தால், அவளை ஏற்றுக் கொள்வதில் உங்களுக்கு சிக்கல் இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதை எப்படி சமாளிப்பது என்று நீங்கள்தான் யோசிக்க வேண்டும். ஒருவேளை அவளை ஒதுக்கி வைத்தால் அதனால் ஏற்படும் விளைவுகளையும் நீங்கள் சந்திக்க வேண்டும். உங்கள் பேத்தியின் காதல் திருமணம் சம்பந்தமாக உங்களின் மனநிலை என்ன? உங்களால் அந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடிகிறதா இல்லை உங்கள் பேத்தியுடன் உறவை முடித்துக் கொள்ளலாமா என்று முடிவெடுக்கும் உரிமை உங்களை சார்ந்தது. எந்த முடிவு எடுத்தாலும் அதன் சாதக, பாதகங்களை கருத்தில் கொண்டு உங்களால் மனதளவில் ஏற்றுக் கொள்ளும்படியாக முடிவெடுங்கள்.

ஒரு வேளை உங்கள் பேத்தியின் திருமணத்தால் மற்ற பேத்தி, பேரன்களின் வாழ்க்கையை பாதிக்கும் என்று கருதினால் இது சம்பந்தமாக நீங்கள் உங்கள் பேத்தியுடன் கலந்து ஆலோசிக்கலாம். உடலளவில் உங்களுக்கு பாதிப்புகள் உள்ளன. ஆகையால் நீங்கள் மனதைப் போட்டு குழப்பிக் கொண்டு இருக்காமல் உங்கள் மகள், மருமகன்,பேத்தி மற்றும் குடும்பத்தினருடன் விவாதித்து நல்ல முடிவை எடுங்கள்.

ஒருவேளை அவர்கள் முடிவு செய்வதில் உங்களுக்கு விருப்பமில்லை எனில் அவர்களின் போக்கிற்கு விட்டுவிடுங்கள். நீங்கள் அதிகமாக உங்களை ஈடுபடுத்திக் கொண்டு மனதளவிலும் உடலளவிலும் உங்களை வருத்திக் கொள்ள வேண்டாம். அதுதான்  உங்கள் மன நலத்திற்கும், உடல் நலத்திற்கும் நல்லது.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி
பகுதிக்கான கேள்விகளை எழுதி
அனுப்ப வேண்டிய முகவரி

‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600 004


வாசகிகள் கவனத்துக்கு,

பிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள். சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...

Tags : granddaughter ,
× RELATED 2ம் நிலை காவலர் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு