×

நீ வரும்போது நான் மறைவேனா!

நன்றி குங்குமம் தோழி

தீபாவளி ஸ்பெஷல்

ஆஹா மழை காலமா? பூமி குளிர்ந்து மண்வாசனை காற்றோடு சேர்த்து நமது நாசிகளையும் தொட்டு.. அப்படியே நம்மையே கிறங்கடிக்கும். கார்மேகம் சூழ மழை வந்தாலே மனதுக்கு மகிழ்ச்சிதான்… அதுவே அதிகாலை பரபரப்பாய் அலுவலகத்திற்கு கிளம்பும் நேரம் என்றால்? காலை நேரத்தில் மழை வரத் தொடங்கினாலே இன்றைய நாளை நனையாமல் எப்படி காப்பாற்றுவது என்கிற யோசனைதான் பெரும்பாலானவர்களின் மனதில். கவலையே வேண்டாங்க என மழைக்காலத்திற்கு ஏற்ற உடைகளுக்கு பல டிப்ஸ்களை நமக்காக அள்ளித் தருகிறார். ‘லா பிரின்ஷஸ் டிசைன் ஸ்டோர்’ ஸ்டைல் கன்சல்டன்ட் தபு இங்கே.

மழை நாட்கள்தான் மனதுக்குள் பரவசத்தோடு ரொமான்டிக்கை கிளப்பும். துளி துளியாய் இறங்கும் மழைநீர் நம் கண் முன்னே அழகிய நீர் குமிழ்களையும் அலைகளையும் சாலைகளில் உருவாக்கி அப்படியே நம்மை பரவசப்படுத்தி மகிழ்விக்கும். இந்தக் கண்கொள்ளாக் காட்சிகளை ரசிக்கஆரம்பித்தாலே மழைக்காலமும் நமக்கு மகிழ்ச்சிதான் என்கிறார் இவர்.

எந்த  உடையாக இருந்தாலும் மழையால் பாழாகத்தானே போகிறது என்கிற மன நிலையில், ஏதோ ஒரு டல்லான உடையை உடுத்தி டல்லான மூடில் ஏனோதானோ என்று வீட்டில் இருந்து கிளம்பிவிடுவோம். மழை நேரத்தில் உடுத்தும் உடையிலும் கவனம் வைத்து, வெண்மை மற்றும் டல்லான நிறங்களைத் தவிர்த்து அடர்த்தி நிறம் கொண்ட எளிதில் உலரக்கூடிய தன்மையுள்ள கலர்ஃபுல் சிந்தெட்டிக் மெட்டீரியல்ஸ் உடைகளை தேர்ந்தெடுத்து இந்த நேரத்தில் உடுத்தலாம்.

சேலை உடுத்தும் பெண்கள் காட்டன் சேலையாக இருந்தால் லேசான அடர்த்தி தன்மை கொண்ட(light weighted) காட்டன் அல்லது சிந்தெட்டிக் காட்டன், சில்க் மெட்டீரியல், ஷிஃபான் மற்றும் ஷார்ஷெட் வகைச் சேலைகளை தேர்ந்தெடுத்து அணிவதே மழை காலத்திற்கு நல்லது. சேலைக்குப் பொருத்தமாக சில்க் காட்டன் ப்ளவுஸ்களாக இருந்தாலும் சிறப்பு.

சேலை தவிர்த்து மற்ற உடைகளை அணியும் பெண்கள், சல்வார் உடையாக இருந்தால் குறைவான உயரம் கொண்ட டாப்ஸ் (short type tops) ஷார்ட் குர்தீஸ், லெக்சின்ஸ் மற்றும் சிந்தெட்டிக் பேப்ரிக்ஸ் கொண்ட சுடிதார், சல்வார்களை அணியலாம். அடர்த்தியான நிறம் கொண்ட ஷாட்டின்(satin), ஈகாட்(ecote), பிராஷோ(brasso) மெட்டீரியல் வகை உடைகளை அதிகம் தேர்ந்தெடுத்து அணிவது ரொம்பவே ஏற்றது.

மழையில் நனைந்தாலும் அதில் படிந்துள்ள அழுக்கு, மண் கறைகள் தெரியாத வண்ணம் மிலிட்டரி பிரிண்ட் வகை டாப்ஸ்கள் மற்றும் அடர்த்தியான நிறத்தில் பெரிய பூக்கள் கொண்ட சிந்தெட்டிக் ரா சில்க்ஸ் வகை டாப்ஸ்கள் ஆன்லைன் ஷாப்பிங்கிலும் கிடைக்கின்றன. இவை மழையில் நனைந்தாலும் விரைவில் உலரும் தன்மை கொண்டவை.

பட்டியாலா, பிளாஷோ (blazzo) மற்றும் லாங் ஸ்கெட், நீளமான துப்பட்டா, மிகவும் நீளமான அனார்கலி வகை உடைகள், மிக நீளமான டாப்ஸ்களை (long tops) அணிந்தால் அவை மழையில் பாழாகும். இவற்றை அணிவதை மழை நேரத்தில் தவிர்க்கவும். அதேபோல் டெனிம் வகை துணிகளையும் விரைவில் உலராத ஜீன்ஸ் போன்ற கனமான உடைகளை முற்றிலும் தவிர்த்தலே நல்லது. நீளமாய் அணியும் துப்பட்டாவிற்குப் பதில் ஸ்டோல்ஸ், ஸ்கார்ப்ஸ் வகை துணிகள் கொண்டு கழுத்தைச் சுற்றி கவர் செய்து கொள்ளலாம். ஜீன்ஸ்க்குப் பதில் ஜெக்கின்ஸ் பெண்களுக்கு ஏற்றது.

இது பார்க்க ஜீன்ஸ் தோற்றத்தை தந்தாலும் லெக்கின்ஸ் வகையைச் சேர்ந்தது என்பதால் மழையில் நனைந்தாலும் விரைவில் உலரும் தன்மை கொண்டது. மழைக் காலத்தில் பெண்கள் முடியைத் தளர்வாய் பறக்கும் விதத்தில் விட்டுச் செல்லாமல் போனி டைல் மற்றும் முடியை முழுவதும் தூக்கிப்போட்டும் நாட் டைப் ஸ்டைல் கொண்டைகளை பிடித்த வகையில் ஸ்டைலாகப் போட்டுக் கொள்ளலாம்.

இது முடி மழையில் நனைவதைக் குறைக்கும். அதேபோல் பவுண்டேசன் டைப் முக அலங்காரங்களை மழை நேரத்தில் போடுவதைத் தவிர்க்க வேண்டும். இவை மழைநீர் முகத்தில் பட்டால் கரைந்து வடியத் துவங்கும். அதற்குப் பதில் வீட்டில் அன்றாடம் பயன்பாட்டில் உள்ள பவுடர்களை பயன்படுத்துவதே சிறந்தது.

ப்ளாஸ்டிக்கால் ஆன அணிகலன்கள், பொட்டு வகைகளே மழைக்கு ஏற்றது. அதைவிட ரெகுலர் டைப் தங்க நகைகள் சிறந்தது. மற்ற மெட்டல் அணிகலன்கள் தண்ணீர் பட்டதும் தோல்களில் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அதேபோல் ரிஸ்ட் வாட்ச் அணிபவர் எனில், பல வண்ண வாட்டர் ப்ரூஃப் ரெஸிடண்ட் (waterproof) டைப் வாட்ச் பிளாஸ்டிக் மோல்டில் கிடைக்கிறது. அதில் மேல் பக்க கண்ணாடியும் ரப்பர் பிரேமில் இருக்கும்.

ஹாவாய் மற்றும் கேன்வாஸ் வகை ஷூ அணிவதை மழைநேரத்தில் தவிர்த்தல் நல்லது. அதற்குப் பதில் ப்ளாஸ்டிக் வகை காலணிகள் இப்போது அதிக அளவில் கிடைக்கின்றன. இவை கண்ணைக் கவரும் விதமாக பல்வேறு நிறங்களில் நம் ரசனைக்கேற்ப தயாராகி விற்பனைக்கு வருகின்றன. இவை அணிவற்கு சுலபமாகவும், மழையில் நடக்க ஏற்ற வகையிலும், சாலைகளை கடக்கும்போது மழை நீரில் வழுக்காமலும், காலணி வீணாகாத விதத்திலும் கிடைக்கிறது. இவை தவிர்த்து பிளாட்டர்ஸ்(floaters), சினிக்கர்(snicker) வகை காலணிகளும் மழை நேரத்திற்கு அணியச் சிறந்தது.

அலுவலகம் அல்லது ஷாப்பிங் செல்லும்போது மழையில் நனையாத வாட்டர் புரூப் பெரிய சைஸ் பைகளை உடன் எடுத்துச் செல்லலாம். இவற்றில் பெரிய படங்கள் பிரிண்ட் செய்யப்பட்டு தேவைக்கேற்ற சைஸ்களில் கிடைக்கிறது.  மழையில் நனைந்தாலும் பிழிந்துவிட்டு பயன்படுத்தக்கூடிய ஜெல்லி டைப் கை பைகள், பர்ஸ்கள் விற்பனையில் உள்ளன. அதேபோல் மழை நேரத்தில் எப்போதும் நம் கைபையில் மாற்றிக்கொள்வதற்கென ஒரு செட் உடைகள் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

நமது விலை உயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள் மழை நீர் உட்புகுந்து பாழாகாமல், பாதுகாப்பாக இருக்க தண்ணீர் உட்புகாத வாட்டர் ரெஸிடென்ட் கேட்ஜெட்ஸ் கவர்களை (water resistant gadgets) மழை நேரப் பாதுகாப்பிற்கு பயன்படுத்தலாம். இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் பெண்கள் மழையிலும் நனையாமல், அணிந்திருக்கும் உடையும் வெளியில் தெரியும் வண்ணம் டிரான்ஸ்பெரன்ட்(transparent) வகை ரெயின் கோர்ட்கள் விற்பனையில் உள்ளது.  அதேபோல் மாடர்ன் லுக் மோனோகிராம் ப்ரிண்ட் செய்யப்பட்ட ப்ரைட் கலர்ஸ் ப்ளாரஷென்ட் குடைகள்(umbrellas) பல்வேறு வண்ணங்களில் வருகின்றது.

இந்தக் குடைகள் நம் வீட்டு குட்டீஸ் மற்றும் இளம் பெண்கள் மழையினை ரசித்து குதூகலித்து நடக்க மிகவும் ஸ்டைலிஷாக வடிவமைக்கப்பட்டுள்ளன.ஆஹா மழையை கொண்டாட இத்தனை விஷயங்களா என யோசிக்கத் துவங்கிவிட்டீர்களா… “மேகம் கொட்டட்டும்… ஆட்டம் உண்டு…” எனப் பாடியவாறே மழையை வரவேற்போம்.. மகிழ்ச்சியாக.. துள்ளல்களோடு..

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!