கொரோனாவிற்குப் பின் ஏற்படும் பிரச்னைகளும் தீர்வுகளும்!

நன்றி குங்குமம் தோழி

கொரோனாவில் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட சிலர், குணமாகிய பின்னும் ஓரிரு அறிகுறிகள் நீடிப்பதாக மருத்துவர்களை அணுகி வருகின்றனர். வறட்டு இருமல், சோர்வு, மூச்சுவிடுவதில் சிரமம் ஆகிய சில பிரச்னைகள் கொரோனாவிலிருந்து மீண்ட பின்பும் தொடர்வதாக கூறியுள்ளனர். இது குறித்து விரிவாக விளக்குகிறார், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் கைநுட்ப மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் தீபா. ‘‘இத்தாலியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கோவிட்-19லிருந்து மீண்ட 87.4% நோயாளிகள், குறைந்தது ஒரு அறிகுறி நீடிப்பதாகவும், குறிப்பாகச் சோர்வு மற்றும் மூச்சு பிரச்னை இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். கொரோனாவிலிருந்து மீண்டு இரண்டு மாதங்கள் கழித்தும் இப்பிரச்னைகளுடன் மக்கள் மருத்துவமனை வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, கொரோனாவால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுக் குறிப்பாகச் செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்ட 1-2% நோயாளிகளுக்குத்தான் கொரோனாவிற்குப் பின்னும் சில பிரச்னைகள் தொடர்கிறது” என்கிறார் மருத்துவர் தீபா.

“கொரோனா நோயாளிகள் உடலில் ஃபெரிட்டின் (Ferritin) அளவு அதிகரித்தால் நோயின் தீவிரமும் அதிகமாகும். ஃபெரிட்டின், இரும்புச்சத்தைச் சேகரிக்கும் ஒரு ரத்த புரதம். உடலில் இரும்புச் சத்து குறையும் போது, ஃபெரிட்டினிலிருந்து ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும் இரும்புச் சத்து வெளிப்பட்டு ரத்த சோகை ஏற்படாமல் காக்கும். ஆனால் இதன் அளவு அதிகமாகும் போது, நோயின் தீவிரமும் அதிகரிக்கலாம். பல ஆய்வுகளில், கொரோனா நோயாளிகளின் இறப்புக்கு ஃபெரிட்டின் அளவு அதிகரிப்பும் காரணமாகக் கூறப்படுகிறது. கொரோனாவில் பாதிக்கப்பட்டாலும் அறிகுறிகள்  இல்லாத  நோயாளிகள் இந்த பிரச்னை

குறித்து கவலைகொள்ளத் தேவையில்லை. அறிகுறிகள் இல்லை என்றால் வைரஸ் தொற்று, நுரையீரலுக்குச் செல்லவில்லை என்று அர்த்தம். ஆனால், செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சையிலிருந்த நோயாளிகள் மட்டும், சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், கொரோனாவிலிருந்து முழுமையாகக் குணமாகி மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பலாம்” என்கிறார்.

கொரோனாவில் மீண்டவர்கள் மன அழுத்தத்திலும் பாதிக்கப்படலாம் என்று கூறும் மருத்துவர், “உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மக்கள் கொரோனாவிலிருந்து மீண்டாலும், கடுமையான மன அழுத்தத்தில் பாதிக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளது. கொரோனா சமயத்தில் ஆக்ஸிடேட்டிவ் மன அழுத்தம் ஏற்பட்டிருந்தால், உடலில் இருக்கும் செல்களும் திசுக்களும் சேதமடைந்து, ரத்தத்தில் கட்டிகள் உருவாகும். உடலில் எந்த உறுப்பில் கட்டிகள் உருவாகிறதோ, அந்த உறுப்பு பாதிக்கப்படும்” என்கிறார். இந்த பிரச்சனைகளிலிருந்து மீள சில எளிமையான தீர்வுகளையும் விவரிக்கும் தீபா, “முதலில், கொரோனாவிலிருந்து குணமானவர்கள் தினமும் ‘சன் எக்ஸ்போசர்’ எடுக்க வேண்டும். அதாவது, காலை சூரிய உதயத்தில் அல்லது மாலை சூரிய அஸ்தமத்தில் 15-20 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்கவேண்டும். இதன் மூலம் சுலபமாக வைட்டமின் டி நம் உடலுக்குக் கிடைப்பதால், எதிர்ப்புச் சக்தி தானாகவே உடலில் உருவாகி சுறுசுறுப்பை அளிக்கிறது.

நம் வீட்டு சமையலறையில் இருக்கும் மஞ்சளில் குர்க்குமின் என்ற வேதிப் பொருள் அதிகமாக இருக்கிறது. இது நம் உடலில் சுரக்கும் ஃபெரிட்டின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கால் ஸ்பூன் மஞ்சள் தூளைப் பாலில் அல்லது க்ரீன் டீயில் கலந்து தினமும் குடிக்கலாம். எங்கள் மருத்துவர்கள், நிபுணர்கள் எனப் பலரும் இணைந்து கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் இயற்கை பானத்தை உருவாக்கியுள்ளோம். இதனை நம் தமிழ்நாட்டு அரசு அங்கீகரித்துள்ளது.

* நெல்லிக்காய் சாறு 50 மிலி, துளசி சாறு 50 மிலி, இஞ்சி சாறு 10 மிலி, எலுமிச்சை சாறு 5 மிலி, மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி அனைத்தையும் 150 மிலி தண்ணீருடன் கலந்து அருந்த வேண்டும். பெரியவர்கள் 250 மிலி, சிறியவர்கள் 100 மிலி அளவு தினமும் எடுத்துக்

கொள்ளலாம்.

* இஞ்சி (5 கிராம்) + துளசி (10 கிராம்) + மிளகு (1/4 டீஸ்பூன்) + அதிமதுரம் (5 கிராம்)+ மஞ்சள் (1/4 டீஸ்பூன்) அனைத்தையும் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும். சுவைக்கு தேன் அல்லது வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம். இதில், விட்டமின் சி, துத்தநாகம், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன. இரும்புச்சத்தையும் கட்டுக்குள் வைக்கிறது. உடலுக்கு வலு சேர்ப்பதுடன், கொரோனாவிற்கு பின் ஏற்படும் மன அழுத்தத்தையும் போக்கும்.

* பாதாம், வால்நட், பிஸ்தா, வேர்க்கடலைப் போன்ற நட்ஸ் வகைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* கொரோனாவிலிருந்து மீண்டவர்கள், குறிப்பாக ஃபெரிட்டின் அளவு அதிகரித்த நோயாளிகள், தங்கள் உணவில் இரும்புச் சத்தை தவிர்ப்பது நல்லது.

* ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* ஒவ்வொரு உணவு தயாரிப்பிலும் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்வது அவசியம்.

* தினமும் 2 முதல் 3 முறை வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தொண்டையில் படுமாறு வாய் கொப்பளிக்கவேண்டும்.

* முளைக்கட்டிய பயிர் வகைகள், பீன்ஸ், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், முருங்கை, அரை கீரை / சிறுகீரை, முருங்கைக்காய், வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு, முட்டைக்கோஸ், கேரட் போன்ற சத்தான காய்களுடன், கொய்யா, ஆப்பிள், வாழைப்பழம், பப்பாளி சாப்பிட வேண்டும்

* தினமும் பத்து விநாடிகளில் தொடங்கி, ஒரு நிமிடம் வரை மூச்சு பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். ரிதமிக் மூச்சுப்பயிற்சி - வயிற்றுச் சுவாசம், மார்பு சுவாசம், தோள்பட்டை சுவாசம் எனப் பல வகை மூச்சுப் பயிற்சியும் நுரையீரலின் திறனை அதிகரிக்கும்.

இப்படி நம் உடலில் இயற்கையாக எதிர்ப்பு சத்தை அதிகரித்து, ஆக்ஸிஜனை அதிகரித்து, நுரையீரல் திறனை மேம்படுத்தி, ஃபெரிட்டின் அளவைக் கட்டுக்குள் வைத்து, மூச்சுப் பயிற்சியும், உடற் பயிற்சியும் செய்து வந்தால், செல்/உறுப்பு பாதிப்பைக் கட்டுப்படுத்திவிட முடியும். இது நம் உடலுக்கு எந்த தீங்கும் பக்க விளைவுகளும் ஏற்படுத்தாது, வீட்டிலேயே சுலபமாகப் பின்பற்றக்கூடிய வழிமுறைகள். பொறுமையுடன் தினமும் இந்த செயல்முறையைப் பின்பற்றினாலே, கொரோனாவிற்குப் பின் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும்’’ என்றார் டாக்டர் தீபா.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: