பூவும், பொட்டும் பெண்ணுரிமையா?

நன்றி குங்குமம் தோழி

என்ன செய்வது தோழி

அன்புடன் தோழிக்கு,

எங்கள் ஊரில் கோவில்களும், கடவுள் நம்பிக்கையும் அதிகம். சிறு வயதில் இருந்தே கோவில்களுக்கு செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் படித்து முடித்து கல்யாணத்திற்காக காத்திருந்தபோது, அடிக்கடி கோவில்களுக்கு செல்வேன். கூடவே செவ்வாய் தோஷமும் இருந்ததால் ஒருகட்டத்தில் தினமும் கோவில்களுக்கு போவது வழக்கமானது. ஆம். செவ்வாய் தோஷம் என்பதால் வந்த வரன் எல்லாம் தட்டிக் கொண்டே போயின. தைரியமாக பெண் பார்க்க வந்த சிலரும்,  வரதட்சணையை உயர்த்தி கேட்டதுதான் மிச்சம். அரசு ஊழியராக இருந்தாலும், அவர்கள் கேட்ட தொகையை ஒப்புக் கொள்வதில் அப்பாவுக்கு சிரமம் இருந்தது. ஒருமுறை பத்திரிகை அடிக்கும் தருவாயில் திருமணம் நின்றுபோனது. செவ்வாய் தோஷத்தால் தள்ளிப் போன திருமணம், ஒருகட்டத்தில் வரதட்சணையால் தள்ளிப்போக ஆரம்பித்தது.

அந்த நேரத்தில்தான் ஒரு வரன் வந்தது. அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால் எங்களுக்கு ஜாதகம் வாங்கவே விருப்பமில்லை. மீறி அழைத்தபோது,

‘எங்களுக்கு கடவுள், மத சடங்குகளில் நம்பிக்கை இல்லை. ஆனால் உங்க நம்பிக்கைக்கு தடை சொல்ல மாட்டேன். அதே நேரத்தில் தமிழ் முறைப்படி சீர்திருத்த திருமணம்தான்’ என்று சொல்லிவிட்டனர். கூடவே அவர், ‘எனக்கு தனியார் கம்பெனியில்தான் வேலை. குடும்பம் நடத்துற அளவுக்குதான் வருமானம். சொந்த வீடு இருக்கு. அதில் கொஞ்சம் வாடகையும் வரும் என்பதால் பிரச்னையில்லை. எதிர்காலத்தில் சொந்தமாக தொழில் செய்ற யோசனை இருக்கு’ என்றார். எங்களுக்கு ‘பக்’ என்றிருந்தது. எவ்வளவு வரதட்சணை கேட்பார் என்ற பயம்தான். ஆனால், ‘அவரோ எனக்கு வரதட்சணை, சீர் எதுவும் வேண்டாம்’ என்று உறுதியாக சொன்னார்.

முக்கியமாக, ‘வரதட்சணை வேணாங்கிறதாலே என் பையனுக்கு ஏதோ கொறன்னு நெனச்சிடாதீங்க... நாங்க எல்லா விசாரிச்சிட்டுதான் பொண்ணு பாக்க வந்தோம். எங்களுக்கு பொண்ண புடிச்சிருக்கு. நீங்களும் என் பையன, குடும்பத்த பத்தி விசாரிச்சிட்டு, உங்க பொண்ணுக்கும் புடிச்சிருந்தா சொல்லுங்க’ என்று சொல்லிவிட்டனர். அவர்கள் போன பிறகு என்னிடம் அப்பா, ‘புடிச்சிருக்கா... விசாரிக்கலாமா’ன்னு கேட்டார். அவர்கள் வரதட்சணை வேண்டாம் என்று சொன்னதால் எனக்கும் பிடித்திருந்தது. ஆனால் எனக்கு பக்தி அதிகம். அவருக்கு கடவுள் நம்பிக்கையே இல்லை என்பதுதான் ரொம்பவே இடித்தது. அதை அப்பாவிடமும் சொன்னேன்.

அப்பா, ‘முதலில் விசாரிக்கலாம். பிறகு முடிவு செய்யலாம்’ எனறார். விசாரித்தப் பிறகு அப்பாவுக்கு ஆர்வம். எனக்கு தயக்கம். அதற்கு என் தோழிகள், ‘நல்ல மாப்பிள்ளை விட்டு விடாதே’ என்று ஒரே குரலில் சொன்னார்கள். அதனால் நானும் ‘ஓகே’ ெசால்ல 30 வயதில் எனக்கு திருமணம் நடந்தது. திருமணச் செலவுகள் எல்லாம் அவர்கள்தான் செய்தார்கள்.  எங்கள் விருப்பப்படி தாலி கட்டினார். சாங்கியம், சம்பிரதாயம் இல்லாமல் ஒரு தமிழாசிரியர் முன்னிலையில் திருமணம் நடந்தது. அதன் பிறகு நானும், அவர் விருப்பத்திற்காக பூ, பொட்டு வைப்பதில்லை. கோவிலுக்கும் போவதில்லை. அம்மா வீட்டுக்கு போனால் கோவிலுக்கும் போவேன், பூவும், பொட்டும் வைத்துக் கொள்வேன். அதை அறிந்த கணவர், ‘உனக்கு புடிச்சா, இங்கேயும் பூ, பொட்டு வச்சுக்கலாமே. நான்தான் முன்னமே சொன்னேனே’ என்றார். அவர் அப்படி சொன்ன பிறகு, அம்மா வீட்டுக்குபோன பிறகும் பூ, பொட்டு வைப்பதை விட்டு விட்டேன்.

இவ்வளவு விஷயங்களை நான் விரிவாக சொல்ல காரணங்கள் இருக்கின்றன. திருமணம் நடந்ததில் இருந்து மகிழ்ச்சியாகத்தான் இருந்தேன். எனக்கு இப்போது 36 வயது. ஆண், பெண் என 2 குழந்தைகள் இருக்கின்றனர். அவரும் இப்போது சொந்தமாக தொழில் தொடங்கும் முனைப்பில் இருக்கிறார். இந்நிலையில் எங்கள் வீட்டு மேல் மாடியில் ஒருவர் வாடகைக்கு வந்தார். அவர் மனைவி சொந்த ஊரில் அரசுப் பணியில் இருப்பதால், இவர் மட்டும் இங்கு தங்கி அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறார். எங்கள் குடும்பத்தினரிடம் நன்றாக பேசுவார். நானும் மாடிக்கு துணி காயப்போட போகும் போது, வெளியில் எங்கேயாவது பார்க்கும் போது பேசுவார். நானும் பேசுவேன்.

ஒருநாள், ‘ஏன் பொட்டு, பூ எல்லாம் வக்கிறதில்ல’ என்று கேட்டார். நானும் காரணத்தை சொன்னேன். அதற்கு அவர், ‘நீங்க அதெல்லாம் வச்சா மகாலட்சுமி மாதிரி இருப்பீங்க’ என்று சொன்னார். நான் அமைதியாக வந்து விட்டேன். அதன் பிறகு பார்க்கும் போதெல்லாம் அதையே சொல்வார். ‘பரவாயில்லை அவருக்கு அதெல்லாம் பிடிக்காது’ என்று சொன்னேன். அதற்கு அவர், ‘உங்களுக்குன்னு எந்த விருப்பமும் கிடையாதா... நீங்க என்ன அவருக்கு அடிமையா? பூ, பொட்டு வச்சி பாருங்க நீங்க எவ்வளவு அழகுன்னு உங்களுக்கே தெரியும். உங்க வீட்டுக்காரருக்கு அழகை ஆராதிக்க தெரியல. அதெல்லாம் நம்மளோட பண்பாடு... அதுக்கும், மதத்துக்கும் சம்பந்தமில்ல’ என்று நிறைய பேசினார்.

அதெல்லாம் எனக்கு நியாயமாகவே தோன்றியது. அன்று எங்கள் தனி அறையில் பொட்டு வைத்து பார்த்தேன். என்னை பழைய மாதிரி பார்ப்பதாக தோன்றியது. உற்சாகமாக இருந்தது. ஆனால் என் வீட்டுக்காரர் அதற்குள் வந்து விட்டதால் பொட்டை உடனடியாக அழித்து விட்டேன். ஒருநாள் வீட்டில் யாரும் இல்லாத போது பொட்டு வைத்துக் கொண்டு மாடிக்கு போனேன். அவரும் என்னை பார்த்து விட்டு, ‘இப்போதான் உங்க அழகு வெளியில் தெரியுது’ என்று புகழ்ந்தார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கூடவே ‘மஞ்சள் பூசி, பூவும் வச்சிகிட்டா நல்லா இருக்கும்’ என்றார். ‘அதெற்கெல்லாம் வாய்ப்பில்லை’ என்று மறுத்து விட்டேன். ஆனால் ஒருமுறை அவர் பூ வாங்கி வந்து தந்தார். அவர் மனம் கஷ்டப்படுமே என்று மறுக்கவில்லை.

வைத்துக் கொண்டேன். அதன் பிறகு பூவை, கூடவே பொட்டையும் வைத்துக் கொண்டு மாடிக்கு சென்று காட்டினேன். முகத்திற்கு மஞ்சள் பூசியும் காட்டினேன். அவரும் மகிழ்ச்சி அடைந்தார். புகழ்ந்தார். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்தன. ஒருமுறை பொட்டு, பூ வைத்துக் கொண்டு இருக்கும்போது என் மாமியார் பார்த்து விட்டார். ‘என்ன இது புதுப் பழக்கம் ’ என்று கேட்பார் என்று நினைத்தேன். ஆனால் அவரே, ‘வீட்டிலேயே இருக்குற உனக்கு யார் பூ வாங்கி வந்து தந்தது’ என்றுதான் கேட்டார். அதற்கு ‘நான்தான் வாங்கினேன்’ என்றேன். அவர் நம்பவில்லை. ஆனால் சில நாட்களில் மேல் வீட்டில் வசிக்கும் ஆசிரியர்தான் காரணம் என்பதை யூகித்து விட்டார். அவரை காலி செய்யும் முயற்சியில் இறங்கினார். அவர் உடனடியாக காலி செய்ய மறுத்து விட்டார். அவர்கள் சந்தேகத்தை போக்க நானே வெளியில் போய் பூ வாங்கி வைத்துக் கொள்வதுடன், பொட்டும் தொடர்ந்து வைத்துக் கொள்ள ஆரம்பித்தேன்.

தொழில் தொடங்குவது தொடர்பாக ஊர் சுற்றிக் கொண்டிருந்த என் கணவரும் அதை கண்டு கொள்ளவில்லை ஆனால் என் மாமியார், வெளிப்படையாக சொல்லாமல், என் நடவடிக்கைகளை தவறாகச் சொல்லி கணவரை எச்சரித்து விட்டார். அதிலிருந்து என் கணவரும் என்னை கண்காணிக்க ஆரம்பித்து விட்டார். எனக்கே பூ வைப்பது ரொம்ப பிடிக்கும். இடையில் எனது கணவருக்கு பிடிக்காது என்பதால்தான் அதனை விட்டுவிட்டேன். ஆனால், மீண்டும் பூ வைத்துக் கொள்ள வேண்டும், கோவிலுக்கு போக வேண்டும் என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றும். அது ஆசிரியர் மூலமாக அமலுக்கு வந்து விட்டது அவ்வளவுதான். ஆனால் இப்போது எனக்கும் ஆசிரியருக்கும் தொடர்பு என்பதுபோல் என் மாமியாரும், கணவரும் நடந்து கொள்கின்றனர்.

இவர்களுக்கு பயந்து ஆசிரியரிடம் பேசுவதை நான் நிறுத்தவில்லை. ஏனென்றால் எனக்கு மனதில் எந்த உறுத்தலும் இல்லை. ஆனால் அதை பார்த்த என் கணவர், ‘‘ நீ பூ, பொட்டு வைக்க நா எப்பவும் தடை சொன்னதில்லை. என் கொள்கையை புரிஞ்சுகிட்டுதான் பொட்டு வைப்பதில்லைனு நெனச்சேன். உனக்கு உடன்பாடில்லைனா, உன் விருப்பப்படி இருந்திருக்கலாம் . ஆனால் 3வது ஆள் சொல்லி செய்றதை என்னால் ஏத்துக்க முடியல’ என்று சொல்கிறார். இப்போது எங்களுக்குள் நெருக்கமும் குறைந்து விட்டது. அவரும் சரியாக பேசுவதில்லை. அவர் என்ன முடிவில் இருக்கிறார் என்று தெரியவில்லை. நான் செய்தது தவறா? இல்லை ஆசிரியர் சொன்னால் என்ன? யார் சொன்னால் என்ன? நல்லதை யார் சொன்னாலும் கேட்கலாம் தானே? சுயமரியாதை, பகுத்தறிவு பேசும் என் கணவர் என் சுதந்திரத்தில் தலையிடுவது என்ன நியாயம்? விருப்பு, வெறுப்பு எனக்கும் இருக்கும் தானே? அதை புரிந்து கொள்ள மாமியாரும், கணவரும் மறுக்கிறார்கள். அந்த ஆசிரியரை காலி செய்ய கட்டாயப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர்.

அதை பார்க்கும் போது எனக்கு இவர்கள் மீது எரிச்சல்தான் வருகிறது. பேசாமல் என் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு போய்விடலாமா என்று கூட யோசிக்கிறேன். அந்த ஆசிரியரும், ‘நீங்க படிச்சிருக்கீங்க. நான் சொல்றதை கேட்க வேணாம். நீங்களே சுயமாக முடிவு எடுங்க. காலம் மாறி விட்டது. இப்போதெல்லாம் பெண்களை அடிமையாக வைச்சுக்க முடியாது’ என்று சொன்னார். கூடவே, ‘உங்க திறமைக்கு நல்ல வேலை கெடைக்கும். நான் கூட ஏற்பாடு செய்றேன்’ என்று சொல்கிறார். அவர் சொல்லும் விஷயங்கள் எனக்கும் நியாயமாகத்தான் படுகிறது. என்னிடம் பேசாத, விலகியிருக்கும் கணவருடன் இருப்பதை விட அவரை விட்டு நிரந்தரமாக விலகலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். என் முடிவு சரிதானே? பெண்ணால் தனித்து வாழ முடியும்தானே? என் முடிவில் உள்ள நியாயங்களை புரிந்து எனக்கு வழிகாட்டுங்கள் தோழி.

இப்படிக்கு,

பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,

உங்களின் கடிதம் கண்டேன் தோழி. உங்களின் நிலைமை புரிகிறது. கருத்து ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் உங்களிடமிருந்து வேறுபட்ட ஒருவரை நீங்கள் திருமணம் செய்துள்ளீர்கள். ஆனாலும், திருமண வாழ்க்கை நன்றாகவே நகர்ந்துள்ளது. இருப்பினும் நீங்கள் ஏதோ உங்கள் உரிமையை விட்டுக் கொடுப்பது போல உணர்ந்து உள்ளீர்கள். அதனாலேயே மூன்றாவதாக ஒருவர் உங்களுக்கு விருப்பமான விஷயங்களை பேசும்போது, அவை உங்களை ஈர்த்துள்ளன. உங்கள் கணவர் அவரின் கருத்துக்களை உங்களிடம் திணித்ததாக தெரியவில்லை. உங்களின் விருப்பம் போல நடந்து கொள்ளலாம் என்று சொல்லியுள்ளார். ஆனால் நீங்களோ அவ்வாறு நடந்து கொண்டால் உங்கள் கணவர் காயப்பட்டு விடுவார் என்று நினைத்து, உங்களுக்கு பிடித்தமான விஷயங்களை

செய்யவில்லை.

இதில் எங்கேயும் அடிமைத்தனம் இருப்பதாக தெரியவில்லை. என்னைப் பொறுத்தமட்டில் பெண்களின் பூவும், பொட்டும் மட்டுமே உரிமை ஆகி விடாது. அவர் உங்களை திருமணம் செய்த காலத்திலேயே கடவுள் நம்பிக்கையோ சடங்கு சம்பிரதாயம் போன்றவற்றில் நம்பிக்கை இல்லாமல் இருந்துள்ளார். அதை நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். உங்களுக்கு பூ வைப்பது பொட்டு வைப்பது பிடிக்குமென்றால் அதை உங்கள் கணவரிடம் வெளிப்படுத்தி இருக்கலாம்.  அப்போது அவர் கட்டாயமாக நீ இதை செய்யக்கூடாது என்று கூறியிருந்தால் மட்டுமே உங்களை ஆதிக்கம் செய்வதாக அர்த்தம். நீங்களாக தான் அதை செய்யாமல் இருந்துள்ளீர்கள். இதில் எங்கே அடிமைத்தனம் வந்தது. உங்கள் கணவரின் கருத்துக்களை ஏற்பதில் உங்களுக்கு சிக்கல் இருந்திருக்கலாம். அதை நீங்கள் வெளிப்படையாக விவாதம் செய்திருக்கலாம். அப்போது அவர் என்ன சொல்கிறார் உங்களை எவ்வாறு நடத்துகிறார் என்பதைப் பொறுத்தே அவர் உங்களை அடிமைப்படுத்துகிறாரா என்று கூற இயலும்.

கூடவே உங்கள் மேல் வீட்டுக்காரர் எப்படிப்பட்டவர் என்று தெரியவில்லை. ஒருவர், பொட்டு வைக்க சொல்பவர்கள், பூ வைக்க சொல்பவர்கள், உங்கள் அழகை வர்ணிப்பவர்கள் எல்லாம் உங்கள் உரிமைக்காக பேசுகிறவர்கள் என்று சொல்லிவிட முடியாது. பெண்களின் உரிமை சார்ந்த விஷயம் என்பது இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்று. கணவன், மனைவியை சமமாக நடத்துதல், உரிய இடம் கொடுத்தல், பொருளாதார ரீதியான சுதந்திரம், ஆதிக்கம் செலுத்தாமை, உணர்வுபூர்வமாகவும் உங்களை சமமாக நடத்துதல், உங்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுதல், சமமான வாய்ப்பு கொடுத்தல், பிரச்சனைகளை புரிந்து கொண்டு அதற்காக குரல் கொடுத்தல், இவையெல்லாம் மட்டுமே பெண்ணின் உரிமைக்காக ஒரு ஆண் குரல் கொடுக்கிறார் என்று கூற இயலும்.

இதுவரை செய்யாத சில விஷயங்களை 3வது ஆள் வருகைக்குப் பின் செய்யும்பொழுது அவரின் உந்துதலால் நீங்கள் இதை செய்கிறீர்கள் என்று உங்கள் கணவர் யூகிப்பது இயல்பே. அந்த 3வது ஆளிடம் நீங்கள் இயல்பாக பழகுகிறீர்கள் என்பதைவிட, அவர் விருப்பப்படி நடக்கிறீர்கள் என்பதால் உங்கள் மீது கணவருக்கு வருத்தம் இருக்கலாம். இத்தனை நாள் உங்கள் திருமண வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. அப்படி இருக்க 3வது ஆள் வந்தவுடன் சிக்கல் ஏற்படுகிறது என்றால் நீங்கள் அதையும் சிந்தித்து பார்க்க வேண்டும். நீங்கள் இதை செய்வது சரி நீங்கள் இதைச் செய்வது தவறு என்று ஒரு மனநல மருத்துவராக என்னால் கூற இயலாது. நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது அதனால் ஏற்படும் விளைவுகளை சிந்திக்க வேண்டும். நான் எப்போதும் சொல்வது போல் உங்கள் முடிவை நீங்கள் தான் எடுக்கவேண்டும்.

ஒரு கணவர் மனைவியை அடிமைப்படுத்துகிறார் என்றால், அவரின் அடிமை பிடியிலிருந்து விடுபட்டு செல்வது என்பது அந்தப் பெண்ணுக்கு பாதுகாப்பானது தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் உங்கள் கணவர் அப்படிப்பட்டவரா நிஜமாகவே அவர்களை அடிமைப்படுத்துகிறாரா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். பொட்டு வைப்பது பூ வைப்பது மிகவும் பிடிக்கும் என்றால் உங்கள் கணவரிடம் அதை வெளிப்படுத்துங்கள். செய்யுங்கள். உங்கள் கணவர் முற்போக்காக உங்களை திருமணம் செய்து உள்ளார்.  உங்கள் கணவரோ மாமியாரோ எப்படிப்பட்டவர்கள், உங்களை சந்தோஷமாக வைத்துள்ளார்களா என்பதை நீங்கள் தான் சொல்ல முடியும். எனவே எல்லாவற்றையும் யோசித்து நல்ல முடிவாக எடுங்கள்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி

பகுதிக்கான கேள்விகளை எழுதி

அனுப்ப வேண்டிய முகவரி

‘என்ன செய்வது தோழி?’

குங்குமம் தோழி,

தபால் பெட்டி எண்: 2924

எண்: 229, கச்சேரி சாலை,

மயிலாப்பூர், சென்னை - 600 004

வாசகிகள் கவனத்துக்கு,

பிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள்.  சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...

Related Stories: