×

குட்டீஸ் முதல் பாட்டீஸ் வரை...

நன்றி குங்குமம் தோழி

கை கொடுக்கும் இயன்முறை மருத்துவம்!

புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு மருத்துவ துறையின் வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை யாவரும் அறிவோம். அதிலும், மருத்துவ துறையின் தந்தை என சொல்லப்படும் ஹிப்போகிரேட்ஸின் வழியே தொடர்ந்து பல வகையான சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ள மருத்துவ துறையின் மற்றுமொரு சாதனையே இயன்முறை மருத்துவம் எனலாம். ஹிப்போகிரேட்ஸ் காலம் முதல் இன்று வரை பயனளிக்கும் இயன்முறை மருத்துவம் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

வருடந்தோறும் செப்டம்பர் 8 ஆம் தேதி ‘உலக இயன்முறை மருத்துவ தினமாக’ கொண்டாடப்படுகிறது என்பது அனைவரும் அறியவேண்டிய தகவல். இயன்முறை மருத்துவமானது, உடலியக்க மருத்துவம் அல்லது உடலியக்கவியல் எனவும் அழைக்கப்படும். இம்மருத்துவமானது உடலில் உள்ள எலும்பு, மூட்டு, தசைகள் மற்றும் மூட்டை சுற்றியுள்ள திசுக்களில் ஏற்படும் கோளாறுகளுக்கு மருந்து, மாத்திரை மற்றும் ஊசி இல்லாமல் சிகிச்சை வழங்கி குணப்படுத்தி வருவது எனலாம்.

இவ்வாறு உடலின் இயக்கக் கோளாறுகளை அறிந்து, அதற்கு தீர்வும் அளித்து மீண்டும் உடல் இயக்கத்தை செம்மைப்படுத்துவதே உடலியக்க மருத்துவம்.
இயன்முறை மருத்துவத்தில், அதாவது, ஒருவருக்கு பிரச்சனைக்குப் பின் இருக்கும் காரணங்களை ‘இயன்முறை மருத்துவத்தின் சிறப்பு உடலியக்க பரிசோதனைகள்’ (Special Movement Tests) மூலம் கண்டறிவர். பின் தேவையான சிகிச்சை அளிப்பது, வீட்டில் பயிற்சிகள் செய்வதற்கு கற்றுக்கொடுப்பது மற்றும் சில எளிய ஆலோசனைகள் போன்றவற்றை வழங்குவர். பலதரப்பட்ட சிறப்பு பயிற்சிகள் மற்றும் சில நுணுக்கமான நுட்பங்கள் மற்றும் சில உபகரணங்கள் மூலம் இயன்முறை மருத்துவத்தில் பிரச்சனைகளுக்கு ஏற்றார் போல் பக்கவிளைவுகள் இல்லாத சிகிச்சை அளிப்பர்.

இயன்முறை மருத்துவத்தின் பயன்கள்

* உடற்பயிற்சி செய்து உடலை நல்ல முறையில் வைத்துக்கொள்வதால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், இதயக் கோளாறு, பக்கவாதம் போன்ற நோய்களை தள்ளிப் போடலாம். தடுக்கலாம்.

* கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் இயன்முறை மருத்துவர் பரிந்துரைக்கும் பயிற்சிகள் செய்து வந்தால் குழந்தை பிறப்பை எளிமையாக்கலாம். மேலும், குழந்தை பிறந்தபின் வரும் முதுகு வலியை தடுக்கலாம்.

* நுரையீரலில் இருந்து சளி வெளியே வருவதற்கு பயிற்சிகளை, சில நுட்பங்களை இயன்முறை மருத்துவர் மேற்கொள்வார்கள். இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு மூச்சுக்குழாய் சுத்தமாவதோடு, வேறு தொற்றுநோய்களும் வராமல் தடுக்கலாம்.

* தீக்காயம் அதிகமாய் இருக்கும் நபர்கள் மீண்டும் தன் உடல் அசைவுகளை மீட்டெடுத்து இயல்பு வாழ்வை தொடர இயன்முறை மருத்துவம் உதவும்.

* பெண்களின் பி.சி.ஓ.டி கோளாறுகளை சீர் செய்யவும், வயதானவர்களுக்கு வரும் சிக்கல்கள், நோய்கள் போன்றவற்றை முடிந்த வரை பயிற்சிகளை செய்வதன் மூலமும் மீட்டெடுக்கலாம். இதனால் ஆயுட்காலம் கூடுவதோடு, வாழ்க்கை தரமும் உயரும்.

* குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை வாதம், பக்கவாதம், வேறு சில மரபணு சம்பந்தமான நோய்களுக்கும் இயன்முறை மருத்துவம் தன் சிறப்பு பயிற்சிகள் மற்றும் நுட்பங்கள் கொண்டு உதவக்கூடும்.

* முதுகு வலி, கால் மூட்டு வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி, மூட்டு ஜவ்வு பாதிப்பு, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகளால் இன்றைக்கு சிறு வயதினரும் அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது. அவ்வாறு ஏற்படும் வலிக்கு மருந்து, மாத்திரைகள் உண்பதால் பக்கவிளைவுகள் மட்டுமே உண்டாகும். ஆனால், அவ்வாறான வலிகளுக்கு எந்தவொரு பக்கவிளைவுகளும் இல்லாமல் இயன்முறை மருத்துவத்தின் மூலம் தீர்வு காணலாம். இதனால் அறுவை சிகிச்சையைக் கூட தள்ளிப்போடலாம், தவிர்க்கலாம்.

* நரம்பு, மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், அதாவது பக்கவாதம், விபத்தினால் ஏற்படும் மூளை மற்றும் தண்டுவட காயம் போன்றவற்றில் பாதிக்கப்பட்டவர் இயன்முறை மருத்துவரின் உதவியுடன் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.

* உடலில் எந்தவொரு அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தாலும், அறுவை சிகிச்சைக்கு முன்னும், பின்னும் இயன்முறை மருத்துவரின் ஆலோசனை மற்றும் சிகிச்சை அவசியம்.

* விபத்தில் கை, கால் இழந்த பின்னும் மீண்டும் செயற்கை கை, கால் பொருத்தி, அதனுடன் ஒருவர் இயங்குவதற்கும் இயன்முறை மருத்துவம் பயன்படும்.

* விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் (உதாரணமாக, தசை மற்றும் மூட்டுகளை சுற்றியுள்ள திசுக்களில்) உடனே சரி செய்யவும், காயம் ஏற்படாமல் இருக்க முன்பே பயிற்சிகள் வழங்கவும் இயன்முறை மருத்துவம் உதவியாக இருக்கும்.

* எலும்பு முறிவு ஏற்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்து எலும்புகள் கூடிய பின்பு, அசைவுகள் (இயக்கங்கள்) மீண்டும் இயல்பாய் அமைவதற்கு இயன்முறை மருத்துவம் மிக அவசியம்.

* நம் உடல் அசைவுகள் நிலத்தில் இருப்பதைவிட நீரில் இன்னும் சுலபமாக இருக்கும். ஆகையால் வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் நீரில் பயிற்சிகள் அளிப்பதன் மூலம் பலன் அதிகரிக்கும். இதை விடுத்து இயன்முறை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வீட்டில் (செல்போன், டிவி பார்த்து) நாமாகவே பயிற்சிகள் செய்வதும், சாதாரண வலிதான் சரியாகி விடும் என்று காலம் கடத்துவதும் பெரும் பாதிப்புக்கு வழிவகுக்கும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம். ஆகவே போதிய விழிப்புணர்வுடன் ஒவ்வொருவரும் உடனுக்குடன் சிகிச்சை எடுத்துக்கொண்டு எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் ஆரோக்கிய வாழ்வை நோக்கி நகர்வதற்காகவே இன்றைக்கு இயன்முறை மருத்துவமானது உதவுகிறது என்பதை நாம் அனைவரும் புரிந்துகொண்டால் போதும் நலமான சமூகத்தை எளிதில் உருவாக்கி விடலாம்.

தொகுப்பு: கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

Tags :
× RELATED சீஸ் மிளகாய் பஜ்ஜி