கொரோனா தாய்ப்பாலுக்கு தடையில்லை!

நன்றி குங்குமம் தோழி

‘‘உலகை உலுக்கும் கோவிட்-19 அச்சுறுத்தலுக்கு இடையே இந்த உலகிற்கு புதிதாக தன் குழந்தையின் பிஞ்சுக் கால்களை அடி எடுத்து வைக்க காத்திருக்கும் கர்ப்பிணிகளும், அவர்களின் கணவர் மற்றும் உறவினர்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என்கிறார், செவிலியர் பிரிவு இயக்குனர், டாக்டர் ஜோதி க்ளாரா மைக்கேல்.

‘‘கொரோனா பாதித்தால் பதினான்கு நாட்கள்  தனிமை, அதன்பின், மேலும் பதினான்கு நாட்கள் கண்காணிப்பு எனும் தீவிர நிலைமைக்கு கர்ப்பிணிகளும், பிரசவித்த பெண்களும்  விதிவிலக்கில்லை என்பது தான் பலரின் அச்சமாக உள்ளது. காரணம் கர்ப்ப காலத்தில் மருத்துவ ஆலோசனைகள், கண்காணிப்பு, பிரசவம் மற்றும் அதைத் தொடர்ந்து தாய் சேய் நலன் பலவற்றுக்காக இவர்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், மகப்பேறு மருத்துவ ஆலோசனைகள், கண்காணிப்பு, பிரசவம் மற்றும் அதைத் தொடர்ந்த தாய், சேய் நலன் என பல  சேவைகளுக்காக மருத்துவமனை செல்லவேண்டிய அவசியம் கர்ப்பிணிகளுக்கு ஏற்படுகிறது. இதில் 80% உடல் ஆரோக்கிய ஆலோசனைகள், கரு வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்காக மருத்துவமனையை நாடுகிறார்கள். மீதமுள்ள 20% கர்ப்பம் சார்ந்த சில தொற்று பாதிப்பு மற்றும் பிரசவத்தின் போது ஏற்படக்கூடிய பிரச்னைக்காகவும் மருத்துவமனைக்குச் செல்கின்றனர்.

ஆனால், கொரோனா பாதிப்பு ஏற்பட்ட கர்ப்பிணிக்கு, மகப்பேறு காலத்தில் பெறவேண்டிய மருத்துவ ஆலோசனைகள் அந்தந்த மாதங்களில் கிடைக்காமலும், உற்றார், உறவினர் பரிவு, பாசம் கிடைக்காமல், தனிமையில் வாடுகின்றனர். யாரும் அருகில் இல்லை என்பதால், மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர். இது குழந்தையையும் பாதிக்கும். அந்த சமயத்தில் அவர்கள் மனதைரியமாகவும், குழந்தைக்கு நல்ல உறுதுணையாகவும் செயல்பட வேண்டும்’’ என்றவர் தொற்று காலத்திலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கக்கூடாது என்கிறார். அதற்காக ஒரு தாய் தன்னை எவ்வாறு தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனையும் வழங்குகிறார்.

‘‘கருவுற்ற காலத்தில் கர்ப்பிணிகள் தங்களின் மார்பகத்தை முறையாக எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற பயிற்சியினை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆறு மாதங்களுக்கு குறையாமல் தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்கு புகட்டவேண்டும். இதனால் குழந்தை ஆரோக்கியமாக வளர்வதுடன், தாய், சேய் இடையே ஒருவிதமான பாசப்பிணைப்பு ஏற்படும்.

தாய்ப்பால் குடிப்பதால் மட்டுமே போஷாக்கான வாழ்வு குழந்தைக்கு சிறப்பாக அமையும். உலகிலேயே கலப்படம் இல்லாத ஒரே பால், சிசுவுக்கு கிடைக்கும் தாய்ப்பால்.எனவேதான், குழந்தை பிறந்த அரைமணி நேரத்தில் தொடங்கி குறைந்தது 6 மாதங்களுக்கு இடைவிடாமல் தாய்ப்பால் மட்டுமே சிசுவுக்கு அன்னை அளிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. தாய்ப்பால் தவிர தண்ணீர், குளுக்கோஸ் அல்லது பால்பவுடர் போன்ற எதையும் குழந்தைகளுக்கு தரக் கூடாது. ஆறு மாதங்களுக்கு பிறகு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை அளிப்பதுடன் தாய்ப்பாலையும் இரண்டு ஆண்டு குழந்தைக்கு புகட்டலாம்.

கோவிட்-19 பாதிப்பு அல்லது அறிகுறி உள்ள தாய், தன் குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் அளிப்பதை ஊக்குவிக்க வேண்டும். தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு தொற்று ஏற்படுமோ என்று பயப்பட வேண்டாம். அதே சமயம் குழந்தைக்கு பால் புகட்டும் போது, அவர்கள் சில பாதுகாப்பு முறையினை கடைப்பிடிக்க வேண்டும்.

* தாய் மற்றும் சேய் இருக்கும் அறையை முதலில் சோடியம் ஹைப்போ குளோரைட்  கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.  

* மழலையை தொடுவதற்கு முன் சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை தோள்பட்டை வரை முப்பது வினாடிகளுக்கு  நன்றாகக் கழுவ வேண்டும்.

* முகக்கவசம் அணிந்து கொள்வது இன்றியமையாதது.

* ஒவ்வொரு முறையும் பால் ஊட்டும்முன்,  மார்பகங்களை வெதுவெதுப்பான நீர் நனைத்த சுத்தமான துணி கொண்டு துடைக்க வேண்டும்.

* சுத்தம் செய்யப்படாத கைகளால் குழந்தையின் முகம், கண், மூக்கு, வாய் போன்ற பகுதிகளை ஒருபோதும் தொடவேண்டாம்.

* இருமல், தும்மல் வந்தால் வாயை கைகளாலோ அல்லது டிஷ்யு பேப்பர் கொண்டு மறைத்துக் கொள்வது அவசியம். அதன் பிறகு உடனடியாக, கையை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

* வருங்கால சந்ததியினர் பூமியில் செழிப்பாகவும், ஆரோக்கியமாகவும் வளர்ந்திட ஒவ்வொரு பெண்ணும் குறைந்த பட்சம் ஆறு மாத காலம் தங்களின் குழந்தைக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்று ஆலோசனை வழங்கினார் டாக்டர் ஜோதி க்ளாரா மைக்கேல்.

தொகுப்பு: தி.ஜெனிஃபா

Related Stories: