×

பெண் மைய சினிமா-இந்தியப் பெண்களின் கதை

நன்றி குங்குமம் தோழி

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறையும் விவாகரத்துகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. திருமணமான அடுத்த நாளே நீதிமன்றத்தின் வாசலில் விவாகரத்துக்காக வழக்குத் தொடுப்பவர்கள் இருக்கிறார்கள். தவிர, இந்தியாவில் ஒவ்வொரு 20 நிமிடமும் ஒரு பெண் வன்புணர்வுக்கு ஆளாகிறாள் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. கடந்த பத்து வருடங்களில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் சுமார் 300 சதவீதம் அதிகரித்துள்ளன. உலகளவில் 35 சதவீத பெண்கள் பாலியல் மற்றும் உடல் ரீதியான வன்முறை களுக்கு ஆளாவதாக ஐ.நா. சொல்கிறது. இப்படி சமகாலத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்கொடுமைகளை ஆணித்தரமாக பதிவு செய்கிறது ‘ஃபயர் பிராண்ட்’ என்கிற மராத்தியப் படம்.

பள்ளிச்சீருடையில் இருக்கும் சிறுமி சுனந்தாவைக் குடிபோதையில் இருக்கும் ஒருவன் கொடூரமாக வன்புணர்வு செய்துவிடுகிறான். அவள் எவ்வளவு கெஞ்சியும் போராடிப்பார்த்தும் ஒன்றுமே நடக்கவில்லை. இந்தக் குரூர சம்பவம் சுனந்தாவின்  மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. அவளால் அந்த  அதிர்ச்சியில் இருந்து மீளவே முடிவதில்லை. காலங்கள் வேகமாக ஓடுகிறது. நன்கு படித்து சமூகமே போற்றும் ஒரு வழக்கறிஞராகிறாள். மனதுக்கு நெருங்கிய நண்பர் ஒருவரை காதலித்துக் கலயாணமும் செய்துகொள்கிறாள். இருந்தாலும் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்த அந்தக் கொடூர சம்பவம் அவளை நிழல் போல துரத்திக்கொண்டே இருக்கிறது. கணவனுடன் தாம்பத்ய உறவில் ஈடுபடும்போது அவளுக்கு அந்த நினைவே வருகிறது. அதனால் தாம்பத்யத்தில் அவளால் ஈடுபட முடியவில்லை.

அத்துடன் தூங்கும்போதும் அந்தச் சம்பவம் அவளைத் தொந்தரவு செய்கிறது. நல்ல கணவனுக்குச் சரியான மனைவியாக இருக்க முடியவில்லை என்று குற்றவுணர்வு கொள்கிறாள். விவாகரத்து செய்துகொள்ளலாம் என்றுகூட நினைக்கிறாள். சுனந்தாவின் இக்கட்டான நிலையைப் புரிந்துகொண்ட கணவன் அவளுக்கு ஆறுதலாக இருக்கிறான். மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறான். குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்த சம்பவத்தை கதையாக எழுதி கண்ணாடி முன் அமர்ந்து படிக்கும்படி மனநல மருத்துவர் ஆலோசனை வழங்குகிறார். அப்படிச் செய்தால் காலப்போக்கில் அந்தச் சம்பவத்தை மறந்துவிடலாம் என்கிறார். சுனந்தாவும் மருத்துவர் சொன்னபடி செய்கிறார். ஆனால், அவளால் முழுமையாக அதைச் செய்யமுடியவில்லை.

அதே நேரத்தில் இன்னொரு பக்கம் குடும்ப நல வழக்கறிஞராக ஜொலிக்கிறாள் சுனந்தா. சாதாரண பெண்கள் முதல் பிரபல பிசினஸ் வுமன்கள் வரை விவாகரத்து வழக்கிற்காக சுனந்தாவிடம் தான் வருகிறார்கள். சுனந்தாவின் அப்பாயின்மெண்ட் கிடைப்பதற்காக பல நாட்கள் காத்திருக்கின்றனர். அந்தளவுக்கு சுனந்தா வேலையில் பிஸி. மட்டுமல்லாமல் அவள் கையிலெடுக்கும் ஒவ்வொரு வழக்கிலும் வெற்றிகொடி நாட்டு கிறாள். வழக்குத் தொடுத்த பெண்களுக்கு விவாகரத்து வாங்கித் தருவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிக ஜீவனாம்சத்தையும் வாங்கித் தருகிறாள். சுனந்தாவின் புகழ் பட்டித்தொட்டியெல்லாம் பரவுகிறது.

 இந்நிலையில் திவ்யா என்ற பணக்காரப் பெண் விவாகரத்து பெறுவதற்காக சுனந்தாவை நாடி வருகிறாள். தன் கணவன் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக குற்றம் சாட்டுகிறாள். இதுபோக தன்னைக் கொலை  செய்ய முயன்றதாக பொய்க்குற்றம் சாட்டி கணவனை அவமதிப்புக்கு உள்ளாக்குகிறாள். அவளது கணவன் பெரிய பிசினஸ் மேன். பணம், விவாகரத்தைத் தாண்டி கணவனைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அவர் மீது பொய்க்குற்றங்களை அடுக்குகிறாள் திவ்யா. அவர்களுக்கு ஆட்டிசம் பாதித்த ஒரு மகள் இருக்கிறாள்.

திவ்யாவைப் பற்றிய உண்மைகள் சுனந்தாவிற்குத் தெரியவருகிறது. அந்த வழக்கில் முதல் முறையாக தோற்கிறாள் சுனந்தா. நம்பி வந்த தன்னை ஏமாற்றிவிட்டதாக சுனந்தாவின் மீது கோபமடைகிறாள் திவ்யா. தீர்ப்பு தனக்கு சாதகமாக இருந்தாலும் திவ்யாவை மன்னித்து ஏற்றுக்கொள்கிறான் அந்த பிசினஸ் மேன். அத்துடன் தன் மனைவியின் செயலுக்காக சுனந்தாவிடமும் மன்னிப்புக் கோருகிறான் அந்தக் கணவன். எல்லாவற்றையும் சுலபமாக எடுத்துக்கொள்ளும் பிசினஸ் மேனின் இயல்பு சுனந்தாவை ஈர்க்கிறது. ஒரு நாள் அவர் சுனந்தாவை வீட்டில் சந்தித்து பேசுகிறார். அப்போது சுனந்தாவின் கணவன் வீட்டில் இல்லை. திவ்யாவின் கணவருடனான உரையாடல் சுனந்தாவை குழந்தைப்பருவ நினைவு தரும் பீதியிலிருந்து  மீட்டெடுக்கிறது. புது மனுஷியாக பரிணமிக்கும் சுனந்தா கணவனுடன் புது வாழ்க்கையைத் தொடங்குவதோடு படம் நிறைவடைகிறது.

நெபிளிக்ஸில் காணக்கிடைக்கும் இந்தப் படத்தை தயாரித்தவர் பிரபல பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா. பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகி மீண்டெழுந்து வாழும் பெண்களுக்கு இப்படத்தை சமர்ப்பித்திருக்கிறார் இயக்குனர் அருணா ராஜே. தேசிய விருது வாங்கிய மராத்திய நடிகை உஷா ஜாதவ் சுனந்தாவாக அட்டகாசம் செய்திருக்கிறார். வெளியே தேர்ந்த வழக்கறிஞராகவும் வீட்டுக்குள் குழந்தைப்பருவ அதிர்ச்சியில் இருந்து மீளாத பெண்ணாகவும் நடிப்பில் அசாதாரண வித்தியாசத்தைக் காட்டியிருப்பது சிறப்பு. ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். குறிப்பாக திருமணமான பெண் தன் கணவருடன் பார்க்க வேண்டும்.

தொகுப்பு: த.சக்திவேல்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!