×

கற்பித்தல் என்னும் கலை!

நன்றி குங்குமம் தோழி

‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்றுதான் கூறுவோம். அத்தகைய வாழ்க்கையில் பிரச்னைகள் இல்லாமல் இருக்க முடியாது. ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமான பிரச்னைகள் ஏற்படத்தான் செய்யும். அவற்றையெல்லாம் கடந்து, நம்மை சந்தோஷப்படுத்திக்கொள்வதுதான் வாழ்க்கையின் நியதி. சுகமும், துக்கமும் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டிருக்கும், அவற்றில் ஒன்றில் மற்றொன்றை நினைத்துப் பார்த்து நம்மை சமாதானப்படுத்திக் கொள்ளலாம் என்று ஒரு வடமொழி கவிதை கூறுகிறது. அதாவது, சுகம் வரும்பொழுது துக்கத்தை மறப்பதும், துக்கமான சமயங்களில், சுகமான இனிய தருணங்களை நினைத்துப் பார்த்தால், துக்கங்கள் மனதை விட்டு நீங்கிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆம். நம் பிள்ளைகளின் வாழ்க்கையும் அப்படித்தான். மாணவப் பருவம் மிகவும் ‘ஜாலியான’ பருவம். அதேசமயம் வாழ்க்கையின் அடித்தளத்தை நிர்ணயிக்கும் காலம், பொதுவாக, வேலைக்குச் செல்பவர்கள் தங்கள் வேலையை சரிவர செய்துவிட்டால் நிம்மதி அடைய முடியும். ஆனால் ஒரு கற்பிப்பவர் என்பவருக்கு எல்லா நாட்களும் ஒன்றுபோல் இருக்காது. கற்பித்துவிட்டால் மட்டும் நிம்மதியடைய முடியாது. பள்ளி விழாக்கள், அரசு விழாக்கள் போன்ற சமயங்களில் மாணவர்களின் ஈடுபாடு அளவில்லா சந்தோஷத்தைத் தரும். அதுபோல் எத்தனையோ நாட்கள், அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு அடிபட்டுக்கொள்ளுதல், மாடிப்படிகள் ஏறும்பொழுது ஒருவரையொருவர் முந்தியடித்தல், விளையாடும்பொழுது ஏற்படும் விபத்துக்கள் என எத்தனையோ விஷயங்கள் உள்ளன.

ஒவ்வொரு சமயமும் நாங்கள் வாய்விட்டு அழும் அளவிற்கு பார்க்க முடியாத துயர சம்பவங்கள் நடந்ததுண்டு. ஒவ்வொரு இடைவேளையும் அவர்கள் சுதந்திரமாக ஓடக்கூடிய சமயங்கள். அதுதான் எங்களுக்கு ‘பக் -- பக்’கென்று பயம் தரும் தருணங்கள். எவ்வளவுதான் நம் கண்காணிப்பில் இருந்தாலும் திடீரென சம்பவங்கள் நிகழ்வதுண்டு. அதிலும் நெற்றியில் அடிபட்டுக்கொண்டு, தையல் போடாதவர்கள் ஒருசிலர்தான். அவர்கள் அடிபட்டுக்கொள்வதில், எங்களுக்கு ரத்தமே உறைந்துவிடும்.

நிறைய பிள்ளைகளை உடன் பள்ளி வண்டியில் தூக்கிப்போட்டுக்கொண்டு டாக்டரிடம் ஓடுவோம். முதலில் பெற்றோருக்குத் தெரியப்படுத்தினாலும், அவர்கள் வரும் வரை காத்திருக்காமல் முதல் உதவிக்கு ஓடிவிடுவோம். முதல் உதவி தந்தபின், பெற்றோர் அவரவர் குடும்ப டாக்டரிடம் அழைத்துச்செல்வர். மண்டையில் அடிபட்ட பிள்ளைகளை ஆபத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறோம். நிறைய பேர் ஓடும்பொழுது கை-கால் எலும்புகளை முறித்துக்கொள்வர். ஓடியாடும் சமயத்தில் இது சாதாரணமாக நடைபெறுவதுண்டு.

பிள்ளைகள் விளையாட்டில் ஏற்படும் காயங்களையும், விபத்துக்களையும் பொருட்படுத்த மாட்டார்கள். நண்பர்களையும் காட்டிக்கொடுக்க மாட்டார்கள். ஆனால் ஆசிரியர்கள் நடந்தவற்றை முதலில் டாக்டரிடம் எடுத்துரைத்தால்தான் அவர் சரியான சிகிச்சை தரமுடியும். அதிர்ச்சி அடைந்து வரும் பெற்றோர்களையும் சமாதானம் செய்ய வேண்டும். அத்தனை பதற்றமும் ஆசிரியருக்கு இருக்கத்தான் செய்யும்.

அதனால்தான் கற்பிப்பவர் என்பவர் பொறுமையின் சிகரமாகத் திகழ வேண்டும். சேவை மனப்பான்மை உள்ளவராக இருக்க வேண்டும். சமயங்களில் தன் உணவையும் பகிர்ந்து, மாணவச் செல்வங்களுக்குத் தரவேண்டி வரலாம். நிறைய பிள்ளைகள் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதுண்டு. சிறப்பு வகுப்புக்களோ, வகுப்பறைத் தேர்வுகளோ இருந்தால், தூங்கி எழுந்து தயாராகி, சாப்பிட நேரமில்லாமல் வந்துவிடுவர். முதல் வகுப்பிலேயே களைத்துப்போய், சோர்ந்து காணப்படுவர். இதுபோன்ற பிள்ளைகளைக் கண்டுபிடித்து, சாப்பிட வைப்போம்.

கொஞ்சம் வசதியுள்ளவர்கள் கேண்டீனில் வாங்கி சாப்பிடுமாறு காசு கொடுத்து அனுப்பி விடுவர். இடைவேளையில் ‘கேண்டீன்’ செல்லும் வரை அவர்கள் ‘டல்’லாகக் காணப்படுவார்கள். நிறைய மாணவர்கள் விதவிதமான உணவை ‘கேண்டீனில் வாங்கி ருசிப்பதைக் கண்ட ஒரு ஏழைப்பையன் ஏங்கியிருக்கிறான். தான் இஷ்டம்போல் எதுவும் வாங்கி சாப்பிட இயலவில்லையே என்று ஏங்கியதால், பிறரிடமிருந்து காசு எடுக்க முயற்சி செய்திருக்கிறான். ஒருநாள் பள்ளிப் பிரார்த்தனை நேரம். காகம் வந்து பிள்ளைகளின் உணவு டப்பாக்களைத் திறந்தன. சப்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்திருக்கிறார் ஒரு ஆசிரியர். அந்த சமயம் பார்த்து, குறிப்பிட்ட பையன் மட்டும் தனியே மாட்டிக் கொண்டான். யாருக்கும் தெரியாமல், அவனைத்தனியே அழைத்து, தவற்றை உணர்த்தினேன்.

அவன் உண்மையை ஒப்புக்கொண்டதுடன், காசு எடுத்த நோக்கத்தைக் கூறினான். கண்களில் வருத்தம் தெரிந்தது. எங்களுக்கும் வருத்தமாக இருந்தது. அவன் மனம் வருத்தப்படாதவாறு, ‘‘இனி என்ன சாப்பிட வேண்டுமானாலும் வந்து கேள், நாங்கள் வாங்கித் தருகிறோம், இதுவரை நடந்தது யாருக்கும் ெதரியாது, நீயும் மறந்து விடு, நாங்கள் இதுபற்றி பேச மாட்டோம்’’ என்று முற்றுப்புள்ளி வைத்தோம். இதில் பையனின் குற்றம், அவன் வறுமையில் இருந்ததுதான். அதற்கு அவன் எப்படிப் பொறுப்பாவான்? அந்த வயதிற்கே உள்ள ருசியான சாப்பாட்டு ஆசை அவனை சிறிய தவற்றிற்குத் தூண்டியது. அதை நாங்கள் வழங்கினால், அது எங்களுக்கு ஆத்ம திருப்தி தருவதுடன் அவன் எவ்வளவு நல்லவனாகிறான்.

அதுவும் குறிப்பிட்ட சமயம்தான். அவன் புரிந்து நடக்கும் தருணம் வந்தால் யாரிடமும் வாங்கிச் சாப்பிட மாட்டான். சுயகௌரவம் அவனுக்கு வந்துவிடும். இதன்மூலம் நாம் நிறையவே கற்றுக்கொள்கிறோம். பிறக்கும்போதே யாரும் கெட்டவனாகவோ, நல்லவனாகவோ பிறப்பதில்லை. அவன் வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகள் அவனை மாற்றி விடுகின்றன. அதைத் திருத்துவது மட்டுமே கற்பிப்பவர் நோக்கம்.

ஒரு பிள்ளையின் தந்தை வெளிநாட்டில் வசித்து வந்தார். தாயின் அதிகப்படியான பாசம், அவனை சிறிதும் அடம் பிடிக்க வைத்தது. அவர்கள் செய்து தரும் ஆசையான தின்பண்டங்கள் அவனுக்குப் பிடிக்காமல் போனது. சரிவர சாப்பிடாமல் இருந்திருக்கிறான்.  தாயோ மனம் வருந்தி அவனுக்குக் கொஞ்சம் ஊட்டி விடக்கூட முயற்சித்திருக்கிறார். இருப்பினும்  சரிவர வீட்டில் சாப்பிடுவதே கிடையாது என்று மனம் நொந்து வகுப்பாசிரியரிடம் புலம்பியிருக்கிறார். ஆசிரியர் சொன்னால் பிள்ளைகள் கேட்பார்கள் என்று சொன்னாராம். ஆசிரியர் வகுப்பில் சென்று பிள்ளைகளுக்கு அறிவுரை வழங்கினார். யாரும் சாப்பிடாமல் வரக்கூடாது. காலையில் அவசியம் ஏதாவது சாப்பிட்டுவிட்டுத்தான் பள்ளிக்கு வரவேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். அப்பொழுதுதான் ஒரு பையன் எழுந்து, ‘‘இம்மாணவன் தினமும் காசு தந்து வெளியில்தான் சாப்பிடுவான், நிறைய காசு வைத்திருக்கிறான்’’ என்கிற செய்தியைச் சொன்னான். ஆசிரியர் விசாரித்தறிந்தார்.

மேலும் சில மாணவர்கள் எழுந்து, அவன் தினமும் காலை முதல் மாலை வீட்டிற்குப் போகும் வரை ‘கேண்டீனில்’ வாங்கி சாப்பிடுவதை பார்த்திருப்பதாகக் கூறினர். உடன் ஆசிரியர் இந்த விஷயங்களை அவன் தாயிடம் எடுத்துக்கூறி புரிய வைத்தார். அப்பொழுதுதான் அனைத்தும் புரிந்தன. தாய் சமையலறையில் டப்பாவில் காசு வைத்திருப்பாராம். அதிலிருந்து எடுத்துக்கொண்டு வந்து வெளியில் சாப்பிட்டு விடுகிறானாம். பின் அவன் வீட்டில் எப்படி சாப்பிடுவான்? இனி அவன் விரும்புவதை அவனுக்குச் செய்து தரும்படியும், காசு எடுக்காமல் அவரே தேவைப்படும்பொழுது, பார்த்து அவனுக்குத் தரும்படியும் சொல்லினோம். அவனும் ஒப்புக்கொண்டு, தாய்ப்பாசத்தை இனி புரிந்து நடப்பதாகவும் வாக்களித்தான். சிறிய விஷயம் -- வாய்க்கு ருசியான உணவு. அது கிடைத்துவிட்டால், அவன் ஏன் காசுக்கு ஆசைப்படப்போகிறான்?

சமூகத்தில் நிறைய பேர் இந்த ஒரு சாண் வயிற்றுக்கு உணவு கிடைக்காமல், ஏதேனும் தவறு செய்யப்போய், வளர்ந்து அதுவே மிகப்பெரிய குற்றங்களுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. விளையாட்டாகச் செய்யும் சிறிய விஷயங்கள் வளர வளர அவர்களை குற்றவாளியாக மாற்றி விடுகிறது. கற்பிப்பவர் என்பவர் புத்தக அறிவை மட்டும் ஊட்டி விடாமல், சமூகத்தில் நல்லவனாக வாழத் தேவையான அனைத்து குணங்களையும் பதிய வைத்து, சிறந்த இளைஞர்களை உருவாக்கித் தருகிறார்கள். பரிணாம வளர்ச்சி வந்தவுடன் அவர்கள் தங்களை செதுக்கிக் கொள்கிறார்கள். சிறு பிள்ளைகள் தெரியாமல் செய்யும் பிழைகளை திருத்துவதுடன் ‘மறப்போம் மன்னிப்போம்’ என்பதும் அவசியமாகிறது.

அவர்கள் குறைகளையே பேசிக்கொண்டிருக்காமல், அந்த சமயங்களில் நம் நினைவலைகளை ஓடவிட்டால், அத்தகைய தருணங்கள் எவ்வளவு மதிப்பானவை என்பது தெரியும். வீட்டில் பலவித சங்கடங்கள் நிகழ்ந்திருக்கலாம். அவற்றிலிருந்து சிறிது விடுபட்டு பிள்ளைகள் வாழும் பெரிய வீட்டிற்கு வந்தால், நம்மை சிரித்து வரவேற்க ஒரு கூட்டமே காத்திருக்கும். வெகுளித்தனமான வார்த்தைகள் நம் புண்ணுக்கு மருந்து போடுவதுபோல் ஆகும். பிள்ளைகளோடு பிள்ளைகளாக பழகும்போது, நாம் வயது, தகுதி, அந்தஸ்து அனைத்தையும் மறந்து அவர்களின் உடன்பிறப்பாகவோ, தாய், தந்தையாக மாறி விடுவோம். நிறைய அனுபவங்கள் கிடைத்தாலும், மனதளவில் இளமையை வரவழைக்கும் உன்னதப் பணிதான் இது என்று சொல்லலாம்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் பதினான்காம் தேதி நேருஜி பிறந்தநாளன்று, குழந்தைகள் மாறுவேடத்தில் கலக்குவது மறக்க முடியாத அனுபவம். ரொம்ப யோசித்து, நினைக்க முடியாத அளவிற்கு அவர்களின் கற்பனை வளம் காணப்படும். பெற்றோர்கள் பிள்ளைகளை ஊக்குவிப்பதும், அன்றைய தினம் பாடம் படிக்க வற்புறுத்த மாட்டார்கள் என்கிற எண்ணத்துடன் மகிழ்ச்சியுடன் நடித்துக் காட்டுவதும், ‘இவனா இப்படி நடிக்கிறான்’ என்று ஆசிரியர்களே அசந்துபோகும் அளவுக்கு அசாத்திய திறமையைக் காட்டி மகிழ்விப்பதும் நம்மை என்றும் மறக்க முடியாத அளவுக்கு செய்துவிடும். அறிவியல் சம்பந்தப்பட்ட கண்காட்சிக்காக மாணவர் இரவு, பகலாக உழைப்பதென்ன, மாறு வேடத்திற்காக மலையைக்கூட மேடையில் கொண்டுவர முயற்சி எடுப்பதென்ன, ஒருநாள் எங்களை சிறு பிள்ளைகளாகவே மாற்றிவிடும்.

ஒரு சிறுவன் நிறைமாதக் கர்ப்பிணியாக வேடம் புரிந்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது இன்றும் கண்முன்னே தெரிகிறது. வேடம் போட்டது மட்டுமில்லை. அவனுக்கு இரட்டைக்குழந்தையாம். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பிரசவம் நடக்கப் போவதாகவும் வேறு மொழியில் கலக்கினான். அனைவரும் அசந்து போயினர். எத்தனையோ தலைவர்கள் வேடத்தில் வந்து போயினர். பலர் வேடமணிவதோடு, அந்த வேடத்திற்கேற்ற குரலில் நடிப்பர். சில ஆசிரியர்களைக்கூட கிண்டலடித்து, அவர்கள் வகுப்பறையில் நடந்துகொள்வதுபோன்றே, செய்துகாட்டுவர். அந்த சமயம் குறிப்பிட்ட ஆசிரியர்கள், தான் இப்படியா நடந்துகொள்கிறோம் என்று வருத்தப்பட்டு தன்னை மாற்றிக்கொள்ள நினைப்பவர்களும் உண்டு.

மேலும் மாணவர் சொல்வதை நாம் நல்ல விதத்தில் எடுத்துக்கொண்டால் எதுவும் தப்பில்லை. அவர்களை திருத்துகிறேன் என்கிற பெயரில், விளையாட்டாக அவர்கள் சொன்னதை, நாமே வினையாக்கிக் கொள்ளக் கூடாது. நம் தவற்றை நாம் உணருவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கலாம். உதாரணத்திற்கு, எப்பொழுதும் சிடுசிடுவென்று பேசினால் அது மற்றவர்கள் மனதை பாதிக்கலாம். இதுபோன்று பிள்ளைகள் நம் நடவடிக்கைகளை செய்து காட்டும்பொழுதுதான் நம் தவறு அல்லது பேசும் தன்மை புரிய வரும். சிலர் மனதளவில் அன்பாகவும், பாசமானவர்களாகவும் இருப்பர். ஆனால் பேசும் தோரணை கடினமாகப் பேசுவதுபோல் தோன்றும். சில நாட்கள் பழகினால் போதும். அவர்கள் அன்பு நமக்குப் புரிய வரும். நாம் பெறும் அனுபவம்போல், பிள்ளைகளும் நிறைய கற்கிறார்கள்.

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாஸன்

Tags :
× RELATED ஆரோக்கிய கூந்தலுக்கு உதவும் அர்கன் ஆயில்!