×

முட்கள் நிறைந்த பாதையையும் சவாலாக கடக்க வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

மாடல் கோ-ஆர்டினேட்டர் தாரா உமேஷ்

சினிமா, விளம்பர படங்கள் எதுவாக இருந்தாலும், அதன் அடித்தளம் மாடலிங் துறை. மாடலிங் துறையை பொறுத்தவரை நம்மை அதில் அடையாளம் காட்டுபவர்கள் மாடல் கோ-ஆர்டினேட்டர்கள்தான். இன்னும் சொல்லப் போனால் மாடலிங் துறைக்கு ஏற்ப நம்மை வடிவமைப்பவர்கள் இவர்கள்தான். அப்படிப்பட்ட துறையில் கிட்டத்தட்ட 30 வருடத்திற்கு மேலாக கோலூன்றி வருகிறார் தாரா உமேஷ். அவரிடம் சில கேள்விகள்...

* மாடல் கோ- ஆர்டினேட்டர் துறையை தேர்வு செய்ய காரணம்?

1990-ல் தான் மாடல் கோ- ஆர்டினேட்டராக என்னுடைய கேரியரைத் தொடங்கினேன். இதற்கு என் கணவர் உமேஷ்தான் முக்கிய காரணம். இவர் விளம்பர நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். அப்போது, தூர்தர்ஷன் தவிர வேறு சேனல்கள் கிடையாது. அந்த தொலைக்காட்சிக்குச் சாக்லெட் விளம்பரம் ஒன்றைத் தயாரிப்பதற்காக என் கணவருக்கு 20 முதல் 25 குழந்தைகள் தேவைப்பட்டனர். அதனால், எங்களுடைய மகன், மகள் படிக்கும் பள்ளி முதல்வரின் அனுமதி பெற்று அப்பள்ளி மாணவர்கள் இந்த விளம்பரத்தில் நடிக்க நான் ஏற்பாடு செய்து கொடுத்தேன். விளம்பரத்தின் ஜிங்கிள்ஸ் எழுதினது முதல் குழந்தைகளுக்கு பயிற்சி என சகலமும் நான் பார்த்துக் கொண்டேன். விளம்பரம், சூப்பர் ஹிட்டானது.

* எதிர்கொண்ட சவால்கள்?

90-களில் ஒரே பெண் மாடல் கோ- ஆர்டினேட்டர் என்பதால், பல நிறுவனங்களுடன் வேலைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பெரிய நிறுவனங்களுடன் வேலைப் பார்ப்பது எனக்கு சிரமமாக இருந்ததில்லை. ஆனால் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாடல்களை தேடிப் பிடிப்பது தான் எனக்கு சவாலாக இருந்தது. அன்றைய காலக்கட்டத்தில் எல்லாருடைய வீட்டிலும் தொலைபேசி இருக்காது. மாடல்களை தொடர்பு கொள்வது கஷ்டம். பொது தொலைபேசி, தெரிந்தவர்கள் வீட்டு போன் நம்பர் கொடுத்து, அவர்களை தொடர்பு கொள்வேன். இதனால், தெரிந்தவர்கள் வீடு, பி.சி.ஓ. போன்ற இடங்களில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இருக்கும். அந்த சமயத்தில் பஸ் வசதி மட்டும் தான் என்பதால், மாடல்களின் ஆல்பங்களை எடுத்துக்கொண்டு பஸ்சில் செல்வேன். சில சமயம் நடந்து கூட சென்று இருக்கேன்.

மாடல்  கோ-ஆர்டினேட்டர் வேலை என்பது ரோஜாக்கள் நிறைந்த பாதை கிடையாது. சில சமயம் அதில் முட்களும் இருக்கும். அதனை எதிர்கொள்வதுதான் என்னுடைய அன்றாட சவாலாக இருந்தது. மேலும் இந்த துறைக்கு பெண்ணாக நான் முதல் அடித்தளம் போட்டு இருந்ததால், எந்தவிதமான வழிகாட்டுதலும் கிடைக்கவில்லை. ஆண்களை பொறுத்தவரை இரண்டு பேர் தான் இந்த  துறையில் இருந்தனர். எல்லாவற்றையும் விட மாடலிங் செய்யும் பெற்றோர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்கணும். ஷூட்டிங்கின் போது மாடல்களை வீட்டில் இருந்து ஸ்பாட்டுக்கு அழைத்து சென்று, மறுபடியும் அவர்களை பத்திரமாக வீட்டில் கொண்டு போய் சேர்க்கணும். பல சமயங்களில் அவர்களை தொடர்புகொள்ள முடியாது. ஷூட்டிங் அன்று கடைசி நேரத்தில் வரமாட்டார்கள். இது போன்ற பல பிரச்னைகளை சமாளிக்கணும்.

மாடல் கோ-ஆர்டினேட்டராக ஆரம்பித்து தற்போது இந்தியாவின் தலைச்சிறந்த காஸ்டிங் டைரக்டராக வளர்ந்து இருக்கேன். என்னுடைய இவ்வளவு கால அனுபவத்தில் இன்றும் நான் தடுமாறுவது இளம் பெண்களைச் சமாளிப்பதில்தான். வெளியிடங்களில், நல்ல முகத்தோற்றம் உள்ள பெண்களைக் கண்டால் என் அலுவலகத்துக்கு அவர்களை அழைத்து வருவேன். நடிப்பு, நடனம் சொல்லிக்கொடுப்பேன். பிரபலமானதும் முக்கியமான நேரங்களில் போனை எடுக்க மாட்டார்கள். அதற்காகவே நான் எப்போதும் ஒரு சப்ஸ்டிட்யூட் மாடலை வைத்திருப்பேன். இன்று வரை என்னுடைய ஷூட்டிங்கை நான் எந்த காரணத்தாலும் கேன்சல் செய்தது இல்லை. அதனால் தான் என்னால் இந்த துறையில் இன்று வரை தடம் பதிக்க முடிகிறது.

* அட்வைஸ்...

மாடலிங் என்றாலே இன்றும் கூட ஒரு வித பயம், தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. இவை தேவையற்றவை. தற்போது இந்த துறையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. பாதுகாப்பான துறையும் கூட. இளம் பெண்கள் துணிந்து மாடலிங் துறையை தேர்வு செய்யலாம். இந்த துறையில் நேரம் தவறாமல், மிகவும் அர்ப்பணிப்போடு வேலை செய்தால், கண்டிப்பாக ஒரு நல்ல நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது.

* ‘ஸ்மைல்’ அமைப்பு...

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில்தான் ‘ஸ்மைல்’ என்ற அமைப்பைத் தொடங்கினேன். தற்போது, அவர்கள் மட்டுமின்றி ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என உதவிக்கரம் தேவைப்படுபவர்களுக்கு உணவு, உடை முதலான அடிப்படை வசதிகளைச் செய்து தருகிறேன். ‘இன்னர் வீல்’, ‘துளி’ போன்ற அமைப்புகளுடன் இணைந்தும் பணியாற்றி வருகிறேன்.

* குடும்பம்...

சாதாரண இல்லத்தரசியாக இருந்து நான் இந்த நிலைக்கு வர முக்கிய காரணம் என் கணவர் உமேஷ். ஷூட்டிங் போது, காலை நான்கு மணிக்கு சென்றால் நான் வீடு திரும்ப இரவாகிடும். அந்த சமயத்தில் என் கணவர் தான் குழந்தைகளை கவனித்துக் கொண்டார். நிறைய நாட்கள் அவர்களுடன் நேரத்தைச் செலவிட்டது கிடையாது. ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டதும் இல்லை.

என் வேலைப் பளுவை குழந்தைகளும் சரி என் கணவரும் புரிந்து கொண்டார்கள். தற்போதும் நான் என் துறையில் பயணித்துக் கொண்டு இருக்கிறேன். இந்த தருணத்தில் என் கணவர் இல்லாதது எனக்கு மிகப் பெரிய இழப்பு. அவர் இல்லையென்றால், நான் இந்தளவிற்கு வளர்ந்திருக்க மாட்டேன்’’ என்ற தாரா உமேஷ் மாடலிங் துறையில் அடி எடுத்து வைப்பவர்களுக்காகவே ‘க்ரூமிங் பள்ளி’ (grooming school) ஒன்றை  ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளதாக
தெரிவித்தார்.

தொகுப்பு: எஸ்.விஜயகுமார்

Tags :
× RELATED நாட்டின் முன்னேற்றப் பாதையில் அடைய...