மது... குழந்தைப்பேறுக்கும் கேடு!

நன்றி குங்குமம் டாக்டர்

*எச்சரிக்கை

தற்போது நண்பர்களுடன் வீக் எண்ட் பார்ட்டி, ஃபங்ஷன் என்ற சாக்கில் மூக்கு முட்ட குடிப்பது சகஜமாகிவிட்டது. அப்படி குடிப்பவர்கள் தாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் திட்டம் இருந்தால், கருத்தரிப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது மது அருந்தக்கூடாது என்று எச்சரிக்கிறது புதிய ஆய்வு ஒன்று.

‘ஆண்கள் மட்டுமின்றி பெண்களையும் சேர்த்து இளம் தம்பதிகள் மது அருந்துவது ஆபத்தானது. இது அவர்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை இதய குறைபாட்டுடன் பிறப்பதற்கான வாய்ப்பை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் சொந்த ஆரோக்கியத்தையும் பெரிதும் பாதிக்கும்’ என்று சீனாவின் Central south university ஆய்வாளரான ஜியாபி கின் கூறுகிறார். கருத்தரிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு ஆண்கள் குடிப்பதால் குழந்தைகளுக்கு பிறவி இதய நோய் ஏற்படும் அபாயம் 44 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், அதே நேரத்தில் பெண்கள் குடிப்பதால் ஏற்படும் ஆபத்து 16 சதவீதமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் 13 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பிறவி இதயநோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இது வளர, வளர பிற்காலத்தில், அறுவை சிகிச்சைக்குப் பிறகும் இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, முன்கூட்டியே ஏற்படும் மரணத்திற்கும் முக்கிய காரணமாகிறது. ஆல்கஹால் கரு முரணாக உருவாவதற்கும் ஒரு முக்கிய காரணியாகிறது. கருவின் சிதைவை ஏற்படுத்துகிறது. மேலும் இது கரு ஸ்பெக்ட்ரம் கோளாறுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.ஐரோப்பாவின் Journal of preventive cardiology பத்திரிகையில் சமீபத்தில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

* என்.ஹரிஹரன்

Tags :
× RELATED குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது