×

பெண்ணின் திருமண வயது 21?

நன்றி குங்குமம் தோழி

1929ல் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 14 என்றும், ஆண்களுக்கு 18 என்றும் சட்டம் இயற்றப்பட்டது. பின், 1978ல், பெண்களின் திருமண வயதை 18 என்றும், ஆண்களுக்கு 21 வயது என்றும் உயர்த்தி சட்டம் உருவாக்கப்பட்டு, இன்று வரை நடைமுறையில் உள்ளது.

இன்று, பெரும்பாலும் நகரங்களில், படித்த பெற்றோர்களின் படித்த பெண்கள் அனைவரும் கல்வி முடித்து, வேலைக்குச் செல்லும் வயதில்தான் திருமணம் செய்து கொள்கின்றனர். இந்த சூழ்நிலைகளில், சாதாரணமாகவே பெண்களின் மண வயது 23-25 ஆகத்தான் இருக்கிறது. ஆனாலும் குழந்தை திருமணத்தில் உலகிலேயே இந்தியா முதல் இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகில் மூன்றில் ஒரு பங்கு குழந்தை திருமணங்கள் இந்தியாவில்தான் நடைபெறுகின்றன.

இந்த நிலையில்தான், அரசாங்கம் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்த திட்டமிட்டு, சிறப்புக் குழுவையும் உருவாக்கியுள்ளது. இதற்கு, ஊட்டச்சத்துக் குறைபாடு, பிரசவத்தில் இறக்கும் விகிதம், பெண் கல்வி, மக்கள் தொகை கட்டுப்பாடு போன்ற காரணங்களை முன்வைத்துள்ளது. இந்த சட்டத்தை பலதரப்பட்ட அரசியல் ஆளுமைகளும், நிபுணர்களும் பொது மக்களும் வரவேற்றுள்ள தருணத்தில், சிலர் திருமண வயதை உயர்த்துவதால், பெண்கள் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும், சிசேரியன் விகிதம் உயரும் என்றும் கூறியுள்ளனர். இது குறித்து மகப்பேறு மருத்துவர்களிடமும், உளவியல் நிபுணரிடமும் விசாரித்ததில்..

‘‘பெண்கள், 18 வயதானாலும் குழந்தைகள்தான். பல பெண்களுக்கும் இந்த வயதில் திருமணம் செய்து கர்ப்பமாகி குழந்தையைப் பெற்று வளர்க்கும் மனப் பக்குவமோ, உடல் பலமோ இருக்காது. 18 வயதில் திருமணமாகி அதே 18-19 வயதில் தாயாகும் பெண்களின் பிரசவத்தை  teenage pregnancyயாகத்தான் பார்க்க வேண்டும்.

பதினெட்டு வயதில்தான் பெண்கள் பள்ளியை முடிக்கின்றனர். அவர்கள் பருவமடைந்து 4-5 ஆண்டுகளே ஆகியிருக்கும். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்குத் தயாராகி, உணவில் கவனம் செலுத்தாமல், ஊட்டச்சத்து குறைபாடு, ரத்தசோகை என உடலளவில் பலவீனமாகவே இருப்பார்கள்.மாதவிடாய் சுழற்சி சீராக இருக்காது. மாதவிடாய் குறித்த முழு புரிதலும் இருக்காது. இத்தருணத்தில் அவர்கள் திருமணம் செய்து, பத்து மாதத்தில் குழந்தையும் பெறும் போது, மகப்பேற்றிலும் குழந்தை வளர்ப்பிலும் சுயமாகச் சிந்தித்துச் செயல்பட முடியாமல் போகிறது” என்கிறார் மகப்பேறு சிறப்பு மருத்துவரும், சிசு நோய் நிபுணருமான மருத்துவர் வித்யா மூர்த்தி.

இளம் வயதில் கர்ப்பமாகும் போது ஏற்படும் சிக்கல்கள் குறித்து, அவர் பேசுகையில் ‘‘இளம் வயதில் தாயாகும் பெண்கள், பெரும்பாலும்
உறவினர்களுக்குள்ளேயே திருமணம் முடித்து, சுய சிந்தனை, எதிர்கால திட்டம் என எதுவும் இல்லாமல், தங்கள் தாயுடன்தான் மருத்துவமனைக்கு வருவார்கள். நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் அம்மாவைப் பார்ப்பார்கள். எதுவுமே தெரிந்திருக்காது. இவர்கள், கல்வியிலும் வருமானத்திலும் பின்தங்கிய கிராமபுரங்களைச் சேர்ந்த பெண்கள்.

கர்ப்பத்தில் ஏதாவது சிறிய சிக்கல் என்றாலும், குடும்பத்தினர் சட்டத்திற்கு புறம்பாகவும், சுகாதாரமற்ற நிலையிலும் கருக்கலைப்பு செய்துவிடுவார்கள். இதில் சம்பந்தப்பட்ட பெண் தன்னுடைய கருத்தை முன்வைக்கவே முடியாது.பிரசவம் எப்போதுமே திட்டமிட்டதாக இருக்க வேண்டும். கணவனும் மனைவியும் சேர்ந்து எடுக்கும் முடிவாக இருக்க வேண்டும். மகப்பேறு குறித்த புரிதலுடனும் திட்டமிடலுடனும் பெண்கள் மனதளவிலும் உடலளவிலும் தயாராகிய பின், தங்கள் விருப்பத்தின் பேரில் குழந்தை பெற வேண்டும்” என்கிறார்.

பெண்கள் பிரசவத்தின் போது இறப்பது குறித்து விவரித்த மருத்துவர், “ஒரு பெண், பிரசவ நேரத்தில் இறக்கவே கூடாது. நம் மருத்துவம், தொழில்நுட்பத்திலும் அறிவியலிலும் அதிநவீன மாற்றமும் முன்னேற்றமும் அடைந்துள்ளது. கர்ப்ப காலத்தில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும், தாய்-சேய் இருவரையும் காப்பாற்றும் மருத்துவமும் தொழில்நுட்பமும் நம்மிடம் உள்ளது.

சரியான மகப்பேறு பராமரிப்பு இல்லாத பெண்கள் தான், பிரசவத்தின் போது இறக்கின்றனர். ஒரு பெண் பிரசவிக்கும் முன்பே pre-pregnancy counselling செல்வது நல்லது. அப்போது, மருத்துவர்களே பெண்ணை பரிசோதித்து, கர்ப்பம் தரிக்கும் முன் அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தையும், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் அதைக் கட்டுக்குள் வைக்கவும் சிகிச்சை அளிப்பார்கள்.

உடல் பலமும், மன வலிமையும் பெற்று கர்ப்பம் தரிக்கும் பெண்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் போது, அவர்களுக்குப் பிரசவ நேரத்தில் ஏற்படும் அபாயங்களை முன்னரே கணித்து, மருத்துவர்கள் தயாராக இருப்பார்கள். இந்த மகப்பேறு பராமரிப்பு அனைத்து பெண்களுக்கும் கிடைப்பதில்லை. மருத்துவ வசதி இல்லாத கிராமங்களிலும் மலைப்பிரதேசத்திலும் வாழும் பெண்களே பெரும்பாலும் பிரசவத்தின் போது ஆபத்தைச் சந்திக்கின்றனர்” என்றவர் மகப்பேறு பராமரிப்பின் முக்கியத்துவத்தையும் குறிப்பிடுகிறார்.    

“குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்துவதால் பெண்கள் கர்ப்பமாவதில் பிரச்சனையோ அல்லது சிசேரியன் அதிகரிக்க வாய்ப்போ இல்லை. 20 வயதில் ஒரு பெண் சிசேரியன் செய்துகொள்ளும் வாய்ப்பு, அவள் 30 வயதானாலும், அதே சதவீதத்தில்தான் இருக்கும். இரண்டு மூன்று வருடங்கள் தாமதமாவதால், எந்த உடல்நலக் கோளாறும் உருவாகப் போவதில்லை.  மருத்துவர்களைப் பொறுத்தவரை, பெண்களின் குறைந்தபட்ச பிரசவ  வயது 25 ஆக இருப்பதே சிறந்தது. அதிகபட்சமாக 35 வயதுவரை பெண்கள் ஆரோக்கியமான முறையில் குழந்தை பெறலாம்.

மேற்கத்திய நாடுகளில் அரசுகள் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதிலோ, பிரசவ வயதிலோ தலையிடுவதே கிடையாது. இதனால், குழந்தைகள் பதினாறு வயதில் கல்லூரி படிப்பிற்காக வீட்டை விட்டு வெளியேறியதும், பதின் பருவத்திலேயே கர்ப்பமாகிறார்கள். பல வளர்ந்த நாடுகளில் டீனேஜ் ப்ரெக்னன்ஸி அதிகரித்து, அரசாங்கம் இந்த சிக்கலைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடி வருகிறது. அதன் அடிப்படையில், நம் அரசாங்கத்தின் இந்த சட்டம் வரவேற்கத்தக்கது” என்று ஆதரித்துள்ளார்.

கும்பகோணத்தில் 40 வருடங்களாக மகப்பேறு சிறப்பு நிபுணராக இருக்கும் மருத்துவர் மஞ்சுளா, கல்வியின் முக்கியத்துவத்தை கூறுகிறார். “40 வருடங்களுக்கு முன், பிரசவ தேதியைக் கணிக்க, மாதவிடாய் தேதியைக் கூட பெண்களுக்குச் சொல்லத்தெரியாது. ஆனால் இப்போது பெண்கள், மருத்துவரின் அறைக்குள் வரும்போதே கேள்விகளை காகிதத்தில் எழுதி வைத்து, மருத்துவரின் ஆலோசனைகளை மொபைலில் ரெக்கார்ட் செய்துகொள்கின்றனர். மகப்பேறு குறித்த புரிதலும் திட்டமிடலும் இருக்கிறது. எந்த சிக்கலாக இருந்தாலும் மன உறுதியுடன் தனக்கும் தன் குழந்தைக்குமான பாதுகாப்பான முடிவை ஆலோசித்து தேர்ந்தெடுக்கின்றனர்.

மேலும், முப்பது வருடங்களுக்கு முன் பிரசவம் முடிந்து பெண் குழந்தை என்றதுமே, பெண்கள் கவலையில் அழுவார்கள். பெண் குழந்தையாக இருந்தால் புகுந்த வீட்டிற்கே போக முடியாது என்று பயப்படுவார்கள். ஆனால் இப்போது பெண்கள் சுயமாக வேலைக்குப் போய் சம்பாதிக்கின்றனர். தங்கள் பெற்றோரையும் கூட பராமரிக்கின்றனர். கணவன்- மனைவி இருவருமே பெண் குழந்தையை விரும்புகின்றனர்.

மனைவி சுயமாகச் சம்பாதித்துப் பொறுப்புகளைப் பகிர்வதால், பெரும்பாலான ஆண்களும் மனைவியின் முடிவுகளுக்கு துணையாக இருக்கின்றனர். வரதட்சணை, குடும்ப வன்முறை போன்ற பிரச்சனைகள் குறைந்துள்ளது. இரண்டு குழந்தைகள் அது ஆண்-பெண் என யாராக இருந்தாலும் கல்வியும் முழு பராமரிப்பும் வழங்க முடிகிறது. இதுவே நாற்பது வருடங்களுக்கு முன் ஏழெட்டு குழந்தைகள் இருந்ததால், பெண் பிள்ளைகளை பாரமாக நினைத்துச் சிறு வயதிலேயே திருமணம் செய்துவிடுவார்கள்’’ என்கிறார்.

‘‘பிரசவத்தின் போது, இரண்டு குழந்தைகளுக்கு மேல் கர்ப்பப்பை சுருங்குவதிலும் சிக்கல் இருக்கும். அதனால் அதிகரத்தப்போக்கு ஏற்பட்டு ரத்தம் கிடைக்காமல் இறந்து உள்ளனர். ஆனால் இப்போது அதிகரித்துள்ள மருத்துவ தொழில்நுட்பங்கள் மற்றும் ரத்த தானம் விழிப்புணர்வு மூலம் முன்கூட்டியே தேவையான ரத்த மாதிரியைச் சேமித்துக்கொள்கிறோம்.  முதலில் சிசேரியன் செய்ய ஒரு மணி நேரம் கூட ஆகும். ஆனால் இப்போது பத்து நிமிடத்திற்குள் சிசேரியன் செய்துவிட முடியும். இதனால் ரத்தப்போக்கும் குறைவாகவே ஆகும்” என்றார்.

குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைதான். கல்வியைத் தொடராமல், இளம் வயதிலேயே திருமணமாவதால் ஏற்படும் மன ரீதியான சிக்கல்கள் குறித்த தகவல்களை, திருமண வாழ்க்கையில் ஏற்படும் உளவியல் பிரச்சனைகளைக் கையாளும் சிறப்பு வல்லுநர் நப்பின்னை சேரன் பகிர்கிறார். ‘‘பெண்கள் கட்டாயம் கல்வியை முடித்துத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.

கல்வியைப் போல சுயசம்பாத்தியமும் பெண்களின் அடிப்படை தேவைதான். சில பெண்கள் 18 வயதிலேயே சுயமாகச் சிந்தித்து முதிர்ச்சியடைவார்கள். ஆனால் பலரும் கல்லூரி படிப்பை முடிக்கும் போதுதான் தெளிவான சிந்தனையுடன் இருப்பார்கள். 18 வயதைக் குறைந்தபட்ச திருமண தகுதியாக வைக்கும் போது, பெண்கள் பள்ளியில் தனக்குப் பிடித்த மாணவனைத் திருமணம் செய்கிறேன் எனக் கல்வியும் வேலையும் இல்லாமல், யாருடைய ஆதரவும் இல்லாமல் திருமணம் செய்துகொள்கின்றனர். இங்குக் காதல் திருமணத்தை எதிர்க்கவில்லை. ஆணும், பெண்ணும் நிச்சயம் தனக்குப் பிடித்து துணையுடன் வாழ்வதே சிறந்தது. அதே நேரம், கல்வியும் வேலையும்தான் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையாக இருக்கிறது. இந்த வாய்ப்புகளைப் பெண்கள் இழக்கக் கூடாது.

திருமணம் சந்தோஷமாக நிலைத்திருக்க, பெண்கள் சுயமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும், நல்ல புரிதலும் வேண்டும். கல்விதான் தன்னம்பிக்கையும் அறிவையும் தரும். படித்து வேலைக்குச் செல்லும் பெண்கள் பெரும்பாலும் குடும்ப வன்முறைகளில் பாதிக்கப்படுவதில்லை. அப்படியே குடும்ப வன்முறைகள் நடந்தாலும், அதிலிருந்து தன்னையும் தன் குழந்தையையும் பாதுகாத்துக்கொள்ள முடிகிறது. இளம் வயதில் திருமணம் ஆகும் பெண்கள் வாய்ப்புகளை இழந்து, கணவரைச் சார்ந்தே இருக்கின்றனர். இதனால், பல சமயம், குடும்பத்தில் அவர்களுக்கான அங்கீகாரம் மறுக்கப்படுகிறது. உளவியல் ரீதியான வன்முறைகளும் நடக்கிறது” என்று கூறினார்.

இந்த சட்டத்தை பலதரப்பட்டவர்களும் வரவேற்றுள்ள நிலையில், இதனுடன் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் ஆழமாக அணுகினால் மட்டுமே உண்மையான முன்னேற்றத்தைப் பெற முடியும். இங்குச் சட்டங்கள் காகிதங்களில் மட்டுமே இருக்கின்றன. அவற்றை நடைமுறைப்படுத்தி, பெண்ணிற்குக் கல்வி, சுதந்திரம் என வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். ஒரு பெண்ணிற்கு வாய்ப்புகளும் உரிமைகளும் அதிகரிக்கும் போது, அவளுடன் சேர்ந்து குடும்பமும் சமூகமும் வளர்ச்சியடையும்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது...