அக்கா கடை - அந்த ஒரு புன்னகைதான் எங்களின் புத்துணர்ச்சி டானிக்!

நன்றி குங்குமம் தோழி

பசி... இந்த உலகில் வாழும் எல்லா ஜீவன்களுக்கும் பொதுவானது. பசிக்கும் போது விலங்குகள் வேட்டையாடி புசிக்கும். ஆனால் மனித இனமோ அந்த ஒரு ஜான் வயிற்றுக்காகத்தான் தினமும் பல வேலைகளை செய்து தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் காப்பாற்றி வருகிறார்கள். இவர்களில் பலர் சம்பாதிக்கவோ அல்லது மற்றவரிடம் உதவி கேட்கும் முடியாத ஆதரவற்ற நிலையில் உள்ளனர். இவர்களுக்காகவே விருதுநகர், காரியாப்பட்டியில் ‘இன்பம் உணவகம்’ என்ற பெயரில் ஓட்டல் ஒன்றை நிர்வகித்து, கடந்த ஐந்து வருடமாக ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள் அக்கா, தம்பியான தமிழரசி, விஜயகுமார்.

‘‘என்னுடைய சொந்த ஊர் தோணுக்கால்’’ என்று பேசத் துவங்கினார் பட்டதாரியான தமிழரசி. ‘‘எம்.எஸ்.சி, எம்.ஃபில் முடிச்சிட்டு நானும் என் தம்பி விஜயகுமாரும் சேர்ந்து 99ம் ஆண்டு ஒரு கம்ப்யூட்டர் மையத்தை நிறுவினோம். அதன் பிறகு ஜவுளி கடை, பிரின்டிங் பிரஸ், புரோக்லைன் வண்டி வாடகை விடுவதுன்னு பல தொழில்களில் ஈடுபட்டு வந்தோம். அதனை தொடர்ந்து பேக்கரி மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தை துவங்கினோம். நான் படிச்ச படிப்புக்கும் பார்த்த வேலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு தான் சொல்லணும். எல்லா வேலையையும் ஒரு குறுகிய காலம் தான் செய்தோம். பணம் சம்பாதித்தாலும் மனசுக்கு திருப்தி இல்லாமல் இருந்தது.

 நானும் என் தம்பியும் வள்ளலாரை பின்பற்றுபவர்கள். அசைவம் சாப்பிட மாட்டோம். அதே சமயம் பேக்கரி ஃபாஸ்ட் ஃபுட்டினை தொழிலாக செய்த போது எங்களுக்கு நெருடலாவே இருந்தது. காரணம் அதில் முட்டை, அசைவ உணவு தான் கொடுக்க முடியும். அதனால் அதனை நிறுத்திவிட்டு, சைவ உணவகமாக மாற்றி அமைத்தோம். ஆரம்பத்தில் மதிய உணவு மட்டுமே வழங்கி வந்தோம்.

கலவை சாதம், பிரிஞ்சி என 30 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தோம்’’ என்றவர் அதிரடியாக ஒரே நாளில் அதன் விலையில் மாற்றம் செய்துள்ளார்.

‘‘நாங்க உணவகத்தை ஆரம்பித்த போது, தினமும் ஒருவர் இங்கு வருவார். வாசலில் உள்ள போர்டை பார்ப்பார். கையில் இருக்கும் சில்லரை காசை எண்ணுவார். என்ன நினைப்பாரோ ஏதும் கேட்காமல் எழுந்து சென்றுவிடுவார். அவர் எதற்காக வருகிறார்... என்ன நினைக்கிறார் என்று முதலில் எங்களுக்கு புரியவில்ைல. என் தம்பியிடம் விசாரிக்க சொன்ன போது தான் புரிந்தது.

அவரிடம் ஒரு வேளை சாப்பாடு சாப்பிட 30 ரூபாய் இல்லை என்று. பசியினை கட்டுப்படுத்தி சாப்பிடாமல் சென்றுவிடுவது புரிந்தது. அதை நினைத்த போது ஒரு நிமிடம் எனக்கு கண் கலங்கிவிட்டது. காரணம் பசியின் கொடுமை என்ன என்று நான் அறிந்திருக்கிறேன். அதனை உணர்த்தியவர் என் அம்மா தான். அம்மா டீச்சரா வேலைப் பார்த்தாங்க. நானும் தம்பியும் தொழிலில் ஈடுபட்டு வந்ததால், வீட்டு பொறுப்பு முழுதும் அம்மா தான் பார்த்துக்கிட்டாங்க. சொல்லப்போனா எனக்கு சமைக்க கூட தெரியாது. அம்மா தான் பார்த்து பார்த்து செய்து தருவாங்க.

2015ல் அம்மாவும் தவறிட்டாங்க. எல்லா சடங்குகளும் முடிந்து நான் மட்டும் வீட்டில் தனியா இருந்தேன். அந்த சமயத்தில் தான் நான் முதல் முறையாக பசியை உணர்ந்தேன். சமைக்கவும் தெரியாது. யாரிடம் போய் சாப்பாடு கேட்பது... ஒன்னுமே புரியல. பாத்ரூம் போய் பைப்பை திறந்து விட்டு வாய்விட்டு அழுதேன். பசி எவ்வளவு கொடுமையானதுன்னு உணர்ந்த தருணம். அதன் பிறகு பருப்பு சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல்ன்னு ஒன்று ஒன்றாக சமைக்க கத்துக் கொண்டேன்’’ என்றவரை தொடர்ந்தார் அவர் தம்பி விஜயகுமார்.

‘‘அக்காவை பெரியம்மா ஆம்பளை பிள்ளை போல் வளர்த்துட்டாங்க. அவங்க திருமணமும் செய்துக்கல. பிசினஸ், வேலைன்னு அதில் தான் அவங்க கவனம் ஈடுபட்டு இருந்தது. நான் சின்ன பையனா இருக்கும் போது இருந்து அக்கா வீட்டில் வேலை செய்ய ஒரு அம்மா வருவாங்க. பெரியம்மா அவங்க வந்ததும், டீ, காலை உணவு மற்றும் மதிய உணவு எல்லாம் அவங்களுக்கு தனியா எடுத்து வச்சிடுவாங்க. அவங்களின் பாலிசி தினமும் யாருக்காவது சாப்பாடு கொடுக்கணும். அவங்க கடைசி காலம் வரை அதை பின்பற்றி வந்தாங்க.

அவங்களுக்கு பிறகு அக்காவுக்கு அப்போது சமைக்க தெரியாது என்பதால் அவங்களால சாப்பாடு கொடுக்க முடியல. மேலும் அந்த அம்மா மாதம் அரசு அளிக்கும் முதியோர் நிதியான ரூ.1000 பெற்று வந்தாங்க. இதை வைத்துக் கொண்டு மூன்று வேளையும் ஒரு மாசம் சாப்பிடணும். ஒரு நாளைக்கு ரூ.30ன்னு வச்சா அதில் என்ன சாப்பிட முடியும். எங்க கடையில் மதிய உணவு மட்டுமே ரூ.30க்கு தரோம். அப்ப மத்த நேரம்? இதே நிலை தான் எங்க உணவகத்தில் தினமும் சில்லரை என்னுபவரின் நிலை. உடனடியாக 30 ரூபாய் இருந்த சாப்பாட்டை 10 ரூபாய்க்கு வழங்க ஆரம்பிச்சோம். அதே போல் தோணுகால், பாம்பாட்டி, பாஞ்சா.. போன்ற சுற்றுவட்டார கிராமத்தில் இருக்கும் ஆதரவற்றோர், முதியோர், மனநிலை பாதிக்கப்பட்டவர், திருநங்கைகள் என கணக்கெடுத்து அவர்களுக்கு மூன்று வேளை உணவு கொடுக்க ஆரம்பிச்சோம்.

அதுமட்டும் இல்லாமல் நரிக்குறவர்கள் 350 பேருக்கும் இந்த ஊரடங்கு நேரத்தில் இருந்து சாப்பாடு கொடுத்து வருகிறோம். எங்க ஓட்டலில் உணவு தயாராகி, அந்தந்த ஊர்களுக்கு வண்டியில் எடுத்து சென்று கொடுக்கிறோம். அதே போல் எங்க உணவகத்திலும் பத்து ரூபாய்க்கு சாப்பாடு கொடுக்க ஆரம்பிச்சதும் விற்பனையும் அதிகமாச்சு. பலர் சாப்பாடு வாங்கி மற்றவர்களுக்கு கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க’’ என்றவர் இதற்காக ஒரு அறக்கட்டளையும் துவங்கி அதன் மூலம் செயல்பட்டு வருகிறார்.

‘‘பசின்னு யார் வந்தாலும் எங்க உணவகத்தில் சாப்பாடு உண்டு. நானும் சரி தம்பியும் சரி இவங்களுக்கு சாப்பாடு தருவதில் கணக்கு பார்ப்பதில்லை. சில சமயங்களில் பலசரக்கு மற்றும் காய்கறி கடைகளில் பாக்கி அப்படியே இருக்கும். அந்த சமயத்தில் என்னுடைய நகையை விற்றுவிடுவேன். அல்லது எதிர்பாராத விதமா யாராவது திருமண நாள், பிறந்தநாள்னு பணமாகவோ அல்லது சாப்பாடுன்னு உதவி செய்ய முன்வருவாங்க.

வயிராற சாப்பிட்டு அவங்க முகத்தில் வெளிப்படும் ஒரு சின்ன புன்னகைதான் எங்களை மேலும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை பார்க்கும் போது எங்க மனசுக்கு அவ்வளவு திருப்தியா இருக்கும். எங்க இருவரையும் பொறுத்தவரை எங்க காலத்திற்கு பிறகும் ‘அணையா அடுப்பு’ போல எங்களின் உணவகம் செயல்பட வேண்டும்’’ என்றனர் இருவரும் கோரசாக.

செய்தி: ப்ரியா

படங்கள்: நாகராஜ்

Related Stories: