×

சாக்லேட் பூச்செடிகளாக மாறும் அழைப்பிதழ்கள்!

நன்றி குங்குமம் தோழி

ஆயிரம் பேருடன் ஆடம்பரமாக  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமணங்கள், இப்போது ஊர் முடக்கத்தினால் கோயில்களிலும், வீடுகளிலும் ஐம்பது பேருடன் அவசர அவசரமாக நடக்கின்றன. உற்ற உறவினர்கள், உயிர் நண்பர்கள், ஏன் பெற்றோர்கள் கூட கலந்துகொள்ள முடியாமல் சில திருமணங்கள் நடந்து முடிகின்றன. இந்த காலக்கட்டத்திற்கு ஏற்ப ஆன்லைன் லைவ்-திருமணங்கள், இணையத்தில் மொய்... என்று மாறி வருகிறது.

கொரோனா அதிர்வு உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், மண்டபங்கள் முதல் அச்சுத்தொழில் வரை திருமணம் சார்ந்து இயங்கி வந்த தொழில்கள் பல பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் தொழில் யுக்தியையும் மாற்றி, இந்த இக்கட்டான சூழ்நிலையில் சில அழைப்பிதழ் அச்சிடும் நிறுவனங்கள், தங்கள் வியாபாரத்தைத் தக்க வைத்துள்ளனர். அவ்வாறு தன் தொழிலை அப்டேட் செய்து தக்கவைத்துக் கொண்டவர் ‘தட்ஒன்கார்ட்’ (That1Card) உரிமையாளரான சென்னையை சேர்ந்த துர்கேஷ்.  லைவ்- திருமணம், வாட்ஸ்அப் ஸ்டிக்கர்ஸ், மணமக்களுக்கான சிறப்பு இணையதளம் எனத் தொழில்நுட்பத்தின் உதவியோடு, காலத்திற்கேற்ப வியாபார யுக்தியை மாற்றி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறார்.

‘‘இந்தியாவில் திருமணத்தைப் போலவே, திருமண அழைப்பிதழ்களிலும் ஆடம்பரமும் அழகும் நிறைந்திருக்கும். திருமணத்தின் தொடக்கமே, அழைப்பிதழ்கள் அச்சிடுவதில்தான் ஆரம்பிக்கின்றன. ஊரடங்கு காலம் என்பதால், திருமணம் சார்ந்த சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான். நாங்களும் சில மாதங்களுக்கு வியாபாரம் இருக்காது என்றே நினைத்தோம். ஆனால், எங்களுக்கு மாதம் சுமார் பத்து பதினைந்து வாடிக்கையாளர்கள் கிடைத்துவிடுகின்றனர். இருந்தும், சாதாரணமாக குறைந்தது நூறு பத்திரிகைகளாவது அச்சிடும் எங்கள் நிறுவனம், இப்போது வெறும் ஐம்பது அழைப்பிதழ்கள்தான் தயாரிக்கிறோம்.

இந்த ஊரடங்கு சமயத்தில் நாங்கள் புதிதாக அறிமுகப்படுத்தியிருப்பது வாட்ஸ்-அப் ஸ்டிக்கர் சேவையும், மணமக்களுக்கான பிரத்தியேக வெப்-சைட்டும் தான். மணமக்களின் புகைப்படத்தை வாட்ஸப் ஸ்டிக்கர்களாக உருவாக்கி தருவோம். அவர்கள் அந்த ஸ்டிக்கரை பயன்படுத்தி, வாட்ஸ்அப் மூலம் நண்பர்களைத் திருமணத்திற்கு அழைத்து உரையாடலாம். அடுத்ததாக, மணமக்களுக்கான பிரத்தியேக இணையதளம். மணமக்கள் சந்திக்கும் முதல் நாளிலிருந்து தொடங்கி, அவர்கள் திருமணம் நடந்து முடியும் வரை இணைய தளத்தில் தங்களின் புகைப்படங்கள், காணொளிகளைப் பதிவேற்றலாம். இந்த இணைப்பை நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களுடன் நிகழ்ச்சியை கொண்டாடலாம். இந்த இணைப்பு ஒரு வருடத்திற்கு இலவசமாக உருவாக்கி தரப்படும். அதன் பிறகு கட்டணம் செலுத்தி பார்க்கலாம்’’ என்று கூறும் துர்கேஷுடன் அவரது தொழில் நண்பர்கள் பிரபுவும், ஜெயயும் இணைந்து செயல்படுத்தி வருகின்றனர்.

‘‘நாங்க தயாரிக்கும்  அழைப்பிதழ்கள் அனைத்துமே வாடிக்கையாளர் களின் விருப்பத்திற்கேற்ப அமைத்து தருகிறோம். எங்களின் ஸ்பெஷாலிட்டி விதை பத்திரிகைகள். துளசி, சாமந்தி, தக்காளி போன்ற விதைகள் பதிக்கப்பட்ட பத்திரிகைகளை தயாரிக்கிறோம். ஒரு மண் தொட்டியில், இந்த விதை அழைப்பிதழ்களை படித்ததும் புதைத்து வைத்தால், சில நாட்களிலேயே விதைகளிலிருந்து செடி முளைக்கும்” என்கின்றனர் இருவரும். இது தவிர, கார்ட்டூன், கேலிச்சித்திரங்கள் (caricature) அடங்கிய அழைப்பிதழ்கள், வாட்ஸ்அப் அழைப்பிதழ்கள், சாக்லெட் அழைப்பிதழ்கள், டிஜிட்டல் அழைப்பிதழ்கள், கை விசிறி அழைப்பிதழ்கள் என வகை வகையான திருமண அழைப்பிதழ்களைக் காலத்திற்கேற்ப அப்டேட் செய்துகொண்டே வருகின்றனர். இவர்கள் தயாரிக்கும் சாக்லெட் அழைப்பிதழ்களுக்காக பிரத்தியேகமாக ஒரு குழு வேலை செய்கிறது.

‘‘நீங்கள் கற்பனை செய்து வைத்திருக்கும் அழைப்பிதழை அப்படியே நாங்க உருவாக்கி தருகிறோம். மணப்பெண் - மாப்பிள்ளையின் கதை, அவர்களுக்குப் பிடித்த விஷயங்கள் என பல தீம்களில் அழைப்பிதழ்களை அமைக்கிறோம். எந்த மாதிரியான டிசைனையும், எதிலும் அச்சிட்டு அழைப்பிதழாக மாற்றி தரமுடியும். மரப்பலகை, காகிதம், துணி, கண்ணாடி எதையும் விட்டுவைக்கவில்லை. பாரம்பரிய வழியில் தொடங்கி, இக்காலத்து இளைஞர்களை ஈர்க்கும் வகையில் புதுமையான டிசைன்கள்தான் வாடிக்கையாளர்களை கவர்கிறது’’ என்றார் துர்கேஷ்.

செய்தி: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!