×

நான் நடிகனாக காரணம் சூப்பர்ஸ்டார்தான்!

நன்றி குங்குமம் தோழி

நடிகர் முத்தழகன்

“வாழ்க்கையில் பல நேரங்கள் என்னை  மன அழுத்தத்திலிருந்து மீட்டெடுத்தது சினிமா மட்டுமே. எனக்கு உதவிய சினிமா மற்றவர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் உதவாமலா போய்விடும். அந்த சினிமா என்ற கலையின் மூலம் நானும் ஏதோ ஒன்றை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்வதுதான் அந்த சினிமாவிற்கு நான் செய்யும் நன்றிக் கடன்” என்கிறார் நடிகர் முத்தழகன்.

நடிகர் சார்லி சாப்லின் என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது சிரிப்புடன் நம்மை சிந்திக்க வைப்பது. ஆனால் ‘பெண்குயின்’ திரைப்படத்தில் சாப்லின் உருவம் நம்மை மிரட்டி இருக்கும். இறுதி வரை முகம் தெரியாமல் தன் நடிப்பாற்றலின் மூலம் மட்டுமே கவனம் பெற்றிருக்கும் முத்தழகனின் சொந்த ஊர் திட்டக்குடி.

“அப்பா, அம்மா ஆசிரியர்கள். அவர்களின் கனவு என்னை ஐ.ஏ.எஸ் ஆக்குவது. ஆனால் எனக்கோ சிறுவயதிலிருந்து நடிப்பதில் மட்டும்தான் ஆர்வம். பி.இ. ஏரோநாட்டிக்கல், எம்.பி.ஏ டிகிரி முடித்தபின் ஐ.ஏ.எஸ் கோச்சிங் போறேன் என்று வீட்டில் சொல்லி சென்னை வந்தேன். படிக்க வந்தாலும் நடிப்பு ஆசை துரத்திக் கொண்டே இருந்தது. அப்போதுதான் கூத்துப்பட்டறை எனக்கு அறிமுகமானது.

நடிப்பு, படிப்பு என்று ஒரே நேரத்தில் இயங்கி கொண்டிருந்தாலும் கடைசியில் நடிப்பிற்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து ஒவ்வொரு சினிமா ஆபீஸா போட்டோ கொடுக்க ஆரம்பித்தேன். முதன் முதலில் இயக்குநர் மோகன் ராஜா சார் ஆபீஸில் தான் கொடுத்தேன். அதன் பின் முன்னூறுக்கும் மேற்பட்ட ஆடிஷனுக்கு போயிருப்பேன். ஏதும் பலன் கொடுக்கவில்லை. மூன்றாண்டுகள் உருண்டோடியது.

ஒரு நாள் எனக்கு அழைப்பு வந்தது. மறுநாள் ஆடிஷன் இருக்கு வந்திடுங்கன்னு. அங்கு போய் பார்த்தால் ஏற்கனவே ஐம்பது பேர் இருந்தாங்க. நம்மால் முடிந்த அளவு திறமையை வெளிப்படுத்துவோம்னு நடிச்சேன். தேர்வும் ஆனேன். என்னுடைய முதல் படம் வேலைக்காரன். அதன் பின் ‘பொது நலன் கருதி’, ‘என்.ஜி.கே’, ‘வால்டர்’, ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, ‘அதே கண்கள்’ போன்ற படங்களில் என் முகம் தெரிய ஆரம்பித்தது” என்று கூறும் முத்தழகன், தன் முகமே தெரியாத ‘பெண்குயின்’ திரைப்படத்தில் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்தார்.

‘‘இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் கூத்துப்பட்டறையில் எனக்கு அறிமுகமானார். நல்ல நண்பரும் கூட. அவர் ஒரு நாள், ‘ஸ்டோன் பெஞ்சில் கமிட்டாகி இருக்கேன். எனக்காக ஒரு ரோல் பண்ணி கொடுக்கிறியா? படம் முழுக்க மாஸ்க் போட்டு தான் இருக்கணும். முகம் தெரியாதுன்னு’ சொன்னார். நண்பனோட முதல் படம், அதில் நாமும் இருக்குறது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

சார்லி சாப்லின் மாஸ்க்னு சொல்லும் போது, அவர் சிரிக்க வைப்பார்... சந்தோஷப்படுத்துவார்... நான் என்ன பண்ணணும்னு கேட்டேன். அதற்கு நேர் எதிரா ‘இந்த மாஸ்க் போட்டு நடிக்கும் போது எவ்வளவு டெரரா காட்டுறியோ அதுதான் படத்தோட வெற்றி’னு சொல்லி அந்த கதாபாத்திரத்தின் முழு பொறுப்பையும் என்கிட்ட ஒப்படைச்சுட்டாரு.

முகம் தெரியாமல் உடல் மொழி மூலம் மட்டுமே அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கணும். எனக்கு இது சவாலாகவும் இருந்ததோடு கூடுதல் பொறுப்பும் ஆனது. கொஞ்சம் பிசுரு தட்டினாலும் சுவாரசியம் குறைந்திடும். மேக்கப், மாஸ்க் போட்டு நடிக்கும் போது சிரத்தையாக இருந்தாலும் மக்களிடம் பாராட்டு வாங்கும் போது எல்லாம் காணாமல் போனது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு சைன் லாங்குவேஜ் ஈஸ்வர் செய்து காட்டினார். வழக்கம் போல் இல்லாமல், இந்த கதாபாத்திரம் கம்யூனிகேட் பண்றதுக்காக பிரத்தியேகமா பண்ணி இருந்தார். இதையே வேற லெவல்ல பண்ணா கண்டிப்பா ரீச் ஆகும்னு தோணுச்சு. அதனால் நான் ஒரு செய்கை மொழியினை வடிவமைச்சி அவருக்கு செய்து காண்பிச்சேன். ‘மச்சான் சூப்பரா இருக்கு இதையே பிக்ஸ் பண்ணிக்கோ’னு சொல்லிட்டு போயிட்டார். அந்த சீனில் கீர்த்தி சுரேஷ் இருப்பாங்க. நான் கண்ணாடிக்கு பின்னாடி குடை பிடிச்சுட்டு நிற்பேன்.

கதவை திறந்து ஒரு மேனரிசமில் வாக் கொடுத்து போனேன். எல்லோரும் ஸ்பாட்டிலேயே ரொம்ப பாராட்டுனாங்க. அந்த காஸ்டியூம், க்ளவுஸ், சாப்லின் மாஸ்க்… என்னை என்னமோ பண்ணிருச்சு. என்னுடைய சிந்தனைக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் தான் என்னால் செய்ய முடிந்தது. சும்மா நின்னா போதும்னு சொல்லி இருந்தா நான் வெளியவே தெரிந்திருக்க மாட்டேன். அந்த அளவு எனக்கான இடத்தை ஈஸ்வர் உருவாக்கி கொடுத்தார்”  என்று கூறும் முத்தழகன், நடிகராக காரணமே சூப்பர் ஸ்டார்தானாம்.

“படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தாலும், ரஜினி சாரின் தீவிர ரசிகன். இரண்டாவது படிக்கும் போதே அவர் மாதிரி நடிச்சு காண்பிப்பேன். சினிமாவில் நடிப்பது எளிதுன்னுதான் சென்னைக்கு வந்தேன். ஆனால், இங்கு என்னை போல் பல ஆயிரம் பேர் முயற்சி செய்து கொண்டிருக்காங்கன்னு பார்க்கும் போது கொஞ்சம் பயமாக இருந்தது. இந்தப் பயணம் கடினம் என்று புரிந்தது. ஆனால் இவ்வளவு தூரம் வாழ்க்கையே புரட்டி போடும், சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவோம்னு நினைச்சுக் கூட பார்க்கல.

நான் கற்ற விஷயங்கள் எல்லாம் மறந்துவிட்டு மீண்டும் ஜீரோவிலிருந்து ஆரம்பிக்கிறேன். வாழ்க்கையில் இது மாதிரி பாடம் கிடைக்காது. எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் வந்த எனக்கு, ரொம்பவும் பிடித்த ஒரு விஷயத்தை விடவும் முடியவில்லை. பலரது வாழ்வை மேம்படுத்த நல்ல படங்கள் உதவியுள்ளது. அதே போல் நான் நடிக்கும் படங்கள் மூலம் ஏதாவது நல்லது நடந்தால் சந்தோஷம் தான். அதைத் தாண்டி கிடைக்கும் பாராட்டுகள் எனக்கு ஆத்ம திருப்தியை ஏற்படுத்தும்’’ என்றார்.

தொகுப்பு: அன்னம் அரசு

Tags : superstar ,
× RELATED வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்!