×

பால்கனியிலும் கீரை வளர்க்கலாம்!

நன்றி குங்குமம் தோழி

வீட்டுத் தோட்டம் அல்லது பால்கனி தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் கோதுமை புல்லுக்குப் பிறகு எளிதாக வளர்க்கக்கூடிய கீரை வகை வெந்தயக்கீரை. நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு வெந்தயம் மற்றும் வெந்தயக்கீரை மிகவும் நல்லது. இதனை வீட்டிலேயே எளிதாக வளர்க்கலாம்.

வெந்தயம் 50 கிராம் முதல் 100 கிராம் எடுத்துக் கொள்ளுங்கள். கீரையை வளர்க்க அகலமான தொட்டி. வெந்தயத்தை 8-12 மணி நேரம் நன்றாக நீரில் ஊற வைத்துக்கொள்ளவும். பின் நீரை வடித்து துணியிலோ அல்லது ஹாட் பேக் பாத்திரத்திலோ 8-12 மணி நேரம் நன்றாக முளை கட்டிக்கொள்ளவும். இப்போது உங்கள் விதைகள் தயார். நீங்கள் வளர்க்கப்போகும் தொட்டியின் உயரம் 5-6 இஞ்ச்களாவது இருக்க வேண்டும். நடவேண்டிய தொட்டியில் மண்ணை நிரப்பிக்கொள்ளுங்கள்.

பின் வெந்தயத்தை நன்றாக பரப்பி தூவி விடுங்கள். விதைகளை நெருக்கமாகத் தூவ வேண்டும். பின் மேலே மண்ணைத்தூவி மூடுங்கள். லேசாக விதைகள் மறையும் அளவு மண்ணை மேலே தூவினால் போதுமானது. பிறகு தண்ணீரை தெளித்து விடவேண்டும். அப்படியே ஊற்றக்கூடாது. தொட்டியில் எப்போதும் ஈரப்பதம் இருக்க வேண்டும். அதாவது தினமும் தண்ணீர தெளித்து வந்தால் போதும். அதிகமாக தண்ணீர் விட்டால், விதைகள் அழுகிவிடும். அதே போல் நேரடியாக சூரியன் கதிர்கள் படும் படி வைக்கக் கூடாது.

சூரிய வெளிச்சம் இருக்கும் இடமே கீரை வளர்வதற்கு போதுமானது. தொட்டியின் அடியில் நாம் அதிகப்படியாக தண்ணீர் ஊற்றினால் அவை தங்காமல் வெளியே செல்வதற்கு ஏற்ப சிறிது துளை அமைக்க வேண்டும். கடைகளில் வாங்கும் தொட்டியில் இந்த துளை போட்டபடியே விற்பனை செய்வார்கள். நீங்கள் சின்ன பிளாஸ்டிக் தொட்டியில் வளர்ப்பதாக இருந்தால், சூடான கம்பிக் கொண்டு முதலில் துளையிட்டு பிறகு விதை விதைக்கவும். ஏழு நாட்களில் துளிர் வந்தாலும், முழுதாக அறுவடை செய்ய ஒரு மாதம் ஆகும்.

தொகுப்பு: எஸ். மேரி ரஞ்சிதம், நாட்டரசன்கோட்டை.

அட்டைப்படம்:  ப்ரீத்தி ஷர்மா

Tags : balcony ,
× RELATED கொல்கத்தாவில் லார்ட்ஸ் பால்கனி!