தோட்டத்தில் விளைந்த கொரோனா எதிர்ப்பு

நன்றி குங்குமம் தோழி

நர்சரி பிள்ளைகள் சின்னஞ்சிறு வயதில் ‘ரெயின் ரெயின் கோ அவே...’ என்று பாடுவதை கேட்டிருப்போம்.  விவசாய நாடான இந்தியாவில் மழைக்காக தவமிருக்கும் விவசாயிகள் இந்த பாடலின் அர்த்தம் தெரியாமலே தனது பேரப்பிள்ளைகள் ஏதோ இங்கிலீசில் பாடுகிறார்கள் என்பதற்காக தலையாட்டி ரசிப்பது உண்டு. இப்போது கொரோனா தொற்றால் உலகமே பாதிக்கப்பட்டு பொருளாதாரமே சீர்குலைந்துள்ள நிலையில் சீனாவுக்கு சாபம் விடும் டிரம்ப் முதல் மதுரை பாட்டி வரை கோவிட்டை அப்படியே பத்திட்டு போயிடுப்பா நாங்க ரொம்ப பாவம் என்பது வரை போய்விட்டது.

மிசிக்கன் நாட்டின் சாகினாவ் பகுதியில் உள்ள ஜான்சன் மெகா பூசணிக்காய் தோட்டம் இப்போது கொரோனா விழிப்புணர்வுக்காக  சமூக வலைத்தளங்களில் 2000 முறை ஷேர் செய்யப்பட்டுள்ளது. அப்படி என்ன விசேஷம் அந்த தோட்டத்தில் என்கிறீர்களா? இந்த தோட்டத்தை மேலோட்டமாக பார்த்தால் அது சோளக்காடு என்று தான் நினைக்க தோன்றும். அதை மேலிருந்து புகைப்படமாக எடுத்து பார்த்தபோது அதில்  ‘COVID Go Away’ என எழுதப்பட்டிருப்பதை காணமுடிகிறது.  

13 ஏக்கரில் இந்த வாசகத்தை வளர்த்துள்ளார் இந்த தோட்டத்தின் உரிமையாளர் ஜான்சன். ‘‘கொரோனா தொற்று ஏற்பட்டதில் இருந்து உலக பொருளாதாரமே முடங்கி போய்விட்டது. விளைபொருட்களின் விலையும் வெகுவாக சரிந்து விட்டது. எனவே விவசாயிகள் முதல் பள்ளி மாணவர்கள், வர்த்தகர்கள் என அனைத்து தரப்பினரையும் அழவைத்த கொரோனா தொற்றை போ என விரட்டுவதற்காக இந்த தோட்டத்தில் உள்ள சோள பயிர்களை சரியாக வெட்டி இந்த வாசகத்தை உருவாக்கியுள்ளேன்’’ என்கிறார் அவர்.

இந்த தோட்டத்தை பொதுமக்கள் பார்வைக்காக வரும் அக்டோபரில் திறக்க உள்ளார் ஜான்சன். அதற்கு இலவச அனுமதியும் வழங்க உள்ளார். ஆனால் தோட்டத்திற்கு வர விரும்புபவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வரவேண்டும் என்பது தான் இவரது ஒரே நிபந்தனை. பசுமையான தோட்டத்துக்கே கொரோனாவை பிடிக்கவில்லை என்பதால் மெல்ல மெல்ல கொரோனா இனி சாகும் என நம்பலாம்.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Related Stories: