வலிகள் போக்கும் மூங்கில் சிகிச்சை!

நன்றி குங்குமம் டாக்டர்

பொதுவாக கை, கால் வலிகளுக்கு
ஏதாவதொரு வலிநிவாரணியை வாங்கி போட்டுக் கொண்டு உடனடி நிவாரணத்தைத்தான் தேடுவோம். இன்னும் சிலர் பாடி மசாஜ், ஆயுர்வேத குளியல் என ஸ்பாக்கள் சென்று வருவார்கள். இதில் சமீபத்திய புதிய முயற்சியாக Bamboo Tapping என்ற சிகிச்சையைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். பண்டைய சீன சிகிச்சைகளில் ஒன்றுதான் மூங்கிலைக் கொண்டு செய்யப்படும் Bamboo Tapping. கடுமையான வேலைப்பளுவினால், மன நிம்மதியின்றி வாழும் நகரவாசிகள் வித்தியாசமான இந்த சீன சிகிச்சையை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இதனால் தற்போது டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் Bamboo Tapping மசாஜ் மிகப் பிரபலமாகிவருகிறது. இந்த சிகிச்சையில் மூங்கில் மரத்திலிருந்து எடுக்கப்பட்ட மெல்லிய குச்சிகளை இறுக்கமான பண்டல்களாகக் கட்டி, அதை உடலெங்கும் உருட்டுகிறார்கள். இயல்பாகவே நெகிழ்வுத் தன்மை கொண்ட மூங்கிலானது இந்த சீன சிகிச்சையில் மனதைக் குளிர்ச்சியாக்கி, அமைதிப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக இந்த மூங்கிலை வலி உள்ள இடங்களில் தட்டுவதன் மூலம் ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்த முடிகிறது.

மேலும் உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம், உணர்ச்சிகரமான மனநிலை மற்றும் உடல் காயங்களால் ஏற்படும் ரத்த ஓட்டத்தடையைப் போக்கி  உடலின் நேரடி ஆற்றலைத் தூண்டுகிறது இந்த சிகிச்சை. குறிப்பாக அடிவயிறு, முழங்கையின் முட்டி மற்றும் இதர மூட்டுகளில் தினமும் குறைந்தபட்சம் 5 முறையாவது இந்த மூங்கில் குச்சியால் தட்டி மசாஜ் செய்யும்போது மூட்டு இணைப்புகளில் உள்ள இறுக்கம் மற்றும் நிணநீர் வடிகால் தேக்கங்களை விடுவிக்கலாம். அதோடு உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் உடல் ஆற்றலையும் தூண்டிவிடலாம் என்கிறார்கள்.

சோர்வாகவும், மந்தமாகவும் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாக இருக்கும். சருமத்தின் இறந்த செல்களை புதுப்பித்து, பளபளப்பாக வைத்துக் கொள்ள விரும்புபவர்கள் அதிகாலையில் இதைச் செய்யலாம். கடினமான வேலை உள்ள நாட்களில் உடல் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க அன்றைய நாளின் இரவில் இதை மெதுவாக செய்யலாம் என்றும் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

தொகுப்பு: இந்துமதி

Tags :
× RELATED காற்று மாசை இனி கட்டுப்படுத்தலாம்