பெண் மைய சினிமா - ஜெஸ்ஸி டயல் செய்த எண்

நன்றி குங்குமம் தோழி

ஆறாவது  விரலாய்  மாறிவிட்டது  ஸ்மார்ட்போன்.  ஃபேஸ்புக், வாட்ஸப்பில் இல்லாத ஓர் இளம் பெண்ணையோ, ஆணையோ காண்பது அரிது. டிஜிட்டல் உலகில் முன்பின் அறியாத, நேரடியான அறிமுகமில்லாத நபர்களுடன் நட்பு கொள்வதும் உரையாடுவதும் சகஜமாகிவிட்டது. இந்த நட்பு காதலை நோக்கி எளிமையாக நகர்ந்துவிடுகிறது.

இப்படியான காதல் பெரும்பாலான நேரங்களில் பணத்தை சுரண்டுவதிலும் ஏமாற்றத்திலும் முடிவதை செய்திகளில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படமாக மிளிர்கிறது ‘கப்பேலா’. முன்பின் அறிந்திராத ஒருவர் மீது கண்மூடித்தனமாக வைக்கப்படும் காதல், பெண்களை எப்படியான ஆபத்தில் எல்லாம் கொண்டுபோய் நிறுத்தும் என்று எச்சரிக்கை மணியை அழுத்தமாக அடித்திருக்கிறது இந்தப் படம்.

சமீபத்தில் ‘நெட்பிளிக்ஸி'ல்  வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கும் மலையாளப் படம் இது.கேரளாவில் உள்ள ஓர் அழகான கிராமம். அங்கே உள்ள ஒரு கீழ் நடுத்தரக் குடும்பத்தின் மூத்த மகள் ஜெஸ்ஸி. படிப்பை நிறுத்திவிட்டு வீட்டுக்கு உதவியாகவும் எம்பிராய்டரி வேலைகளையும் செய்து வருகிறாள். அவளது அம்மா ஒரு டெய்லர். அப்பா விவசாயம் செய்கிறார். ஒரு நாள் அம்மாவின் வாடிக்கையாளர் ஒருவருக்கு கால் பண்ணும்போது தவறான எண்ணை டயல் செய்து விடுகிறாள் ஜெஸ்ஸி. உடனே அந்த காலை கட் செய்துவிடுகிறாள்.

அந்த தவறான எண் ஆட்டோ ஓட்டுநர் விஷ்ணுவுடையது. தனக்குப் போன் செய்தது ஓர் இளம் பெண் என்று அறிந்ததும் திருப்பி அழைக்கிறான் விஷ்ணு. ஆனால், ஜெஸ்ஸியோ விஷ்ணுவிடம் தவறு நேர்ந்துவிட்டது. இனிமேல் எனக்கு அழைக்க வேண்டாம் என்கிறாள். கொஞ்ச நேரத்துக்குப் பின் விஷ்ணு மறுபடியும் அழைக்கிறான். ஜெஸ்ஸி பதில் ஏதும் சொல்வதில்லை.

ஆனால், விடாப்பிடியாக விஷ்ணு ஜெஸ்ஸிக்கு அழைத்துக்கொண்டே இருக்கிறான். ஒரு கட்டத்தில் ஜெஸ்ஸியும் வேண்டா வெறுப்புடன் பதில் சொல்ல ஆரம்பிக்கிறாள். முன்பின் அறிந்திராத ஒருவருடன் பேசுவது அவளுக்குப் பிடித்திருக்கிறது. அது ஒரு த்ரில்லிங் அனுபவமாகவும் இருக்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்க்காமலே நண்பர்கள் போல தினமும் போனில் பேசிக்கொள்கிறார்கள்.

ஜெஸ்ஸி கால் செய்யும்போதெல்லாம் தன்னை ஒரு நல்லவன் போல காட்டிக் கொள்கிறான் விஷ்ணு. அவனை நல்லவன் என்று நம்புகிறாள். அவனுடனான உரையாடல் ஜெஸ்ஸியை ரொம்பவே ஈர்க்கிறது. விஷ்ணு தான் தனக்கு சரியான ஜோடியாக இருப்பான் என்ற முடிவுக்கு வருகிறாள். நாளடைவில் பார்க்காமலே அவர்களுக்குள் காதல் மலர்கிறது.

இந்நிலையில் ஜெஸ்ஸிக்கு அவள் ஊரிலேயே ஒரு மாப்பிள்ளையைப் பெற்றோர் பார்க்கின்றனர். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அந்த மாப்பிள்ளை ஜெஸ்ஸியைத்தான் கல்யாணம் செய்வேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார். ஆனால், ஜெஸ்ஸிக்குப் பெற்றோர் பார்க்கும் திருமணத்தில் கொஞ்சம் கூட விருப்பமில்லை. வீட்டில் நடந்த திருமண ஏற்பாடு பற்றி விஷ்ணுவிடம் சொல்கிறாள். அவனோ வீட்டில் பார்த்த மாப்பிள்ளையையே கட்டிக்கொள் என்கிறான். ஆனால், ஜெஸ்ஸியோ விஷ்ணுவைத்தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கிறாள்.

அந்தளவுக்கு அவன் ஜெஸ்ஸியைக் காதல் வலையில் வீழ்த்தியிருக்கிறான். இத்தனைக்கும் விஷ்ணுவைப் பற்றிய எந்த பின்புலமும் உண்மையும் ஜெஸ்ஸிக்குத் தெரியாது. ஒரு நாள் அப்பாவும் அம்மாவும் வீட்டில் இல்லாதபோது விஷ்ணுவைத் தேடி கோழிக்கோட்டிற்குப் போகிறாள். அங்கே அவளுக்கு யாரையும் தெரியாது. முழுக்க முழுக்க விஷ்ணுவை நம்பிப்போகிறாள் ஜெஸ்ஸி. ஆனால், அவள் எதிர்பார்த்ததுக்கு  நேர்மாறாக  எல்லாமுமே நடக்கிறது. அங்கே அவள் சந்திக்கும் ஒவ்வொரு சம்பவமும் ஜெஸ்ஸியை மட்டுமல்ல பார்வையாளனையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அவளுக்காக காத்திருந்த பெரும் ஆபத்திலிருந்து ஜெஸ்ஸி எப்படி மீண்டாள்? என்பது மீதிக்கதை.

பார்க்காமலேயே காதல் என்று ரொமான்டிக்காக நகரும் கதை பல அதிரடியான திருப்பங்களுடன் விஸ்வரூபம் எடுத்து படத்துடன் நம்மை ஒன்றிப்போக வைக்கிறது. ஜெஸ்ஸிக்குக் கிடைக்கும் அனுபவம் இன்றைய இளம் பெண்களுக்கு விழிப்புணர்வு மெசேஜ். ஜெஸ்ஸியாக ‘கும்பளாங்கி நைட்ஸ்’ புகழ் அன்னா பென் வெகு இயல்பாக நடித்திருக்கிறார். காதல், பதற்றம், பயம் என அனைத்து உணர்வுகளையும் முகத்திலேயே காட்டிவிடுகிறார் அன்னா.

விஷ்ணுவாக நடித்தவரின் நடிப்பும் சிறப்பு. கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார் ராயாக நடித்த ஸ்ரீநாத் பாஸி. ‘காதல் கோட்டை' காலத்தில் பார்க்காமலேயே காதல் ஆச்சர்யம். வீடியோ சாட்டிங் காலத்திலும் அப்படியான ஒரு காதலை வைத்துக்கொண்டு திரைக்கதையில் விளையாடியிருக்கிறார் இயக்குனர் முகம்மது முஸ்தபா. தெலுங்கில் ரீமேக்காகிறது ‘கப்பேலா'. ஒரு பக்கம் காதலுக்கு எதிராக தோன்றினாலும் இன்னொரு பக்கம் காதலின் பொருட்டு எப்படியெல்லாம் பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள்; பலிகடாவாக்கப்படுகிறார்கள் என்பதையும் ஆழமாக சித்தரிக்கிறது இப்படம்.

தொகுப்பு: த.சக்திவேல்

Related Stories:

>