×

கற்பித்தல் என்னும் கலை

நன்றி குங்குமம் தோழி

நல்ல ஒரு குடும்ப சூழலும், முழு ஒத்துழைப்புத் தந்து பிள்ளைகளின் மனதை புரிந்து நடந்துகொள்ளும் பெற்றோர்களும் அமைந்துவிட்டால் பிள்ளைகளின் கல்வி எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. அவர்களுக்கு வேண்டிய ஒத்துழைப்பு ஆசிரியர்களிடமிருந்தும் போதிய அளவில் கிடைத்துவிட்டால், அவர்கள் கல்விப்பயணம் வெற்றியாகத்தான் அமையும். சில நேரங்களில், பிள்ளைகள் புத்திசாலியாக இருப்பார்கள்.

பெற்றோரும் நல்ல சூழலைத்தர விரும்புவர். ஆனால், அவர்களின் வறுமை என்னும் கொடிய நோய் தாக்கத்தால் பிள்ளைகளும் பாதிக்கப்படுவதுண்டு. அந்த நேரங்களில் அவர்களின் பின்னணி ஆசிரியர்களுக்கும் தெரியாமல் போனால், பிள்ளைகளைப்பற்றி பலவிதமான யோசனைகள் எழக்கூடும். இந்த உறவு என்பது ஒன்றுக்கொன்று பிணைந்து காணப்படுவது. பிள்ளைகளின் மனநிலையோ, அவர்கள் வளர்ந்து வரும் சூழலோ தெரியாமல், ஒன்றிரண்டு வார்த்தைகள் சாதாரணமாகக் கூறினால்கூட அது அவர்கள் மனதை பாதிக்கலாம்.

‘‘வீட்டுப்பாடம் முடிக்கா விட்டால் சாப்பாடு கிடை யாது’’ என்று அம்மா கூற, ‘‘முடிக்காமல் நுழையக்கூடாது’’ என்று கற்பிப்பவர் சொல்ல
பிள்ளைகள் மனம் பாடுபடும். ‘‘இப்பொழுது தூங்கி, காலையில் எழுந்து செய்’’ என்று சொல்லி மறுபுறம் ‘பரவாயில்லை, இவ்வளவு எழுதி விட்டாயே! இன்னும்  கொஞ்சம்தானே, ‘நாளை முடிக்கலாம் விடு’ என்று சொல்ல மனம் ஆறுதல் அடையும்.

அப்பொழுது முடிக்கவே தோன்றும். இதெல்லாம், வேண்டுமென்று நடப்பதே இல்லை. பாடத்தில் செய்ய வேண்டிய கட்டாயத்தை அம்மா வலியுறுத்துகிறார். இதை இவன் முடித்தால்தானே அடுத்ததைப் பார்க்க முடியும் என்று ஆசிரியர் நினைக்கிறார். ஆக இரண்டுமே தப்பில்லைதான். ஆனால் மாணவனுக்கோ, மாணவிக்கோ சூழல் சரியில்லையென்றால்தான், பிரச்னைகள் ஆரம்பம். எல்லாமே சுமுகமாக நடந்து விட்டால், அனைவருக்கும் சந்தோஷம்தான்.

ஒருவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து, பிழைக்க மாட்டார் என்னும் நிலையில், ஒரு டாக்டர் அவரை பிழைக்க வைத்துவிட்டார் என்றால், அவர் நம் கண்களுக்கு கடவுள் மாதிரிதான். அதேபோல்தான், மிகவும் பலவீனமான ஒரு பிள்ளையை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வைக்கும்பொழுது கிடைக்கும் சந்தோஷம் என்பது. தன் பிள்ளைகள் எல்லோருமே முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று விட்டார்களென்றால், அந்த ஆசிரியருக்கு அதைவிட சந்தோஷம் வேறு கிடையாது. நாங்கள் பொதுவாக, பல வருடங்கள் பிள்ளைகளுடன் ஒன்றி விடுவதால்தான், ‘பிள்ளைகள்’ என்றே சொல்வோம். மாணவர்கள் என்று பிறரிடம் மட்டும் கூறுவோம். ‘சில்ட்ரன்’ (Children) என்றே அழைப்பது வழக்கமாகி விட்டது.

அதனால் தேர்வு சமயங்களில் பள்ளிக்கு வரவில்லையென்றால் மனது கஷ்டமாகி விடும். உடல்நலம் குறித்து விசாரிப்போம். நிறைய நாட்கள் வராமல் போனால், பிள்ளைகள் வீட்டிற்கு நேரில் சென்று பார்ப்போம். அப்படியொரு தடவை, வெகு நாட்கள் பள்ளிக்கு வராத பெண்ணை பார்க்கச் சென்றோம். அவளின் தோழிகள் மூலம் வீட்டைக் கண்டு பிடித்து தேடிச்சென்றோம். அது உண்மையில் வீடு என்று சொல்ல முடியாது. பாதி ஓலை வேயப்பட்ட குடிசை. பாதி சூரிய வெளிச்சம் வீட்டின் தரையில் காணப்பட்டது.

நன்கு வாழ்ந்த குடும்பம்தானாம். தன் தாய் எப்பொழுது புற்று நோயால் பாதிக்கப்பட்டாரோ, அது முதல் அனைத்தும் மாறிவிட்டதாக மாணவி கூறினாள். தந்தையும் ஒரு தொழிற்சாலையில் நல்ல வேலையில் இருந்திருக்கிறார். அம்மாவால் எழுந்திருக்கக்கூட முடியாததால், அப்பாதான் அனைத்தையும் பார்க்க வேண்டியிருந்தது. நேரத்திற்கு அவரால் வேலைக்குச் செல்ல முடியாததால், வேலையை விட வேண்டியதாயிற்று. இரண்டு பிள்ளைகளின் படிப்பு மற்றும் உடல் நலமற்ற மனைவியின் மருந்து செலவுகளை சமாளிப்பதற்காக வீட்டின்அருகில் ஒரு டீக்கடையை தொடங்கியிருந்தார் அவள் அப்பா. பிள்ளைகள் வீட்டில் இருக்கும் நேரம் அவர் கடையை கவனித்து வந்தார்.

பிள்ளைகள் தாய்க்கு வேண்டிய அனைத்தையும் கவனித்துக் கொண்டனர். பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் நேரத்தில், அவர் கடையை மூடிக்கொண்டு மனைவியைப் பார்க்க வந்துவிடுவாராம். இதுதான் அவர்கள் வீட்டின் நிலையாம். கடந்த ஒரு மாதமாக அம்மாவின் நிலை மோசமாக இருந்ததால், அவள் பள்ளிக்கு சரியாக வரமுடியவில்லையென்று காரணத்தைக் கூறி கண்ணீர் வடித்தாள்.

மேலும் தன் தங்கை சிறிய பெண் என்பதால் அவள் கஷ்டப்படக்கூடாது என்று நினைத்து, அவளுக்கு வேண்டியதை செய்து தந்து, அம்மா படும் கஷ்டத்தால் அவள் பாதிக்கப்படக்கூடாது என்று கருதி அவளை தயார் செய்து பள்ளிக்கு அனுப்பிக்கொண்டிருந்தாள். தான் தாயின் அருகிலேயே இருந்து அனைத்தையும் கவனித்துக்கொள்வதாக எங்களிடம் சொன்னாள்.

அவளின் வார்த்தைகளுக்கு யார்தான் மறுப்பு சொல்ல முடியும்? நிலைமையைக் கண்ணால் பார்த்தபின், எங்களால் வாயைத் திறக்க முடியவில்லை. ‘குருவித்தலையில் பனங்காய் வைப்பதுபோல’ என்பார்களே! அது இதுதானோ? பதினாலு,-பதினைந்து வயதில் இவ்வளவு பொறுப்புக்களா? அனைவருக்கும் ஆறுதல் சொல்லிவிட்டுத் திரும்பினோம். அனைத்து விஷயங்களையும் தலைமையாசிரியர் மற்றும் தாளாளருடன் கலந்து பேசினோம். அந்த மாணவிக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி அடுத்த ஆண்டு வேண்டுமானால், அரசுத் தேர்வுக்கு அனுப்பலாமா என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தோம். இதற்கிடையில்தான் வினோதம் நடைபெற்றது.

தினமும் காலையில் கடவுள் வழிபாடு நடந்து முடிந்தவுடன், அன்றைய செய்திகள் சொல்லப்படும். பிள்ளைகள் யாருக்கேனும் பிறந்தநாளாக இருப்பின், வாழ்த்துக்கள் கூறப்படும். அதன்பின் பள்ளியில் இருக்கும் ஆசிரியரோ, பிள்ளைகளோ, பணிபுரிபவர்களோ யாருக்கு உடல்நலம் சரியில்லையென்றாலும், கூட்டுப்பிரார்த்தனை நடக்கும். இதுபோல், அன்று அந்த மாணவிக்காக, அவள் தாய் நலம் பெற வேண்டியும் பிரார்த்தனை நடத்தப்பட்டது. முதல் முதலாக மாணவியின் சோகக்கதையைக் கேட்ட சக வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அனைவர் முகத்திலும் வருத்தம் தெரிந்தது. அனைவருமே உதவி செய்ய முன்வருவது போன்று தோன்றியது. ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் முடிந்த அளவில் பணம் போட்டு அந்த மாதச் செலவிற்கான தொகையை வழங்கினோம். நல்ல மாணவி என்பதால் அவளுக்கும், அவள் தங்கைக்கும் பணம் கட்டத் தேவையில்லையென்று பள்ளி மேலிடம் சலுகை தந்தது.

ஒரு எட்டாம் வகுப்பு மாணவன் மறுநாள் தன் தாயுடன் வந்து, தலைமையாசிரியரைப் பார்த்தான். அவன் தாய் ஒரு புற்றுநோய் மருத்துவராம். தாயும், தந்தையும் சேர்ந்து ஒரு ஆஸ்பத்திரி நடத்தி வருவதாகவும் சொன்னான். முதல் நாள் கூட்டுப்பிரார்த்தனை நடந்ததை அவன் வீட்டில் சென்று கூறியிருக்கிறான். அதன்பலன், தான் மாணவியின் தாய்க்கு உதவி செய்யலாமா என்று கேட்பதற்காகவே வந்திருக்கிறார் அவன் தாய்.

தலைமையாசிரியர், கடவுளே நேரில் வந்து உதவி செய்யக் காத்திருப்பதுபோல் உணர்ந்தார். ஒரு சில ஆசிரியர்கள் மூலம் மாணவி வீட்டுக்கு அனைத்து விஷயங்களும் சொல்லப்பட்டன. ‘ஆம்புலன்ஸ்’ மூலம் மாணவியின் தாய் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லப்பட்டு, சிகிச்சைகள் நல்லபடியாகத் தொடங்கின. அவர்கள் தாயை பார்த்துக் கொண்டதால், பிள்ளைகள் பள்ளிக்கு வர ஆரம்பித்தனர். மாணவியின் தந்தைக்கும் நல்ல நேரம் வந்துவிட்டதுபோல் தோன்றியது.

இந்த ஆண்டுடன் பள்ளியின் பழைய ‘கேன்டீன்’ ஒப்பந்தம் முடிவடைவதால், அடுத்த ஆண்டு அவர் ‘கேன்டீன்’ நடத்தலாம் என்று கூறினார்கள். ‘புயலாக’ அடித்துக்கொண்டிருந்த ஒரு குடும்பத்தில் ‘தென்றல்’ வீச ஆரம்பித்தது என்று சொன்னால், அதற்குக் காரணம் அந்த எட்டாம் வகுப்பு மாணவன்தான். மாணவிபத்தாம் வகுப்பில் படித்தாலும், அந்த மாணவனின் கருணை உள்ளம் புரிந்த அவன் பெற்றோர் உதவ முன்வந்தது என்பது ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்தான். பிறர் குறைகளையே பேசும் நாம், இத்தகைய சம்பவங்களை மறக்கலாமா?

கற்பித்தல் மட்டுமின்றி, ஒரு குடும்பத்திற்கு நம்மால் முடிந்ததை செய்யத் துணிந்தோம் என்பது ஒரு ஆத்ம திருப்தி தரும் விஷயம். பொறுமையின்றி, அந்தப் பெண்ணிடம் கோபம் கொண்டு பள்ளிக்குச் சரியாக வராததால்,தேர்வு எழுதக்கூடாது என்று சொல்லியிருந்தால், இவை எதுவுமே நடந்திருக்காது. அந்தப் பெண்ணைப் பார்த்து, பெற்றோரிடம் அதுபற்றி கலந்து பேசலாம் என முடிவெடுத்துச் சென்றதால், விஷயங்கள் தெரிய வந்தன. குடும்ப சூழல் தெரியாமல் எந்த ஒரு பிள்ளையையும் மனம் நோகப் பேசக்கூடாது என்பது ஆசிரியர்களின் கருத்தாகும்.

ஒரு வீட்டு சூழல் பிள்ளைகளுக்கு சந்தோஷமாக அமையாவிட்டால், அவன் நடவடிக்கைகள் வெளி உலகில் மாறுபட்டிருக்கும். உதாரணத்திற்கு, ஒரு பையனுக்கு வீட்டில் போதிய சந்தோஷமும், கருத்துக்களைக்கூற சுதந்திரமும் கிடைக்கவில்லைஎன்றால், அவன் வெளியில் நண்பர்களுடன் நிறைய நேரம் செலவிட நினைப்பான். அப்பொழுது, அந்த நண்பர்களின் குணாதிசயங்கள் அவனிடமும் பிரதிபலிக்கும். இதுதான் வறுமையில் ஒரு மாதிரியும், பின்னணி சரியில்லாதபோது வேறு மாதிரியும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது எனலாம். எதுவும் பருவ மாற்றக் காலங்களில், நம் அன்பும், பரிவும், ஊக்குவித்தலும் சிறந்த ‘விட்டமின்கள்’ போன்று அமையும்.

அந்தப் பெண்ணுக்குத் தன் படிப்பு பாதிக்கப்பட்டு, மீண்டும் கிடைத்ததுகூட அவ்வளவு மகிழ்ச்சி தரவில்லை எனலாம். தன் தாய் இன்றோ, நாளையோ என்ற ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டது அவளுக்கு அப்படியொரு ஆனந்தத்தைத் தந்தது. சகோதரிகள் நன்கு படித்து, குடும்பத்தை பார்த்துக் கொண்டதுடன், தங்கள் எதிர்காலத்திற்கும் வழிவகுத்துக் கொண்டனர். ஒரு சில ஆண்டுகள் அவள் தாய் தெம்புடன் இருந்ததாக சொன்னாள். அன்று அவள் வீட்டிற்குப் போகாமலிருந்தால், இத்தகைய அனுபவங்கள் எங்களுக்குக் கிடைத்துஇருக்காது. அவளும், அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை என்று மட்டும் சொல்லியிருந்தால் இவ்வளவு விஷயங்கள் எங்களுக்குப்புரிய வாய்ப்பில்லை. அவர்களின் நல்ல நேரத்திற்கோ, நாம் புதுமையான அனுபவத்தை பெறுவதற்கோதான் கடவுள் அந்தப் பெண்ணை நீண்ட விடுப்பு எடுக்க வைத்தாற்போல் தோன்றியது. ஒவ்வொன்றையும் அலசி ஆராயும்பொழுதுதான், அதன் உண்மை நிலை தெரிய வருகிறது.

நாம் பாடப்புத்தகத்தைத்தான் கற்பிக்கிறோம். ஆனால் எத்தனை விதமான வாழ்க்கைக் கல்வியை பிள்ளைகளின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்கிறோம் என்பதுதான் ஆச்சரியமான விஷயம். இதுபோன்ற அனுபவங்கள், நம் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் அடித்தளம் அமைத்துத் தருகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. கற்பித்துவிட்டுப் போகாமல், மாணவர் நலனில் அக்கறை காட்டுவதுதான் குருவின் கடமை.

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாஸன்

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!